கவிதைக்காரர்கள் வீதி
யுவதி தன் பெண்ணாய் இருக்கமாட்டாள் என்ற போலி நம்பிக்கையையும் தன் பெண்ணாய் இருக்கக்கூடாது என்ற நிஜமான பிரார்த்தனையையும் மத்திம வயதினருக்குத் தந்தபடி முகம் மூடி விரைந்து கொண்டிருக்கிறாள் யாரோ ஒரு யுவனின் இருசக்கர வாகனப் பின்னிருக்கையில் ஒரு யுவதி! - கீர்த்தி, கொளத்தூர்.
போதை குப்பிகள் திறக்கப்பட்டு கோப்பைகளை நிரப்பி வெற்றுடம்பாய் வீழும் மதுபானப்புட்டி பிரதிபலிப்பது, அருந்துபவனின் எதிர்காலத்தை. - ஜி.மணிமாறன், ஆலப்பாக்கம்.
இழந்தது சிக்னலில் யாசிக்கும் அவன் எந்த வியாபாரத்தில் நஷ்டப்பட்டு இந்த நிலைக்கு வந்திருப்பான்? - ப.மதியழகன், மன்னார்குடி.
தெப்பக்குளம் ஒவ்வொரு கோயிலின் தெப்பக்குளப் படிக்கட்டுகளிலும் ஏதோ ஒரு கதை ஓடிக் கொண்டிருக்கிறது கடவுளைப் பற்றியிருந்தால் காட்சி கொடுத்தது முனிவரைப் பற்றியிருந்தால் முக்தி அடைந்தது காதலரைப் பற்றியிருந்தால் கடைசி சந்திப்பு - நாகேந்திர பாரதி, சென்னை-24.
விழுந்தது தெருப்பக்கம் வந்து திசையறியாமல் ஓடையில் விழுந்தது காற்று! - சந்திரா மனோகரன், திண்டல்.
|