பசியென்பது இனி இல்லை!



ஆஹா வந்தாச்சு ஆபரேஷன் சுலைமானி

நம்மைச் சுற்றியிருக்கும் ஹோட்டல்களில் தினமும் டன் கணக்கில் உணவுகள் மீதமாகி அதைக் குப்பையில் கொட்டுவது சகஜம். ஆனால் அதே ஹோட்டல்களில் பசித்த ஏழை பாழைகள் ஒரு வாய் சோறு கேட்டு நின்றால் கொடுக்க மாட்டார்கள். இந்தக் கொடுமையைக் கிட்டத்தட்ட களைந்து விட்டிருக்கிறது கேரளாவின் கோழிக்கோடு நகரம். ‘பசி, பட்டினியை அறவே ஒழிப்போம்’, ‘இல்லாதவருக்கு இலவச உணவை மரியாதையாகக் கொடுப்போம்’ என்ற கோஷத்தோடு அங்கே வெற்றி பெற்றிருக்கிறது ‘ஆபரேஷன் சுலைமானி’ திட்டம்!



எல்லோருக்கும் உணவு தரும் திட்டமென்றால் ‘அட்சயம்’ என்றோ ‘அன்னபூர்ணா’ என்றோதானே பெயர் வைப்பார்கள். அதென்ன தீவிரவாதிகளைப் பிடிக்கப் போவது மாதிரி ‘ஆபரேஷன் சுலைமானி’? ‘‘இந்தக் கோழிக்கோடு பகுதியோட அடையாளம்ங்க சுலைமானி. காலம் காலமா அராபிய,  போர்ச்சுகீசிய, சீன, ரோமானிய கலாசாரங்களின் சங்கம இடம்தான் கோழிக்கோடு. திருப்தியா சாப்பிட்ட பிறகு அந்த உணவு ஜீரணமாகறதுக்காக குடிக்கிற ஒருவகை டீ டிகாக்ஷனைத்தான் ‘சுலைமானி’ன்னு சொல்வாங்க. திருப்தியான சாப்பாட்டை இது குறிக்குது. கோழிக்கோடு மாவட்டத்துல யாரும் பசியோட இருக்கக்கூடாதுங்கறதுதான் இந்த ‘ஆபரேஷன் சுலைமானி’யின் நோக்கம்!’’ என்கிறார் கோழிக்கோடு மாவட்ட ஹோட்டல்  உரிமையாளர்கள் சங்கச் செயலாளர் முஹம்மத் சுஹைல்.



இந்தச் சங்கமும் கோழிக்கோடு நகராட்சியும் இணைந்து செயல்படுத்தி வரும் திட்டம்தான் இது. பசியோடு இருப்பவர்கள் இங்கு யாசகம் செய்யத் தேவையில்லை. ஒரு கூப்பனை வாங்கினால் போதும்! கோழிக்கோடு கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகங்கள், கிராம ஊராட்சி அலுவலகங்கள் ஆகியவற்றில் ஆபரேஷன் சுலைமானி இலவசக் கூப்பன்களை விநியோகம் செய்கிறார்கள். மாவட்டம் முழுக்க சுமார் 50 ஹோட்டல்கள் இப்போதைக்கு இந்தக் கூப்பனை ஏற்கின்றன. அந்த ஹோட்டல்களில் இந்தக் கூப்பனை மட்டும் கொடுத்தால் போதும்... 40 ரூபாய் மதிப்புள்ள மதிய உணவு இலவசமாகக் கிடைக்கும். ஏழைகளின் பசியைப் போக்குதல், உணவு வீணாக்கப்படுவதைத் தடுத்தல் என ஒரு கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கிறது இந்த ஸ்மார்ட் ஐடியா!

