அழியாத கோலங்கள்



இருபத்து நான்கு ஆண்டுகள்  வழக்குரைக்கும்  பணியில்   அதிகபட்சம்  இரண்டு  நீதிபதிகள் கொண்ட  நீதிக்குழு  தவிர மூன்று பேர்  கூட்டத்திலேயே  பேச நடுங்கும்  தன்மை  உடையவன்  நான். ‘தந்தை சொல்மிக்க  மந்திரமில்லை’  என்பதில்  பெரிய  நம்பிக்கை  இல்லாமல்  இருந்தாலும் சொந்தத்  திறமையில்  அதைவிடக்  குறைவான   பற்று  இருந்ததால்,  அவர்  சொற்படி  சகோதரர்  கமலின்  பகுதி நேர  உதவியாளனாக  சென்னை வந்தேன்.

தம்பியின்  இரக்கம்...  என்  திறமையின்மையைச்  சுட்டிக்காட்டி  பதவி நீக்கம்  செய்ய  மறுத்தது. என்   இயலாமையை  ஒப்புக்கொண்டு ராஜினாமா  செய்யும்  பெருந்தன்மை  அன்று  எனக்கும்  வரவில்லை. நானும்  நடிக்க  ஆரம்பித்ததும் நண்பர் டி.என்.சுப்பிரமணியம்  செட்டியாரை  அவருடைய  தொழிலை  விட்டுவிட்டு  என்  சகோதரரின்  நிர்வாகியாக  வந்தால் அதிகப்  பொருள் கிட்டும் எனப் பேசி  உறுதி  செய்தேன். அப்போது  என்  சகோதரர்  கமலஹாசனின்  கஜானாவே  என்  பொறுப்பில்  இருந்தது... 

 தம்பி  என்றுமே  பொருள்  ஈட்டுவது  பற்றியோ  சொத்துக்களைப்  பெருக்குவது  பற்றியோ  நினைத்து  கவலைப்பட்டதில்லை.டி.என்.எஸ்  அவர்களிடமிருந்து  நிறைய  கற்றுக்கொண்டேன். ‘தம்பியின்  படப்பிடிப்பு  வேலை  நடக்கும்   தளத்துக்கு  அடிக்கடி  போக வேண்டாம்’  என்பார்.      `கதாநாயகனின்  சகோதரனுக்கும்  நட்சத்திர  அந்தஸ்து  கொடுத்து, உங்களையும்   கவனிக்க  தயாரிப்பாளர் செலவில்  இரண்டு   பணியாட்களை  வைக்க வேண்டும். பத்திரிகைகளில்  தம்பியின்  பெயர்தான்  அடிபடும்’ என்பார்.   டி.என்.எஸ்  யோசனைப்படி,  கமல்  படப்பிடிப்புத் தளம்  மட்டுமல்லாமல் மகள்  சுஹாசினியுடைய  படங்கள்   நடக்குமிடங்களுக்கும்  செல்வதைத்  தவிர்த்தேன்.  

நான்  நடிக்க  வருவதற்கு முன், ‘‘ஹீரோ கால்ஷீட்  கேட்டால்,  சினிமா தொழில்  பற்றி  எதுவும்  தெரியாத  ஒரு  வக்கீல்கிட்ட  கதை சொல்லித்  தொலைக்க  வேண்டியிருக்கு!’’  என்று ஒரு  கெட்ட பெயர்  எனக்கு  இருந்தது. நடிக்கப் போனால் அப்படியே படத்தயாரிப்பு பற்றியும் கற்றுக்கொண்டு அந்தக் களங்கத்தைப் போக்கலாம் என ஒரு  கல்லில்  இரண்டு   மாங்காய்  அடிக்கும் யோசனையில்தான்  நான்  முதன்முதல் நடிக்க 
ஒப்புக்கொண்டேன்.

என்  சகோதரருக்கும்... மகளுக்கும்  நான்  முதலில்  கதை கேட்கும்  ஒரு  நடைமுறை  இருந்ததால்   வெளியார்  படங்களில்  கமலுடன்  சேர்ந்து  நடிப்பதை  ஒப்புக் கொள்வதில்லை. நான்கு  மொழிகளில்  நான்  நூறு  படங்கள்,  என்  மகள்  இருநூறுக்கும்  அதிகமான  படங்களில்  நடித்திருந்தும்,  நானே  இயக்கிய  ஒரு  படம்   தவிர வேறு படங்களில் சுஹாசினியுடன் சேர்ந்து நடித்ததில்லை.

