மது அடிமைகளாக மாறும் ஊழியர்கள் !



டாஸ்மாக் அவலம்

அந்தக் காட்சிகளைப் பார்த்த அத்தனை நெஞ்சங்களும் நொறுங்கி விட்டன. டம்ளரைக் கவிழ்த்து பீர் குடித்துவிட்டு, மலங்க மலங்க விழித்த அந்தக் குழந்தையின் விழிகளில் தேசத்தின் எதிர்காலம் தெளிவாகத் தெரிந்தது.

அடுத்த சில நாட்களில், காதலில் தோல்வியுற்ற கோவை மாணவி அளவுமீறிக் குடித்துவிட்டு போதையில் தள்ளாடித் திரிந்த காட்சியையும் தமிழகம் தரிசித்தது. சமூகத்தின் உட்புறத்தில் புரையோடியிருக்கும் ஒரு பேரவலத்தின் சிதறிய துளிகளே இந்தக் காட்சிகள்.
 
குழந்தைக்கு சத்துணவு தந்து, கல்வி தந்து, வேலைவாய்ப்பை உருவாக்கித் தர வேண்டிய அரசு... புட்டி புட்டியாக மதுவை ஊற்றுகிறது. முன்பு 13 வயதில் குடிக்கப் பழகிய பிள்ளைகள் இப்போது 5 வயதிலேயே மதுப்புட்டியின் ஸ்பரிசம் பெறுகிறார்கள். சீருடையோடு மதுபோதையில் மயங்கிக் கிடக்கும் மாணவர்கள்... ட்ரவுசரோடு மதுக்கடை வரிசையில் நிற்கும் சிறுவர்கள்...

சியர்ஸ் சொல்லி போஸ் கொடுக்கும் மாணவிகள்... இப்படி அதிர்ச்சி தந்த காட்சிகள் இன்று இயல்பாகி விட்டன. இப்படி எந்த வெளிச்சத்திற்கும் வராமல், மதுவின் கோரப் பிடிக்குள் சிக்கி எதிர்காலத்தைத் தொலைத்து வருகிறார்கள் ஆயிரக்கணக்கான இளைஞர்கள். ‘அரசாங்க வேலை’ கனவில் டாஸ்மாக் கடைகளுக்குள் நுழைந்தவர்களில் பலர் இன்று மது அடிமைகளாக மாறிப்போன கொடூரம் இங்கு எவரின் கவனத்திற்கும் வரவில்லை.

1983 முதல் 2003 வரை டாஸ்மாக் நிறுவனம் மது வகைகளை மொத்த விற்பனை செய்து வந்தது. தனி நபர்கள் உரிமம் பெற்று மதுக்கடைகளை நடத்தினார்கள். அதில் முறைகேடுகள் நடந்ததாலும், அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாலும் 2003 முதல் டாஸ்மாக் நிறுவனமே சில்லறை விற்பனையைத் தொடங்கியது.

தமிழகமெங்கும் 6800 டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. கடைகளில் பணியாற்ற 36 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டனர். பட்டப்படிப்பு முடித்தவர்கள் மேற்பார்வையாளர்களாகவும், 10ம் வகுப்பு முடித்தவர்கள் விற்பனையாளர்களாகவும், 8ம் வகுப்பு முடித்தவர்கள் உதவி விற்பனையாளர்களாகவும் நியமிக்கப்பட்டார்கள்.

அரசுப்பணி ஆசையிலும், எதிர்காலத்தில் நிரந்தரம் செய்யப்படலாம் என்ற எதிர்பார்ப்பிலும் முதுகலைப் பட்டதாரிகள் உள்பட ஏராளம் பேர் இந்தப் பணிக்கு வந்தார்கள். ஆனால், வேலையில் சேர்வதற்கு முன்பு மதுவின் வாசனையே அறியாத அந்த இளைஞர்களில் பலரை இன்று கொஞ்சம் கொஞ்சமாக மது குடித்துக் கொண்டிருக்கிறது.

