மனக்குறை நீக்கும் மகான்கள்



ஸ்ரீ அரவிந்த அன்னை

என் குழந்தைகளே! நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் பணியில் முழு ஈடுபாடும் தன்னலமற்ற உழைப்பும் கொண்டிருக்க வேண்டும் என்று நான் எதிர்பார்க்கிறேன். என் மீதும் நீங்கள் நம்பிக்கை வைக்க வேண்டும். உங்களை எல்லாம் ஒரே குடும்பமாகவே கருதுகிறேன். உங்கள் ஒவ்வொருவருடைய திறமைக்கும் வாய்ப்பளிக்கப்பட வேண்டும்; அவை வளர்ச்சியடைய வேண்டும்; சமூகத்துக்குப் பயன்பட வேண்டும் என்பதே எனது நோக்கம்.
-  அன்னை

அரவிந்தர் தனது யோக சாதனையின் மூலமாக பூமியை சொர்க்கமாக்கும் முயற்சியில் இறங்கி இருந்தார். இன்னும் சொல்லப் போனால் சாமானிய மனிதர்களுக்கெல்லாம் கிடைக்காத தெய்வீக சக்தியை அனைவரும் சுவாசிக்கும் காற்றைப் போல  பூமிக்குக் கொண்டு வந்துவிட வேண்டும் என்பதே அரவிந்தரின் ஆசை.

 இந்த மகத்தான பணி நிறைவேறவிடாமல் தடுக்க  தீய சக்திகள் தங்களால் முடிந்த எல்லா காரியங்களையும் செய்யும். குறைந்தபட்சமாக இந்தக் காரியத்தை தாமதிக்க வைக்கவாவது விரும்பும். அதன் பொருட்டு அரவிந்தருக்கு தீமை விளைவிக்க அவை எல்லா வகையிலும் முயற்சி செய்யும். ஆதலால்தான் அன்னை, அரவிந்தரை கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொண்டார்.

அது போலவே அரவிந்தரும் தனது யோகத்திற்கு உறுதுணையாக இருக்கும் அன்னைக்குத் தீய சக்திகளிடமிருந்து எந்த ஆபத்தும் வந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தார். அன்னையை தன் பாதுகாப்பு வளையத்திற்குள்ளாகவே வைத்திருந்தார்.

ஒருநாள் அன்னை ஆசிரம அலுவல் தொடர்பாக அரவிந்தரிடம் அனுமதி பெற்று காரில் வெளியில் சென்றார். சில காரணங்களால் அரவிந்தரிடம் சொல்லிவிட்டு வந்த இடத்தையும் தாண்டிச் செல்ல வேண்டியிருந்தது. அப்படிச் செல்லும்போது அரவிந்தரிடம் குறிப்பிட்ட இடத்தைக் கடந்து  கார் சென்ற போது வண்டி சட்டென நின்றுவிட்டது.

டிரைவர் காரை சோதித்தார். காரில் குறையேதும் இல்லை. அரவிந்தரிடம் சொல்லிவிட்டு வந்த இடத்தைத் தாண்டிச் செல்ல நமக்கு அனுமதி இல்லை என்பது அன்னைக்குப் புரிந்தது. வண்டியைத் திருப்பச் சொன்னார் அன்னை. ஆச்சரியப்படும் விதமாக கார் உடனே ஸ்டார்ட் ஆனது. ஆசிரமத்தை கார் அடைந்தபோது வராண்டாவில் அன்னையின் வருகையை எதிர்நோக்கி பதற்றத்துடன் காத்திருந்தார் அரவிந்தர். அன்னையைப் பார்த்தவுடன் சமாதானம் அடைந்தவராக தனது அறைக்குச் சென்றார்.

