பெண்களை மதிப்பேன்... ஆனால் நம்பமாட்டேன்!



சிம்புவின் பேட்டிக்கு நம்பிப் போகலாம். மனசு விட்டுப் பேசுவார். அதிரடியாக விஷயங்கள் சிக்கும். வெட்டு ஒண்ணு, துண்டு ரெண்டு ரகம்தான். ‘ரொம்ப உண்மையா பேசுறாப்ல’ என கணத்தில் தோன்றிவிடும். இந்தத் தடவை ‘வாலு’ ரிலீஸ் பக்கத்தில் இருக்கிறது. பதற்றமே இல்லாமல் கொஞ்சம் அந்தரங்கமும் பேசினார்.‘‘இரண்டு வருஷம் கழித்து ‘வாலு’ ரிலீஸ்... சந்தோஷமா இருக்கா?’’

‘‘ ‘வாலு’ லவ் ஸ்டோரிதான். லோக்கலான ஒரு பையன், காதலில் எப்படி ஜெயிக்கிறான்னு வழக்கமான கதைதான். ஆனால், எரிச்சல்படுத்தாத சாஃப்ட் கதை. வசனம் நல்லாயிருக்கும். காட்சிகள் கடுப்பேத்துகிற மாதிரி நிச்சயம் இருக்காது. டைரக்டர் விஜய்சந்தர்க்கு மரியாதை வரும். என்ன...

இரண்டு வருஷம் எடுத்ததால என்னோட, சந்தானத்தோட, ஹன்சிகாவோட ஹேர்ஸ்டைல் எல்லாம் கொஞ்சம் மாறி மாறி வரும். மத்தபடி ஜாலியான படம். என் தம்பி குறள்  ‘இது நம்ம ஆளு’க்காக பாடல்களைக் கொடுக்க தாமதிக்கிறான்னு ஒரு செய்தி வேற. நான்தான் அவன்கிட்ட, ‘ ‘வாலு’விற்குப் பின்னாடிதான் ‘இது நம்ம ஆளு’ வருது. அப்ப ஃபைன் ட்யூன் பண்ணிக்கலாம்’னு சொல்லியிருக்கேன். குறள் எப்பவோ ட்யூன்ஸ் கொடுத்தாச்சு. இப்ப க்ளியரா?’’

‘‘லேட்டா ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வர்றீங்களா..?’’‘‘இப்ப யாரும் அப்படிச் சொல்றதில்லை. காலையில் கௌதம்மேனன் ஷூட்டிங், நைட் செல்வராகவன் ஷூட்டிங் போறேன். திடீர்னு ஒருநாள் கௌதம் ‘சன்ரைஸ் காட்சிகள் எடுக்கணும்’னு சொன்னார். விடியற்காலை நாலு மணிக்கே கிளம்பிப் போயிட்டேன். கௌதம் படம் 60% முடிச்சிட்டேன். செல்வா படம் 25% முடிஞ்சிடுச்சு. ‘இது நம்ம ஆளு’ ஓவர், ‘வாலு’ ஃபினிஷ் பண்ணிட்டேன். ஷூட்டிங் போகாம இதெல்லாம் எப்படி நடக்கும்? சிம்புன்னா என்ன வேணும்னாலும் சொல்லலாம்னு ஆகிப்போச்சு சார். அதான் மேட்டர்!’’

‘‘இப்படி வந்தோம்... இதெல்லாம் செஞ்சோம்... இப்படி வளர்ந்தோம்னு ஒரு திட்டம் வச்சிக்கறதில்லையா?’’‘‘ம்ஹும்... நம்மகிட்ட திட்டமே கிடையாது. என்னோட திட்டமே, திட்டம் இல்லாமல் இருக்கிறதுதான். ஆட்டுக்கூட்டம் மாதிரி மந்தையோடு மந்தையா என்னால போக முடியாது. வளர்ந்து, சோறு தின்னு, பிள்ளை பெத்து, சொத்து சேர்த்து, பிள்ளைக்கு சேர்த்து வச்சு... என்னால முடியாது! ரெண்டு வருஷம் கேமரா வெளிச்சமே படாம இருந்தேன் பாருங்க... அதான் சிம்பு. என் வயதில் சினிமாவை இவ்வளவு தெரிஞ்ச யாரையாவது என் முன்னாடி கூட்டிட்டு வாங்க பிரதர்!

