நன்றி



மேனேஜர் மனோகருக்கு ஆச்சரியம். எவ்வளவோ தகுதியான இளைஞர்கள் இன்டர்வியூவுக்கு வந்திருந்தார்கள். இருந்தும் தங்கள் எம்.டி தினகர் வேலைக்குத் தேர்ந்தெடுத்தது தகுதி குறைவான கணேஷ் எனும் இளைஞனை.‘‘சார்! என்னதான் நீங்க மதிக்கற ஆசிரியர் சிபாரிசு பண்ணினார் என்றாலும், இவ்வளவு வீக் கேண்டிடேட்டை செலக்ட் பண்ணணுமா சார்?’’ எனக் கேட்டான் எம்.டியிடம்.எம்.டி தினகர் நிமிர்ந்து பார்த்தார்.

‘‘மேனேஜர், என்னோட ஆசிரியர் ரிட்டயர் ஆகிட்டார். அவருக்கு ஒரே மகன். பட் நோ யூஸ். வீட்டுல அவன் மனைவி ஆட்சிதான் நடக்குது. என் ஆசிரியரோட மருமகள் வச்சதுதான் சட்டம்! அந்த மருமகளோட தம்பிதான் இந்த கணேஷ்! இந்த கணேஷுக்கு நான் வேலை போட்டுக் கொடுத்தா, என் ஆசிரியருக்கு வீட்டுல மரியாதை கூடும். அவரை கடைசி வரைக்கும் நல்லபடியா கவனிச்சுக்குவாங்க!

இந்த கணேஷ் என் கம்பெனியில வேலை செய்யற வரைக்கும் ஆசிரியரும் எந்தக் கஷ்டமும் இல்லாம நல்லா இருப்பார். அதனாலதான் தகுதி குறைவா இருந்தும், கணேஷை தேர்ந்தெடுத்தேன். இது என் குருவுக்கு நான் காட்டும் நன்றி!’’எம்.டி.யின் குருபக்தி மேனேஜரை வியக்க வைத்தது.     

ஜெயா மணாளன்