தோஷம்
கார்னர் ஃப்ளாட் வீடு அது. காம்பவுண்ட் சுவரையொட்டி வாசல் பக்கத்தில் இரண்டு மாமரங்கள். எல்லோருக்கும் அது பச்சைப் பசுமையான அடையாளமாகத் தெரிந்தது. பக்கத்து வீட்டு சங்கரனுக்குத்தான் தொல்லையாகத் தெரிந்தது.
தினமும் அந்த மரத்திலிருந்து விழும் காய்ந்த இலைகளை புலம்பிக்கொண்டே எடுத்துப் போடுவார். மாங்காய் சீஸன் வந்தால் போச்சு... தெருவில் போகும் பையன்கள் இவர் வீட்டு காம்பவுண்ட் சுவர் ஏறி ‘மாங்காய் அடிக்கிறேன் பேர்வழி’ என கற்களால் தாக்குதல் தொடுப்பார்கள். இந்த வருஷம் ஒரு கல் விழுந்து கிச்சன் ஜன்னல் கண்ணாடி காலி!
ஒருநாள் தயக்கத்துடன் கார்னர் பிளாட் சேகரிடமே பேசினார் அவர். ‘‘சார், வாஸ்து நிபுணர் ஒருத்தர் எங்க வீட்டுக்கு வந்திருந்தார். வாசல் பக்கம் ரெட்டை மாமரம் இருக்கறது கெடுதலாம். குடும்பத் தலைவருக்கு ஆகாதுன்னு சொல்லிட்டுப் போனார்...’’சேகர் முகம் இருண்டபடி திரும்பிப் போக, ‘அப்பாடா’ என்று சங்கரன் நிம்மதியானார்.
அடுத்த நாள்... கார்னர் பிளாட் முன்பாகக் கல்லும் மணலும் வந்து இறங்கியது. எட்டிப் பார்த்த சங்கரனிடம் தெரிவித்தார் சேகர்... ‘‘கார்னர் பிளாட்டில் இது ஒரு வசதி சார். இந்தப் பக்க வாசலை வடக்குப் பக்கம் மாத்தி இதைக் கொல்லைப் புறமா மாத்திடப் போறேன். மரத்தையும் வெட்ட வேண்டாம். வாஸ்து தோஷமும் வராது!’’
பம்மல் நாகராஜன்
|