‘‘மலையாளத்தில் ‘உஸ்தாத் ஹோட்டல்’ படம் சமீபத்தில் ஹிட்டானது உங்களுக்கே தெரிஞ்சிருக்கும். அதில் வரும் ஹோட்டல் முதலாளி, ஜாதி, மதம், மொழி எல்லைகளைத் தாண்டி, தன் வருமானத்துல ஒரு பகுதியை ஏழைகள் பசி தீர்க்க செலவு செய்வார். பசியின் தாக்கத்தை சரிவரச் சொன்ன அந்தப் படத்தில், ‘சுலைமானி டீயில் கொஞ்சம் அன்பும் சேர்த்துத் தரணும்’னு ஒரு வசனம் வரும். அதுதான் எங்களுக்கு இன்ஸ்பிரேஷன். எங்க சங்கத்தில் இணைஞ்சிருக்குற ஹோட்டல் முதலாளிகள்ல தர்ம சிந்தனை உள்ளவங்க அவங்க லாபத்தில் இருந்து ஒரு பகுதியை ஆபரேஷன் சுலைமானிக்கு ஒதுக்குறாங்க. அதுக்காக, காசு கொடுத்து சாப்பிட வர்ற மக்கள் மேல இந்த சுமையை சுமத்துறதில்ல. காசு கொடுத்து சாப்பிடுறவங்களுக்கு என்ன மரியாதையைக் கொடுப்போமோ, என்ன உணவைக் கொடுப்போமோ, அதேதான் சுலைமானி கூப்பன் கொண்டு வர்றவங்களுக்கும். இதனால உணவு வீணாகுறதும் கட்டுக்குள்ள வருது. வீணாகிற உணவைக் கொண்டு பசிச்சவங்களுக்கு உதவலாமேங்கற எண்ணம் ஒண்ணும் பெரிய தர்ம சிந்தனை கிடையாது. ரொம்ப சாதாரண மனிதநேயம்தான். அந்த மனிதநேயத்தை எங்ககிட்ட இருந்து வெளிக்கொண்டு வந்த பெருமை கோழிக்கோடு மாவட்ட கலெக்டர் பிரசாந்துக்கே சொந்தம்!’’ என ஹோட்டல் முதலாளிகள் சார்பாகக் கை காட்டுகிறார் முஹம்மத் சுஹைல்.

இந்தத் திட்டத்தில் ‘குடிப்பவர்களுக்கு இடமில்லை’ என்ற கறார் கண்டிஷனைத்தான் எடுத்ததும் முன்மொழிகிறார் கலெக்டர் பிரசாந்த். ‘‘அரசு அலுவலகங்களில் மக்களை நன்கு தெரிந்த அலுவலர்கள் இந்தக் கூப்பனை வழங்குவதால், குடித்திருப்பவர்களை இனம் கண்டு ஒதுக்கிவிடுகிறார்கள். கூப்பன் பெறுகிறவர்களின் பெயர், முகவரி போன்றவை கேட்டுப் பெறப்படுகின்றன. தொடர்ந்து இலவச சாப்பாட்டுக்காக ஒருவர் வந்தால், அவர் குடும்பத்தில் என்ன பிரச்னை எனப் பார்த்து நிரந்தரத் தீர்வு ஒன்றைத் தரவும் திட்டம் இருக்கிறது. புதிகாக ஓர் ஊருக்கு வருகிறவர்கள் தங்கள் உடைமைகளைத் தொலைத்துவிட்டால் செய்வதறியாது பட்டினியில் கிடப்பார்கள். அப்படிப்பட்ட கஷ்டம் கோழிக்கோட்டில் இனி கிடையாது!’’ என்கிற பிரசாந்த், சினிமா ஆர்வம் உள்ளவர். மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவரோடு இணைந்து மூன்று படங்களுக்கு தற்போது திரைக்கதை எழுதி வருகிறார். இந்தத் திட்டத்தைக் கூட ‘உஸ்தாத் ஹோட்டல்’ படத்தைக் கொண்டே பிரமோட் செய்திருக்கிறார். திலகனும், துல்கர் சல்மானும் கையில் சுலைமானி கிளாஸ் வைத்திருக்கும் ஸ்டில்கள் இதற்கு பயன்படுத்தப்பட்டன. இந்தத் திட்டத்தின் துவக்கவிழா அழைப்பிதழை கூகுள் பிளஸ்ஸில் ஷேர் செய்திருந்த துல்கர், இதற்கு தன்னுடைய மனப்பூர்வமான ஆதரவையும் பதிவு செய்திருந்தார்.