 தீய சக்திகளிடமிருந்து அன்னைக்கும் அச்சுறுத்தல் இருந்தது. தனது பாதுகாப்பு எல்லையைத் தாண்டி அன்னை சென்றால் ஆபத்து என்பதாலேயே  காரை செயல்படாமல் ஆக்கினார் அரவிந்தர்.அன்னையும் அரவிந்தரைக் காக்கும் முயற்சியில் கவனமாக இருந்தார். இந்த எல்லா கவனத்தையும் தாண்டி தீய சக்திகள் வெற்றிக் களிப்பில் எக்காளமிடும் ஒரு நிகழ்ச்சி நடந்தது. எது நடக்கக் கூடாது என அன்னை கவனமாக இருந்தாரோ அது நடந்தது.

1938 நவம்பர் மாதத்தில் ஒருநாள். அரவிந்தர் நடந்து வந்துகொண்டிருந்தபோது கால் தடுக்கி விழுந்தார். வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. உடனே அன்னை தகுந்த மருத்துவ சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார்.

அரவிந்தரை கவனித்துக்கொள்ள மிகச் சரியான சாதகர்களை நியமித்தார். அவர்களில் ஒருவர் சம்பக்லால். நிழல் போல எப்பொழுதும் அருகில் இருந்து அரவிந்தரை கவனித்துக்கொண்டார். டாக்டர் நீரத்பரன், டாக்டர் மணிலால் ஆகிய இருவரும் அரவிந்தர் விரைவில் குணமடையும் பொருட்டு தீவிர சிகிச்சை அளித்தார்கள்.

அன்னையின் அதீத அக்கறையும் கவனிப்பும் அரவிந்தரை படிப்படியாக குணமாக்கின. தினமும் மதிய வேளையில் அன்னையின் மேற்பார்வையில் அரவிந்தர் நடைப்பயிற்சி மேற்கொண்டார். கால் நன்கு வலுவடைந்து குணமடையவும் ஆரம்பித்தது. அரவிந்தருக்கு இப்படி ஒரு விபத்து ஏன் நேர்ந்தது? இது அனைவருக்குள்ளும் எழுந்த கேள்வி.இந்தக் கேள்வி அரவிந்தரிடமே கேட்கப்பட்டபோது, ‘‘அன்னையை தீய சக்திகளிடமிருந்து  பாதுகாப்பதில் கவனமாய் இருந்தபோதுதான் இந்த விபத்து எனக்கு நேர்ந்தது’’ என்று பதில் சொன்னார்.

அன்னையின் கண்களில் ஆனந்தக் கண்ணீர். நன்றி உணர்வால் பொங்கிய கங்கையாய் வழிந்தது. குருவும் சீடரும் ஒருவர் மீது ஒருவர் கொண்டிருந்த அக்கறைக்கு ஒரு சோறு பதம். அரவிந்தருக்கு அன்னை மீது தாயன்பு.

அன்னைக்கு அரவிந்தர் மீது அதீத குருபக்தி!1938ம் ஆண்டு. மிருது என்ற பெங்காலி சாதகி அரவிந்தருக்கு சமையல் செய்ய  பணிக்கப்பட்டார். மிருது சாப்பாடு கொண்டு செல்லும்போது அன்னையை ஒரு கணம் பார்த்துவிட்டுச் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தார். திடீரென ஆசிரம கட்டிடத்தின் வடக்குப் பகுதியில் இருந்த வீடு சமையலுக்காக ஒதுக்கப்பட்டது. இதில் மிருதுவுக்கு வருத்தம். அன்னையை தினமும் பார்க்கும் வாய்ப்பு இதனால் தடைபடும் என்பதே காரணம்.

உடனே மிருது அன்னையை தரிசிக்காமல் காலை உணவு எடுத்துக்கொள்ளமாட்டேன் என்று உறுதியாகச் சொல்லிவிட்டார். இது அன்னைக்குத் தெரிய வந்தவுடன், மிருதுவுக்காக தினமும் காலை 6 மணிக்கு ஆசிரமக் கட்டடத்தின் வலப்புற பால்கனிக்கு வந்து மிருதுவுக்கு தரிசனம் தர ஆரம்பித்தார். மிருதுவும் தினமும் அன்னையை 6 மணிக்கு பால்கனியில் தரிசித்துவிட்டு தன் பணியை நிறைவுடன் செய்யத் தொடங்கினார்.