 நம்மை சமநிலையில் வச்சுக்கணும். அப்படி இருந்தால் நல்லது நடந்தாலும், கெட்டது நடந்தாலும் எந்த பாதிப்பும் இருக்காது. படங்களைக் கூட எனக்காக பண்றதில்லை. கௌதமுக்காக ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ பண்ணினேன். என் அப்பா, அம்மாவுக்காக ‘இது நம்ம ஆளு’ பண்றேன். ‘வாலு’ படத்தால் புரொடியூஸர் சந்தோஷப்பட்டால் எனக்கு சந்தோஷம்!’’‘‘மூணு காதல் செய்து தோல்வியைத் தாங்கியிருக்கீங்க... இது கூட சமநிலைதானா?’’

‘‘ஒரு விஷயம் நடந்தா அதன் பலனை வச்சு நாம பயன் அடைஞ்சுக்கணும். பாருங்க, கோபத்தைத் தப்பா சொல்றோம். ஆனா, கோபப்பட்டு முடிச்சிட்டா உடம்புக்கு நல்லதாம். நான் இந்த காதல் முறிவுகளை விரக்தியா எடுத்துக்காம பாஸிட்டிவா மாத்திக்கிட்டேன். புரிதல் கிடைச்சது. நல்லா உழைச்சிட்டு, பணம் சேர்த்து, முட்டி கழண்டு சம்பாதிச்ச காசை ஆஸ்பத்திரிக்கு கொடுத்திட்டு செத்துப் போகவா நான் பொறந்திருக்கேன்?

 ராஜ்ஜியத்தை விட்டு வெளியே வந்ததாலதானே புத்தருக்கு வாழ்க்கை தெரிஞ்சது? பொறந்தவங்க ஒரு நாள் ெசத்துருவாங்க என்கிற சாதாரண உண்மைகூட அவருக்குத் தெரியாம இருந்ததே..! இதெல்லாம் அனுபவம். இதெல்லாம் என்னைப் பதப்படுத்தியிருக்கு. எனக்கு யார் மீதும் கோபம் கிடையாது. ‘இவங்க இப்படி’ன்னு எனக்கு யார்மீதும் ஜட்ஜ்மென்ட் கூட கிடையாது. வாழ்க்கையை நல்லா பார்க்கத் தெரியாதவங்கதான் என்னைப் பார்த்து பொறாமைப்படுவாங்க. நான் அந்தச் சமயம் கொஞ்சம் வருந்தியிருக்கேன். ஆனா உடனே சகஜமாகிடுவேன்!’’ ‘‘இப்ப உங்க ஸ்டேட்டஸ் சிங்கிள்தானாக்கும்..?’’

‘‘சமயங்கள்ல எனக்கு யாருமே தேவைப்பட மாட்டாங்க. சிம்பு அன்பை வெளியில் தேடிக்கிட்டு இருந்தான். அப்புறம்தான் தெரிஞ்சது... அன்பே நாமதான்னு! இப்ப அவசரம் இல்லை. ஏன்னா, இந்தக் காதல் எதுவும் நடக்கக் கூடாதுன்னு இருந்திருக்கு. நயன்தாராவோ, யாரோ... யார் மீதும் நான் கடுப்பைக் காட்டினதில்லை. மூஞ்சியைத் திருப்பிக்க மாட்டேன். யார் வீட்டு வாசல்லயும் காரைக் கொண்டு இடிச்சது கிடையாது. நான் ரொம்ப டீசன்ட். பெண்களுக்கு மரியாதை கொடுப்பேன்.

ஆனா அவங்களை நம்பமாட்டேன். இப்பல்லாம் நாம ரொம்ப நல்லபடியா இருந்தால் கூட பெண்களுக்குப் பிடிக்கிறதில்லை. அதனால் கூட பிடிக்காம இருந்திருக்கலாம். இப்ப காதலிக்கலைன்னா மூஞ்சில ஆசிட் ஊத்துறான்... சதக் சதக்னு வயித்துல குத்துறான். எனக்குப் புரியல! இப்பப் பாருங்க... மூணு காதல்கள் பண்ணிட்டு அருமையா நல்ல பிள்ளையா உட்கார்ந்திருக்கேன். இளைஞர்கள் என்னை உதாரணமா எடுத்துக்கணும். சிம்புவைப் பார்த்து கத்துக்கச் சொல்லணும். நான் என் காதலிகள் யாரையும் குறைச்சுப் பேசினதில்லை. காதலை சீரியஸா எடுத்துக்காதீங்க. எனக்கு வலி தெரியும். புரியும். உங்க எல்லோருக்கும் நான் உதாரண புருஷனா இருக்கேன்!’’

