பாபநாசம்



ஏக மனதாய் கேரள தேசத்தில் ‘ஹிட்’டடித்த ‘த்ரிஷ்யமே’ தமிழில், ‘பாபநாசம்’. மகள் இன்னதென்று அறியாத புரியாத, பதட்டத்தில் செய்த கொலையை மறைக்க ஆயிரம்  காரணங்களுடன் அப்பா கமல்ஹாசன் செய்யும் அடுத்தடுத்த பரபரப்புக் காரியங்களே  பாபநாசத்தின் வேகம். மனைவி கௌதமி, குழந்தைகள் நிவேதா, எஸ்தர். பிரியமும், பேரன்பும் வழிகிற  குடும்பத்தில் அப்பா கமல்ஹாசன்.

 குளியலறையில் மகளைப் படம் எடுத்தவன் வீட்டுக்கே வந்து மனைவியையும் மகளையும் மிரட்டிவிட்டு செத்துப் போக, பிணத்தை மறைக்கிறார் கமல். அன்றைக்கு நாங்கள் ஊரிலேயே இல்லை என சம்பவங்களை ‘ரெடி’ பண்ணுகிறார். இறுதியில் எப்படி கமலும் குடும்பத்தினரும் தப்பிக்கிறார்கள் என்பதே மீதிக்கதை. த்ரில்லர் கதையில் புது ட்ரெண்ட் அடித்திருக்கிறார் இயக்குநர் ஜீத்து ஜோசப்.

ஒரு சிறுநகரத்தின் கேபிள் டிவி உரிமையாளராக படத்தின் மொத்த இயல்பையும் தோள் மீது ஏற்றி சுமையே இல்லாத மாதிரி தாங்குகிறார் கமல். ஒரு பாத்திரத்தில் ஒரு நடிகர் நடிப்பதும், ஒரு பாத்திரமே ஒரு குறிப்பிட்ட நடிகருக்கு வாகனமாக ஆவதும், ஆக, இரு விதங்களில் ஒரு நட்சத்திரத்தின் திறமையைக் கணக்கிடலாம். வார்த்தைகளை உச்சரிக்கும் போது மட்டுமல்ல. இன்பிட்வீன் லைன்ஸ் அந்த இடைவெளியில் ஒரு நடிகர் வெளிக்கொணரும் நகாசு வேலைத் திறனுமே அவரது திறமைக்கு சாட்சி.

பதறி ஓடிவரும் மனைவி, அப்பா எனக் கதறும் மகள், நடந்தது அறிந்து ‘அய்யோ’ எனப் பதறுகிறாரே, அது நடிப்பல்ல. குற்றம் அறியாத பெண்ணின் நிலை அறிந்து அடிவயிற்றில் மூண்ட கனலை முகத்தில் காட்டுவது, கமல் யூ ஆர் ரியலி கிரேட்!என்னதான் இருந்தாலும் ஒரு கொலையை மறைக்கிறவர் மீது கனிவேற்படச் செய்ய முடியுமா? முடியும் என நிரூபித்திருக்கிறார் கமல்.

வெள்ளையும் சொள்ளையுமாகத் திரியும் சுயம்பு லிங்கத்தை நாம் எங்கே கமலாகப் பார்த்தோம்! குறைவான, ஆனால் குத்தலான பேச்சு, விஷமம் நெளியும் மெல்லிய நகை, எந்நிலையிலும் தோல்வியை ஏற்காத, ஏற்க விரும்பாத திமிர், மகளுக்கு எதுவும் நேர்ந்துவிடக்கூடாது எனத் தீர்மானித்து, வஞ்சகமாக இருந்தாலும்,  அதை சாதுர்யமாக நிறைவேற்றும் தீவிரம்... ‘‘நீங்க மாத்திச் சொன்னீங்கன்னா, உண்மையைச் சொன்னீங்கன்னா நான் செத்துப் போயிடுவேன்’’ என கமல் கனிந்த, கண்களில் துடித்த உதடுகளோடு சொல்லும்போது கலங்காத கண்கள் எத்தனை!

சந்தோஷமான குடும்ப சூழல் தடாலடியாக மாறுவதற்கு முன்பும் பின்பும் சரியாக வித்தியாசம் காட்டுகிறார் கௌதமி. இத்தனை நாள் நடிப்பு கனிந்து பெருகி கைவந்திருக்கிறது. சற்றே பொறுமை காட்டும் பேச்சு மட்டுமே வித்தியாசப்படுகிறது.ஹோட்டல் முதலாளி எம்.எஸ்.பாஸ்கர். சதா இயல்பாகக் கொட்டும் காமெடிகளில் அன்பும், சக மனிதர்கள் மீதான அக்கறையும் வெளிப்படுகிறது.

கண்ணால் கண்ட சாட்சியாக வரும் கலாபவன் மணி, அற்புதம். எந்தச் சூழ்நிலையிலும் சந்தேகக் கண்களை விரித்துக்கொண்டே இருக்கும் காட்சிகளில் பயத்தோடு வசீகரிக்கிறார். மகன் மறைவிற்குப் பிறகு வெளிப்படுகிற ஐ.ஜி ஆஷா சரத், இதற்கு முன் தமிழில் பார்த்திராத கம்பீரம். பாசத்தையும், கடமையையும், சற்றே குரூரத்தையும் கலந்து கொடுக்கிற பாவனையில் பின்னுகிறார்.

கமல் அடுத்தடுத்து போலீஸின் விசாரணைக்கு க்ளூ கொடுக்காமல் கடுப்பேற்றுவது நமக்கு சந்தோஷமாகிறது. எப்போதுமே கமல் படத்தில் இணையாகவோ துணையாகவோ எவரையும் குறிப்பிடுவது கடினம். இதில் எல்லோருக்கும் செமத்தியான இடம் தந்திருப்பது இயக்குநர் ஜீத்துவின் வெற்றி!

என்னதான் குளியலறையில் படம் எடுத்திருந்தாலும், அதற்கு இந்த அளவு போவது நியாயம்தானா? இதுதான் இதற்கு முடிவா? இப்படி நடந்துவிட்டால் பெண்களுக்கு எல்லாமே முடிந்துவிடுகிறதா? சந்தர்ப்ப சூழ்நிலைகளால் இப்படி அவதிப்படும் நடுத்தரக் குடும்பப் பெண்களின் நிலை அவ்வளவுதானா? என்ற கேள்விகளையும் படம் எழுப்பாமல் இல்லை. சுஜித்தின் கைவண்ணத்தில் ரொம்ப காலத்திற்குப் பிறகு கதையோடு கேமரா பயணிப்பதைப் பார்க்க முடிகிறது. ஜிப்ரான் பின்னணியில் உயிர் கொடுக்கிறார். மௌனத்திற்கு தக்க இடம் கொடுத்து ஒதுங்கியும் கொள்கிறார்.

படத்தின் ஹீரோ கமலா, ஜீத்து ஜேசப்பா என சந்தேகம் வரும் நேரம், கடைசிக் காட்சியில் கமல் தன் நடிப்பில் பெருமிதமான கைவரிசையைக் காட்டிவிடுகிறார். அந்த ஒரு வசனத்தில் ஒருசேர கோபத்தையும் அன்பையும் ஆற்றாமையையும் துயரத்தையும் தூண்டிவிடுகிறார். ஜெயமோகனின் வரிகளில் அத்தனை உயிர்! பாபநாசம்... பாச த்ரில்லர்!

- குங்குமம்
விமர்சனக் குழு