இதை அறிந்த சில சாதகர்கள், அந்த நேரத்தில் அன்னையின் தரிசனத்திற்காக அங்கே குழும ஆரம்பித்தார்கள். கொஞ்சம் கொஞ்சமாக இது அனைவருக்கும் தெரிய வர அது பால்கனி தரிசனமாகவே மாறிப் போனது.‘‘தினமும் காலையில் கூடியுள்ள சாதகர்களுடன் ஆத்மத்தொடர்புகொண்டு நான் பரமாத்மாவை எட்டி அவரில் கரைந்து போவேன். அதன்பின் என் உடலும் ஜீவனும் பரம்பொருளின் கருவியாகிச் சாதகர்கள்  நேரடியாக அருளைப் பெற முடியும்’’ என்று சொன்னார் அன்னை.

1962 மார்ச்சில் அன்னை பால்கனி தரிசனத்தை நிறுத்தினார். 1962 செப்டம்பரில் மிருது காலமானார். பகவான் அரவிந்தர் சாப்பிட்டவுடன் திரும்ப எடுத்துவரும் தட்டுச் சாதத்தை பிரசாதமாக மிருது அனைவருக்கும் தருவது வழக்கம். அதனாலேயே அவர் வசித்த வீடு பிரசாத வீடு என்று அழைக்கப்பட்டது.

1963 பிப்ரவரியிலிருந்து அன்னை ஆசிரமக் கட்டிடத்தின் கீழ்ப்புறமுள்ள பால்கனியில் இருந்து மாலை 6.15க்கு தரிசன நாட்களில் தரிசனம் தந்தார். கடைசி தரிசனம் ஆகஸ்ட் 15, 1973ல் கிடைத்தது.

(இந்த பால்கனி தரிசனம் என்னும் நடைமுறை இன்றும் சென்னை மேற்கு மாம்பலம் தம்பையா சாலையில் உள்ள அன்னை ஆஸ்ரமத்தில் ஒவ்வொரு மாதமும் முதல் தேதி காலை 6:30 மணிக்கு நடைபெறுகிறது.) இந்த பால்கனி தரிசனம் பெற்றவர்கள் வாழ்வில் துன்பம் தொலைந்து இன்பம் பெருகும் என்பது நிதர்சனம்.

ஆசிரமத்து வீடுகளில் அடிக்கடி திருடு போனது. ஒருநாள் அந்தத் திருடன் பிடிபட்டான். காலை வேளையில் அன்னை தரிசனம் தரும் மாடி முகப்பிற்கு முன் கொண்டுவந்து அவனை நிறுத்தினார்கள்.

அவன் அன்னையைக் கண்டவுடன் மிகவும் பக்தியுடன் வணங்கினான்.அன்னையோ புன்னகையோடு, ‘‘காலை தரிசன வேளையில் இவனை அடிக்கடி பார்த்திருக்கிறேன்’’ என்று கூறினார்.உடனே அருகில் இருந்த சாதகர், ‘‘ஒரு திருடன் அடிக்கடி தரிசனத்துக்கு வருவது வியப்பாக இருக்கிறது’’ என்று கூறினார்.

அதற்கு அன்னை,  ‘‘அவன் தரிசன நேரங்களில் தன் தொழிலில் வெற்றி காண வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறான். இந்த நேரம் வரை அவனது பிரார்த்தனை பலித்துக் கொண்டிருக்கிறது. தரிசன நேரத்தில் இங்கு குழுமியிருக்கும் அனைவரின் உன்னதமான  ஆசையையும் நிறைவேற தெய்வீக இசைவு ஆணை வழங்கப்படுகிறது. இதில் எவ்வித பாகுபாடும் இல்லை.