‘‘இவ்வளவு சின்ன வயதில் புகழ், பணம்னு எல்லாம் கிடைச்சிடுச்சே... என்ன நினைக்கிறீங்க?’’‘‘சந்தோஷம்தான். என் கூட வந்த எல்லாரும் இரண்டாம் கிளாஸ் படிக்கிறாங்க. நான் ஒன்பதாம் கிளாஸ் படிக்கிறேன். சந்தோஷமாதான் இருக்கு. ஆனா, ரெண்டாம் கிளாஸ் படிக்கிறவன் ஒன்பதாம் கிளாஸ் படிக்கிறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா? புரிஞ்சுக்குங்க..!’’

‘‘பெண்களே இல்லாமல் உங்களால் வாழ முடியுமா?’’ ‘‘பெண்கள் இல்லாமல் யாரால் வாழ முடியும்? ஆய கலைகள் 64 எதுக்கு இருக்கு? காமசூத்ரா என்ன சாதாரண புத்தகமா? கடவுளைக்கூட சிவன், சக்தின்னுதானே பிரிக்கிறாங்க. அதையெல்லாம் புரிஞ்சுக்கணும். இன்டர்நெட் வந்திடுச்சு. முன்னாடியெல்லாம், அடுத்த பக்கம் என்ன நடக்குதுனு தெரியாது. இப்ப எல்லாமே பப்ளிக் ஆகிடுச்சு. ஒரு நாணயம் மாதிரிதான். ஒரு பக்கம் குளிர்; மறுபக்கம் சூடு. இதுதான் சிவன் - சக்தி. இதில், கனெக்ட் ஆகலைன்னா கடவுள்கிட்ட போக முடியாது. இப்படி இருக்க, நீங்க ஒரு பெண்ணை எப்படி வெறுப்பீங்க? காதல் சக்ஸஸ் ஆகலைன்னா பெண்களை வெறுக்க முடியுமா? அதெல்லாம் முட்டாள்தனம். நான் நிச்சயம் முட்டாள் கிடையாது!’’

‘‘ஒரு பொண்ணு வந்தால் உங்களை மாத்தி, சரியான நேரத்திற்கு தூங்க, சாப்பிட, ஷூட்டிங் போக வைக்க முடியுமோ..?’’‘‘பொண்ணு எதுக்கு? என்னை மாத்திக்க எனக்கே தெரியும்! ‘நீயென்ன வந்து மாத்தறது’ன்னு கேட்பேன். அப்படி நம்மளைப் பிடிச்சு இழுக்கிற பொண்ணு வேலைக்கே ஆகாது. அப்படி யாரும் என்கிட்ட வர முடியாது!’’‘‘நீங்க ஒரு பொண்ணை எப்படிப் பார்க்கறீங்க? வெறும் போகப் பொருளாகவா? அல்லது...’’

‘‘ஆண்களுக்கு  ப்ராப்ளம் என்னன்னா, ஒரு பொண்ணைப் பார்த்த உடனே ஒண்ணு `கரெக்ட்’ பண்ணணும்; அல்லது ஃப்ரண்டாகணும்; அல்லது வெளியே கூட்டிப் போகணும்; இல்லாட்டி கல்யாணம் பண்ணிக்கணும்னு டிசைட் பண்ணிடுவாங்க. நான் எந்தப் பொண்ணுகிட்ட பேசினாலும் பிளாங்க்கா, நார்மலா பேசுவேன். நாம மனசுக்குள்ளே ஒரு நினைப்பை வச்சுக்கிட்டு பேசினா அந்தப் பொண்ணு மனசுல என்ன இருக்குன்னே நமக்குத் தெரியாது.

நாம் ஃப்ரீயா இருந்தா எதிராளியைப் பத்திப் புரியும். அந்தப் பொண்ணுகிட்ட ஃப்ரண்டாகிடுவேன். அந்தப் பொண்ணு சிம்புவோட சந்தோஷமா பழகணும்னு எதிர்பார்த்தா, அதுக்கு ஏத்த மாதிரி அந்தப் பொண்ணுகிட்டே இருப்பேன். கல்யாணம் பண்ணிக்கணும்னு விரும்பினா, `ஸாரி’ன்னு விட்டுவிடுவேன். உண்மையா பழகுவேன். எப்படியாவது உஷார் பண்ணணும்னு நினைக்கமாட்டேன்.

 படத்தில்தான் சிம்பு பொண்ணுங்க பின்னாடி போவான். நிஜ வாழ்க்கையில கிளியோபாட்ராவா இருந்தா கூட, எவ பின்னாடியும் போக மாட்டான். அலையுறது, தேவையில்லாம பேசறதுன்னு செய்யவே மாட்டேன். நான், நானாகவே இருப்பேன். இப்படி இருந்தால் எந்தப் பொண்ணாக இருந்தாலும் அவங்களுக்கு உங்களைப் பிடிக்கும்!’’

- நா.கதிர்வேலன்