நடிகன்



ராக் ஸ்டார் ராம்குமாரின் ரசிகன் அல்ல... வெறியன்தான் நம் மாயாண்டி. குழந்தைத் தொழிலாளர் பிரச்னையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ராம்குமாரின் ‘கரண்டி’ படத்தை, வழக்கம் போல முதல் நாள் முதல் காட்சி பார்த்தான் மாயாண்டி. இப்படியொரு சிறப்பான படத்தை எடுத்ததற்காக ராக்ஸ்டாரை எப்படியாவது நேரில் சந்தித்து வாழ்த்துச் சொல்ல நினைத்தான். பெருமுயற்சிக்குப் பிறகு அப்பாயின்ட்மென்ட் கிடைத்தது.

பெரிய மாளிகை... சிடுசிடுவென நடு ஹாலில் அமர்ந்திருந்தார் ராக் ஸ்டார் ராம்குமார். ஏற்கனவே அவரைப் பார்க்க நாலைந்து பேர் பணிவாய் குனிந்தபடி காத்திருந்தார்கள். கோபமாய் இருக்கிறார். அதனால், அவர் பக்கம் போகவே பயமாய் இருந்தது. அப்போது வீட்டு வேலைக்காரன் டீ எடுத்துக்கொண்டு ராம்குமாரை அணுகினான். அவன் நீட்டிய டீ கப்பை கவனிக்காமல், ராம்குமார் திரும்ப, டீ அவர் சட்டையில் லேசாய் சிந்திவிட்டது.

‘‘முட்டாள்! கண்ணு தெரியலையா?’’ என ராம்குமார் பளார் என அறைந்த அறையில் அவன் வாசல் பக்கம் வந்து விழுந்தான். அந்தப் பதினைந்து வயது வேலைக்காரனை ஓடிப் போய் தூக்கினான் மாயாண்டி. ராக் ஸ்டார் ராம்குமார் என்ற பாரம் அவன் மனதை விட்டு இறங்கியிருந்தது! 

ஜெ.கண்ணன்