இந்தத் திருடனின் பிரார்த்தனை நிறைவேறியது இப்படித்தான். உண்மையில் கடவுளும் ஞானிகளும் நல்லவன் கெட்டவன் என்றெல்லாம் பார்த்து அருள்வதில்லை. அவர்களின் அன்பும் கருணையும் மழை போன்றது; எல்லார்க்கும் பெய்யும்!’’ என்றார்
அரவிந்தரும் அன்னையும் இணைந்து செய்த யோகத்தின் பலனை பூமிக்குக் கொண்டுவரும் காலம் கனிந்தது. ஆனால் அதில் ஒரு பிரச்னை? அது..?

அன்னையின் அற்புதம்

‘‘1988ம் ஆண்டு. என் இரண்டாவது மகள் பிறந்து 8 மாதக் குழந்தையாக இருந்தபோது அவளுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. ரொம்பவே சிரமப்பட்டாள். என் உறவினர் ஒருவர் அரவிந்தர்-அன்னை படத்தைக் கொடுத்து, ‘மதர் கிட்ட வேண்டிக்கோ, குழந்தை குணமாகிடுவாள்’ என்று சொன்னார்.

நானும் கண்ணீரோடு அன்னையிடம், ‘‘ஒண்ணு அவளை குணப்படுத்திக் கொடு. இல்ல, அவளை சிரமப்படுத்தாமல் கொண்டு போயிடு’ன்னு வேண்டிக்கிட்டேன். டாக்டர்கள் எல்லாம் கைவிட்ட நிலையில் இருந்த குழந்தை, அதிகாலை நான்கு மணிக்கு சிரித்தாள்.

 அந்த நிமிடத்தில் நான் அன்னையிடம் பூரணமாக சரணாகதி ஆனேன்.அதன் பிறகு, மூன்று நண்பர்கள் சேர்ந்து 1990ல் எங்கள் சித்தப்பா வீட்டில்  மதர்ஸ் மெடிட்டேஷன் சென்டர் ஆரம்பித்தோம். 2000 ஆண்டில் பாண்டிச்சேரி அரவிந்தர் ஆசிரமம் எங்கள் மையத்தை அங்கீகரித்தது.

 இப்போது அது மும்பை டோம்பிவிலியில் அரவிந்தோ சொஸைட்டியாக செயல்படுகிறது. எதிர்வரும் அக்டோபர் மாதம் இந்த கிளையின் வெள்ளிவிழாவை கொண்டாடுகிறோம்.  இன்று மும்பையில் தமிழர்கள் மத்தியில் இந்த தியான மையம் அன்னையின் அருள் பரப்பும் ஆலயமாகத் திகழ்கிறது’’ என்று நெகிழ்கிறார் ஜானகிராமன். மும்பையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் அன்பர்.

மகளைக் காத்தருளிய மதர்

வரம் தரும் மலர்

அலுவலக பிரச்னைகள் நீக்கும் மஞ்சள் காகிதப்பூ!

அலுவலகத்தில் பிரச்னைகள் ஏற்பட்டால் நிம்மதி குறையும். அந்தப் பிரச்னைகளுக்குக் காரணம் நம் அலட்சியமான நடவடிக்கைகளாகவும் இருக்கலாம். அல்லது, நம்மை புரிந்துகொள்ளாத அலுவலக நண்பர்களாகவும் இருக்கலாம்.  எப்படி இருந்தாலும் அலுவலகப் பிரச்னைகளை நீக்கி, நம் வேலையை கவனமாகச் செய்ய அரவிந்த அன்னைக்கு மஞ்சள் காகிதப் பூவை சமர்ப்பித்து வேண்டிக்கொள்ளுங்கள். அன்னையின் அருளால் நல்ல மாற்றங்கள் வரும்.

(பூ மலரும்)

எஸ்.ஆா்.செந்தில்குமார்
ஓவியம்:மணியம் செல்வன்