‘‘கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து ஹோட்டல்களையும் இதில் இணைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். மேலும், இந்தத் திட்டத்தை அரசு மருத்துவமனையில் இருக்கும் உடல் நலம் குன்றியவர்கள், கூப்பன்கள் வாங்க முடியாமல் தவிக்கும் முதியவர்கள் என அனைவருக்கும் கொண்டு சேர்க்கும் எண்ணமும் இருக்கிறது. அப்போதுதான் கோழிக்கோடு மாவட்டத்தில் யாருமே பட்டினி கிடக்கக் கூடாது என்ற நோக்கம் நிறைவேறும்!’’ என்கிறார்கள் ஹோட்டல் சங்கத்தினர் ஒரே குரலில். இன்னும் ஏங்க அமெரிக்காவைப் பார்த்து பெருமூச்சு விட்டுக்கிட்டு?
- பிஸ்மி பரிணாமன்

கலக்கல் கலெக்டர்!

பிரசாந்த் என்றால் கோழிக்கோடு மக்களுக்கு இப்போது செல்லப் பிள்ளை மாதிரி. ‘கலெக்டர் கோழிக்கோடு’ என்ற பெயரில் இயங்கும் இவரின் ஃபேஸ்புக் பக்கத்தை 77 ஆயிரம் பேர் பின்தொடர்கிறார்கள். அவர்கள் பதிவு செய்யும் குறைகளை பிரசாந்த் உடனடியாகக் கவனிக்கிறார். அது தவிர, இருக்கும் இடத்தில் இருந்தே மக்கள் தன்னைத் தொடர்புகொள்ள Collector, Kozhikode என்ற பெயரில் மொபைல் ஆப் ஒன்றையும் உருவாக்கிக் கொடுத்திருக்கிறார் இவர். பிரச்னைகளைத் தீர்ப்பதில் இவரின் ஹை-டெக் யுக்தி அபாரமானது. உதாரணத்துக்கு, கோழிக்கோடு பேருந்து நிலையத்தில் உள்ள கழிப்பறையை  எத்தனை பராமரித்தாலும் மக்கள் அதைப் பயன்படுத்தாமல், அதன் அருகே சிறுநீர் கழிக்கும் நிலை இருந்தது. பிரசாந்த் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இந்தக் கழிப்பறையின் படத்தைப் போட்டு, ‘இதன் அருகே சிறுநீர் கழிப்பவர்களை போட்டோ எடுத்து அனுப்புகிற மூன்று பேருக்கு பரிசு’ என அறிவித்துவிட்டார். கேமராவோடு சிலர் அந்தப் பக்கம் அலைவதைப் பார்த்த மக்கள், பொது இடத்தில் சிறுநீர் கழிப்பதே இல்லை. இதற்காக அறிவிக்கப்பட்ட ‘திரிமூர்த்தி போட்டோ கான்டஸ்ட்’ என்ற போட்டி கேரள நெட்டிசன்ஸ் மத்தியில் செம பாப்புலர்.

அதேபோல அரசு மருத்துவமனைகளில் படுக்கை விரிப்புகள், கட்டில்கள் போன்ற அடிப்படைப் பொருட்கள் பற்றாக்குறையாய் இருப்பதை, ஃபேஸ்புக் மூலமே வெளிப்படுத்தி அதன் மூலம் நன்கொடைகள் பெற்றுத் தந்தார் பிரசாந்த். ‘‘இப்படி நன்கொடை பெறக் கூடாது. அரசு மருத்துவமனைக்கு அரசுதான் இதற்கு செலவு செய்ய வேண்டும்’’ என எதிர்ப்புக் குரல்கள் கிளம்பின. ‘‘அரசு செலவு செய்வதும் மக்களிடம் இருந்து பெற்ற வரிப்பணம்தான். மக்களே உதவ முன்வரும்போது அதைப் பயன்படுத்திக்கொள்ளக் கூடாது என்று எந்த விதியும் இல்லை’’ என பதிலடி கொடுத்தார் பிரசாந்த். நலிந்தவர்களுக்கு உதவி செய்ய முன்வரும் நல்ல மனங்களையும், உண்மையாக உதவி தேவைப்படும் மக்களையும் இணைப்பதுதான் பிரசாந்தின் முக்கியமான முயற்சியாக இருந்திருக்கிறது. ‘ஆபரேஷன் சுலைமானி’யிலும் நடந்திருப்பது அதுதான்!