  கடைசியாக,  கமலுடன்  நடித்த படம்  நாங்களே   தயாரித்த கமலின்  சொந்தப்  படமான  `விக்ரம்’. அந்தப்  படத்தின்  விமர்சனத்தில்  ஒரு  தமிழ்த் தினசரி, ‘இந்த  சாருஹாசன்  தன்  தம்பியின்  புகைப்படத்தை   மேலதிகாரியிடம்  காட்டி, ‘இவனை  விட்டால்  இந்த  அரசு  ஏவுகணையை  மீட்டுத்தர  வேறு  தகுதியான   ஆட்கள்  இல்லை’ என்கிறாரே!   அண்ணனே தம்பியைப் புகழும்  அந்த  வசனமும் காட்சியும் கேட்க  அருவருப்பாக  இருக்கிறது’ என்று  எழுதியது. அன்றிலிருந்து  சொந்தப்  படங்களிலும்  கமலுடன் நடிக்க   ஒப்புக்கொள்வதில்லை.

அந்த நாளில் எங்கள் வீட்டுக்கு அருகில் ரவி தியேட்டர் என்று ஒரு சினிமா கொட்டகை. கமலுக்கு இரண்டு வயதாக இருக்கும்போது கமலைத் தூக்கிச் செல்ல ராமசாமி என்று ஒரு இளைஞன் அமர்த்தப்பட்டு இருந்தார்.  அவர் மாலை 7 மணிக்கெல்லாம் ரவி தியேட்டருக்கு  கமலைத் தூக்கிக்கொண்டு போய்விடுவார். முதல் காட்சி முடிந்ததும் வீட்டுக்கு வந்து, குட்டி நடிகருக்கு ஒரு டம்ளர் ‘ஆட்டுப்பால்’ கொடுத்துவிட்டு, மறு காட்சிக்கு போய்விடுவார்கள்.  அந்தக் கொட்டகையில் எம்.ஜி.ஆர் நடித்த ‘மதுரை வீரன்’ படம் ஓடியது.

பரமக்குடியில் எனக்குத் தெரிந்து நூறு நாட்கள் ஓடிய ஒரே படம். பட வினியோகஸ்தர் சார்பில் நூறு நாட்களும் அந்தப் படத்தைப் பார்த்து, டிக்கெட்டுகளைச் சேமித்து வைத்திருக்கும் ஒருவருக்கு தங்க மெடல் கொடுக்கப்பட்டது. அது சமயம், அந்த தியேட்டர் முதலாளி 2 வயது கமலுக்கு நூறு நாட்களும் இரண்டு காட்சிகளை டிக்கெட் வாங்காமல் பார்த்ததற்கு ஆறுதல் பரிசாக ஒரு வெள்ளி மெடல் கொடுத்தார்.

சமீபத்தில் ஏவி.எம் தலைவர் AVM சரவணன் அவர்களுக்கு ‘சாதனையாளர் விருது’  கொடுக்க வந்த போது கமல் சொன்ன தகவல் இது. AVM சரவணன் அவர்களுக்குக்கூட இல்லாத உரிமையை ஏவி.எம் செட்டியார் 5 வயது கமலுக்கு கொடுத்திருந்தாராம். அதாவது, நினைத்தபோது அனுமதி கேட்காமல் செட்டியார் அறையில் நுழைந்து பெரியவருக்கு சமமாக அரட்டை அடிப்பது.

கமலுடைய இரண்டாவது படம் என்று நினைக்கிறேன்... ‘பார்த்தால் பசி தீரும்’. இந்தப் படத்தில் சிவாஜி, ஜெமினி, சாவித்திரி, செளகார் ஜானகி, சரோஜா தேவி என
நட்சத்திரக் கூட்டம் இருந்தும் திரைக்கதை இந்த குட்டி கமலை மனதில் கொண்டு எழுதப்பட்டது போல் தெரிந்தது. தயாரிப்பாளர்கள் ‘கமால் பிரதர்ஸ்’ என்ற நிறுவனம்.

அதன் பங்குதாரரில் ஒருவரை சென்னை உயர்நீதி மன்றத்தில் சந்தித்தேன். ‘தன் கம்பெனி 67% வருமான வரியும் 5% கம்பல்சரி டெபாசிட்டும் கட்டுகிறதாகவும், லாபத்தில் 28% தான் பங்குதார்களுக்கு வருகிறதாகவும் கூறினார். ‘ஒரு நல்ல படம் எடுத்தால் போதும்... லாபம் தேவையில்லை என்று இந்த ‘பார்த்தால் பசி தீரும்’ படம் எடுத்தோம்’ என்றார். அப்போதிருந்தே நல்ல சினிமாவில் கமல் இருந்திருக்கிறார்.

‘அண்ணனே தம்பியைப் புகழும் அந்த  வசனமும் காட்சியும் கேட்க அருவருப்பாக  இருக்கிறது’ என்று  எழுதியது ஒரு நாளிதழ்

(நீளும்...)

சாருஹாசன்

ஓவியங்கள்: மனோகர்