 ‘‘பலர் குடிநோயாளியாகி விட்டார்கள். சிலர் மனநோயாளியாகி விட்டார்கள். நிறைய பேர் தற்கொலை செய்து கொள்கிறார்கள். பலர் மது அடிமைகள் மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெறுகிறார்கள். பல குடும்பங்களில் விவாகரத்து நடக்கிறது. ஏராளமானோர் மதுவருந்தி வாகனம் ஓட்டி விபத்தில் சிக்கி இறந்து விட்டார்கள்...’’ என்றெல்லாம் சொல்லி மிரள வைக்கிறார்கள் டாஸ்மாக் ஊழியர் சங்கத்தினர்.

‘‘சமூகத்தில் டாஸ்மாக் ஊழியர்களைப் பற்றி நிறைய தவறான எண்ணங்கள் இருக்கின்றன. கூடுதல் விலை வைத்து விற்று கொள்ளை அடிப்பதாகச் சொல்வார்கள். நூறு சதவீதம் நேர்மையான மனிதர்களை இங்கே உட்கார வைத்தாலும், அவர்கள் கூடுதல் விலை வைத்துத்தான் விற்க வேண்டியிருக்கும். அந்த அளவுக்கு மேல்மட்டத்தில் முறைகேடுகள் புரையோடிக் கிடக்கிறது.

ஒவ்வொரு டேபிளுக்கும் அவரவர் மட்டத்திற்கு ஏற்றவாறு பணம் தர வேண்டியிருக்கிறது. கோடவுனில் இருந்து சரக்குப் பெட்டிகளை கடையில் வந்து இறக்கும் தொழிலாளி கூட பெட்டிக்கு 10 ரூபாய் கேட்கிறார்.

இதற்கெல்லாம் எந்தக் கணக்கும் இல்லை. முன்பு மதுக்கடைகளை நடத்தியவர்கள்தான் இன்று பார் நடத்துகிறார்கள். அவர்களுக்கும் ஒரு தொகை தரவேண்டும். இப்படி, டாஸ்மாக் ஊழியர்கள் பணம் காய்ச்சி மரங்களாக மற்றவர்களால் பார்க்கப்படுகிறார்கள்.

பணிக்கு வரும்போது, 80 சதவீதம் பேருக்கு குடிப்பழக்கம் இல்லை. மது வாடைக்கே வாந்தி எடுப்பவர்கள் கூட, அரசு வேலை என்ற எண்ணத்தில் சகிப்புத்தன்மையோடு இந்த வேலைக்கு வந்தார்கள். மது வாங்க வருபவர்கள் பேசுகிற பேச்சுகள், அதிகாரிகள் தருகிற அழுத்தம் காரணமாக பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகும் ஊழியர்கள், படிப்படியாக குடிக்கப் பழகுகிறார்கள்.

கைக்கெட்டும் தூரத்தில் மது கிடைப்பதாலும், மதுப்புட்டிகளுக்கு நடுவிலேயே புழங்குவதாலும் வெகு எளிதாக அடிமை நிலைக்குப் போய் விடுகிறார்கள். டாஸ்மாக் ஊழியர்கள் மத்தியில் மதுவுக்கு அடிமையானவர்களின் கணக்கெடுத்தால் அதிர்ச்சி மிஞ்சும். 36 ஆயிரம் பேர் பணியாற்றிய இடத்தில் இப்போது 24 ஆயிரம் பேர்தான் இருக்கிறார்கள்.

இந்த வேலையே வேண்டாம் என்று 5,000 பேர் ஓடிவிட்டார்கள். சிலர் பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். இதுவரை சுமார் 2000 பேர் தீவிர குடிநோயால் இறந்திருக்கிறார்கள். இன்னும் பலர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்.

இவர்களில் பலரும் 40 வயதுக்கு உட்பட்டவர்கள். எதிர்பார்ப்போடு படித்து, மரியாதையான ஒரு வேலையைப் பெற்று சமூகத்தில் தலைநிமிர்ந்து வாழலாம் என்ற கனவோடு வேலைக்கு வந்தவர்கள் இப்போது தலை கவிழ்ந்து கைநடுங்க வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்.

இந்தக் கொடுமையில் இருந்து இவர்களை மீட்க ஒரே வழி மதுவிலக்குதான். டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டு ஊழியர்களுக்கு வேறு பணிகளைத் தரவேண்டும்...’’ என்கிறார் தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் (ஏஐடியூசி) மதுரை மாவட்ட நிறுவனர் ஜி.தியாகராஜன்.

டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆண்டுக்கு 8 நாட்கள்தான் விடுமுறை. காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை வேலை நேரம். கடை அடைத்து வீடு திரும்ப 12 மணிக்கு மேலாகிவிடும். போதாக்குறைக்கு குடிப்பழக்கம். பெரும்பாலானோருக்கு குடும்பம் சிதைந்து விட்டது. மதுரை திருமங்கலம் டாஸ்மாக்கில் பணியாற்றும் சரவணன் மது அடிமைகள் மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்றுத் திரும்பியிருக்கிறார். ‘‘12 வருடமா டாஸ்மாக்ல வேலை செய்யிறேன். விளையாட்டா தொடங்கின மதுப்பழக்கம் ஆளையே சாய்ச்சிடுச்சு. நடமாட முடியலே. இப்பதான் சிகிச்சை முடிஞ்சு வந்திருக்கேன்...’’ என்கிறார்.

‘‘நாங்கள் மேற்கொண்ட ஆய்வுப்படி சராசரியா வருஷத்துக்கு 200 டாஸ்மாக் பணியாளர்கள் இறந்து போறாங்க. இதுல பாதிக்கு மேல தற்கொலை. கணைய பாதிப்பு, ஹார்ட் அட்டாக், மஞ்சள் காமாலை, கல்லீரல் பிரச்னை, விபத்து... எதுவுமே இயற்கையான மரணமில்லை. 2003க்கு முன்னால வேலை நியமனத்தடைச் சட்டம் இருந்ததால இந்த வேலையாவது கிடைக்குதேன்னு நிறைய பேர் இதுக்குள்ள வந்து சிக்கிட்டாங்க.

இப்போ விடுபட முடியாம தவிக்கிறாங்க. டாஸ்மாக் பணியாளர்களுக்கு எந்தப் பணிவிதியும் உருவாக்கப்படலே. எல்லாத் தவறுகளுக்கும் நாங்கதான் பொறுப்பேற்க வேண்டியிருக்கு. கடுமையான வேலைப்பளு, மன அழுத்தத்தோட குடிப்பழக்கமும் சேர்ந்திடுறதால வெகு எளிதா நோயாளி ஆகிடுறாங்க. நிறைய பேர் கொஞ்சம் கொஞ்சமா செத்துக்கிட்டிருக்காங்க...’’ என்கிறார் டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் தனசேகரன்.

2003ல் ரூ.3000 கோடியாக இருந்த மது வருமானம் இப்போது ரூ.30,000 கோடி. நாட்டின் மொத்த வருமானத்தில்  மூன்றில் ஒரு பங்கை ஈட்டித் தரும் டாஸ்மாக் ஊழியர்களுக்கு இதுவரைக்கும் ஒரு மருத்துவ முகாம் கூட நடத்தியதில்லை அரசு.

வெளிச்சத்தை விரும்பி வீழ்ந்து கருகும் விட்டில்களாக தங்கள் வாழ்க்கையை மெல்ல தொலைத்துக் கொண்டிருக்கிறார்கள் அவர்கள்.மது வாங்க வருபவர்கள் பேசுகிற  பேச்சுகள், அதிகாரிகள் தருகிற அழுத்தம் காரணமாக பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகும் ஊழியர்கள், படிப்படியாக குடிக்கப் பழகுகிறார்கள்.

- வெ.நீலகண்டன்