அழகோ அழகு!



சினிமா பயணத்தில் கேரக்டர் ரோல்தான் வெற்றிக் கணக்கு! அந்த வகையில் தற்சமயம் தவிர்க்கவே முடியாத குணச்சித்திர நடிகர் சமுத்திரக்கனி என்பது யதார்த்த உண்மை!
- ம.கிரிஜா, புதுச்சத்திரம்.

குளிர்பானங்களில் சேர்க்கப்படும் விதவித ரசாயனங்களைப் பற்றி ‘கிச்சன் to கிளினிக்’ தொடரில் படித்ததும் மனம் பதைபதைத்தது.
- எம். பர்வீன் பாத்திமா, திண்டுக்கல்.

முருகதாஸ் இயக்கும் ‘அகிரா’ பட விபரங்களும், பேட்டியும் ஒரு பக்கம் அழகு என்றால், சோனாக்‌ஷியின் ‘ஸ்டில்ஸ்’ அழகோ அழகு!
- ஆசை.மணிமாறன், திருவண்ணாமலை.

அணி வெற்றி பெற்றால் ஒட்டுமொத்த அணியினரைப் பாராட்டுவது... தோற்றால் கேப்டன்தான் பொறுப்பு என்பது... தல தோனியின் புலம்பல் நியாயமானதுதானே... பாஸ்!
- எஸ்.நவீன்சுந்தர், முத்தரசநல்லூர்.

‘இங்கிவரை யான் பெறவே என்ன தவம் செய்துவிட்டோம்’ என்று பாரதி அன்பர்களை ஆனந்தப்பட வைத்துவிட்டது பாரதி மெஸ்ஸும் திருல்லிக்கேணி கண்ணனின் சேவையும்!
- கே.எஸ்.குமார், விழுப்புரம்.

‘டாலடிக்கும் டாய்லெட் பேப்பர்’ பற்றி ‘விநோத ரