குட்டிச்சுவர் சிந்தனைகள்



முத்தம் என்பது இதழ்களால் ஒத்தடப்பட்டாலும் அது இதயத்தின் ஒத்தடம். முத்தம் என்பது இதயங்கள் சொல்லிக்கொள்ளும் ஹலோ. முத்தம் என்பது மகிழ்ச்சி போல, நாம் மற்றவர்களுக்குத் தர வேண்டும்; நாமும் மற்றவர்களிடமிருந்து பெற வேண்டும். பெண்களின் முத்தம் என்பது கடவுள் நம் கன்னத்தில் போட வைக்கும் ஆட்டோகிராப், குழந்தைகளின் முத்தம் என்பது கடவுளே நம் கன்னத்தில் போடும் ஆட்டோகிராப்.

 குழந்தைகளிடம் இருந்து கேட்காமல் பெறும் முத்தமும், பெண்களிடம் கெஞ்சிக் கேட்டு பெறும் முத்தமும் கோடி ரூபாய் கொட்டினாலும் கிடைக்காத சந்தோஷம் தரும். தூங்கி எழும்போது நெற்றியில் ஒரு முத்தமும், இரவு தூங்கப் போகும்போது கன்னத்தில் ஒரு முத்தமும் நிச்சயம் அன்றைய தினத்தை அருமையாக்கும்.  பிறந்த மழலையின் பஞ்சு போன்ற பிஞ்சான  பிங்க் நிற உள்ளங்கையிலும் உள்ளங்காலிலும்  முத்தம் கொடுத்தால் கிடைக்கும் சுகம், உலக அழகியின் ஈரமான உதட்டில் முத்தமிட்டால் கூட கிடைக்காது என்பதே நிஜம்.

 குழந்தைகள் தரும் முத்தத்தின் ஈரப் பசைதான் அன்பிற்கான ஊற்று; மனைவி, காதலி தரும் முத்தத்தின் ஈரம்தான் காதலுக்கான ஊற்று; அம்மா தரும் முத்தத்தின் ஈரம்தான் பாசத்தின் ஊற்று; நண்பர்கள் தரும் முத்தத்தின் ஈரம்தான், அவர்கள் குடிச்சிருக்காங்களான்னு கண்டுபிடிக்க க்ளூ தரும் ஊற்று. பணத்திற்குப் பிறகு, தருவதை விட பெறுவதில் அதிகம் சந்தோஷப்பட வைப்பது முத்தம். அப்புறம் சொல்ல மறந்துட்டோம், குழந்தைகளுக்கு கன்னம், காது, கண், மூக்கு, கைகள், கழுத்து என முத்தம் எல்லா இடங்களிலும் தரலாம். ஆனால், பெண்களுக்கு முத்தம் தர ஏற்ற இடம்......
வீடு!

‘நண்பேன்டா’ படத்துல நயன்தாரா அவங்கப்பாவுக்கு சரக்கு வாங்க முயற்சிதான் பண்ணினாங்க. ஆனா பாருங்க... இந்த வாரம் கோயம்புத்தூர்ல ஒரு பொண்ணு சரக்க போட்டுட்டு ஷாப்பிங் மால்ல சண்டையே போட்டுருக்கு. உடனே நம்மாளுங்க, ‘சினிமாவ பார்த்துதான் மக்கள் கெட்டுப்போயிட்டாங்க’ன்னு புலம்ப  ஆரம்பிச்சுடுவாங்க.

அய்யா, எது எடுக்கப்பட்டதோ அது இங்க இருந்தே எடுக்கப்பட்டது; எது கொடுக்கப்பட்டதோ, அது இங்கிருந்தே கொடுக்கப்பட்டதுன்னு சொல்றத இந்த விஷயத்துக்கு அப்ளை பண்ணுங்க. ரியல் லைஃப்ல இருந்துதான் ரீல் லைஃபுக்கு சீன் எடுக்கிறாங்க. அது போல ரீல் லைஃப் சீனெல்லாம் ரியல் லைஃப்ல சீனாகுது.

‘வை ராஜா வை’ படத்துல ஹீரோவுக்கு  அடுத்து நடக்கப் போறது முன்பே தெரிஞ்சிடுது.  இது மட்டும் நிஜ வாழ்க்கையில  நம்ம பசங்களுக்குக் கிடைச்சதுன்னா, நாட்டுக்கு நல்லதா செய்யப் போறாங்க?  செய்யற செலவுக்கு இந்தப் பொண்ணு செட்டாகுமான்னு இல்ல சக்தியப்  பயன்படுத்துவாங்க!

‘ஓ காதல் கண்மணி’ படத்துல வர்ற மாதிரி ஒரே கருத்தும்  சிந்தனையும் உள்ளவங்க ரெண்டு வருஷம் சேர்ந்து இருந்து பார்த்துட்டு  கல்யாணம் பண்ணிக்கிட்டா, கல்யாணமாகி ரெண்டு வருஷத்துல விவாகரத்து நடக்கிறது  ரொம்பவே குறையும்ல! ‘மாஸ்’ படத்துல வர்ற மாதிரி நாம பேய்கள  பார்க்க ஆரம்பிச்சா,  எவனாவது பேய்க்கு நல்லதா செய்வான்? பாத்ரூம்ல எப்படி  நிம்மதியா குளிக்கிறதுன்னு துரத்தி இல்ல விடுவான்.

 எல்லாம் சினிமாவப் பார்த்துதான் கெட்டுப் போறாங்கன்னா, ‘பாலக்காட்டு மாதவன்’ படத்துல வர்ற மாதிரி அம்மா இல்லாதவங்க ஏன் ஒரு அம்மாவ தத்து எடுத்துக்கக் கூடாது? ‘கத்தி’ படத்துல, ‘விவசாயம்  அத்தியாவசியம், விவகாரங்கள் அனாவசியம்’னு விஜய் கத்தி கத்தி சொன்னாரே... 

யாராவது கம்ப்யூட்டர விட்டுட்டு கலப்பைய புடிச்சீங்களா? சொத்த வித்து சொந்த  பணத்துல ‘லிங்கா’ ரஜினி டேம் கட்டுனாரு, ‘முத்து’ படத்துல அவரே ஏழை எளிய  மக்களுக்கு எள்ளுருண்டைல ஆரம்பிச்சு பசியாற பொரிஉருண்டை வரை வாரி  வழங்கினாரு. அதைப் பார்த்து கை தட்டுனாங்களே தவிர, யாராவது பாக்கெட்ல கை  விட்டு பத்து ரூபாய்க்கு பன், டீ வாங்கிக் கொடுத்து இருக்காங்களா?

ஒவ்வொரு படத்துலயும் வன்முறை தப்பு, தேசப்பற்று, சட்டத்தின் விட்டம்னு  வாய் வலிக்க சோஷியல் சயின்ஸ் பாடம் எடுப்பாரே கேப்டன்... காது வலிக்க அதைக் கேட்டுட்டு கம்முன்னு இருக்காம, ரோட்டுல குறுக்கால வந்தவன ‘வூட்டுல சொல்லிட்டு வந்தியா’ன்னு வம்படியா வம்பிழுக்குறீங்க. ‘தேவர் மகன்’ படத்துல, ‘சாதிச் சண்டை வேணாம்...

 போய் புள்ளைகுட்டிங்கள படிக்க வைங்க’ன்னு கமல் சொல்லியும், சைக்கிள்ல இடிச்சதுக்குக் கூட சாதிச் சண்டைய இழுக்கிறீங்களேம்மா.சினிமால நல்லதைக் காமிச்சா விட்டுடுங்க, விளங்காதத மட்டும் விவரமா புடிச்சுக்கிட்டு வெங்கட் பிரபு படத்துல பிரேம்ஜி மாதிரி செட்டாக்கிக்கிறீங்களே!

திருவண்ணாமலையில ஒரு பாசக்கார கும்பல், பால் குடிக்கிற வயசுள்ள பாலகன் ஒருவனுக்கு பீர் ஊத்திக் குடிக்க வச்ச வீடியோதான் இந்த வார வாட்ஸ் அப் பரபரப்ப பத்த வச்சுது. போதாக்குறைக்கு நாலு வயசு சிறுவன் ஒருவனுக்கு ரம் ஊத்தி குடிக்கச் சொன்ன இன்னொரு வீடியோ, நல்ல ரன் ரேட் போயிக்கிட்டு இருக்கிற ட்வென்ட்டி 20 மேட்ச்ல டிவில்லியர்ஸ இறக்கிவிட்ட மாதிரி, பரபரப்ப வாரக்கடைசி வரை தக்க வச்சுது.

கேப்டன் தமிழக சினிமா காவல்துறையில இருந்து போயிட்ட காரணமோ... இல்லை, ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் ‘ஜெய்ஹிந்த் 2’னு பாகிஸ்தான் பார்டர்ல வார்டனா சேர்ந்துட்ட காரணமோ... ஆம்பூர்ல காவல்துறையினரையே மடில குந்த வச்சு காது குத்தி கெடா வெட்டியிருக்காங்க. அறந்தாங்கின்னா, அறத்தை தாங்கி நிற்கும் ஊருன்னு அர்த்தம் வருது. அப்படிப்பட்ட அறந்தாங்கில, ‘ஏழாவது படிக்கிற மாணவி ஏழு மாதம் கர்ப்பம்’னு இடி தாக்குற நியூஸும் இந்த வாரம்தான் வந்துச்சு. ஸ்கூல் பேக் சுமக்க வேண்டிய மாணவிய, குழந்தைய சுமக்க வச்சிருக்காங்க.

இந்த வாரம் கோவை தந்த சேவை... கோவையில் உள்ள மிகப்பெரிய பள்ளி ஒன்றில் ஏழாம் வகுப்பு படிக்கிற ஏழு மாணவிகள், க்ளாஸ் நடக்கிறப்ப செல்போன்ல ஆபாசப் படம் பார்த்திருக்காங்க. இந்த மாணவிகள் தாங்கள் இருக்கிற இடம் பள்ளிக்கூடமா... இல்லை, கர்நாடக சட்டசபையான்னு தெரியாம குழம்பிட்டாங்க போல. நம்ம ஆட்சியாளர்கள் ‘தமிழகம் எல்லாத்திலும் நம்பர் ஒன்... நம்பர் ஒன்’னு சொல்றாங்களே, அது இதுலதான்னு இப்ப தெரியுது. குழந்தைகள் தமிழகத்தின் எதிர்காலத் தூண்கள், அதை நம்மாளுங்க செல்லரிக்க வச்சிருக்கானுங்கன்னும் புரியுது.

ஆல்தோட்ட பூபதி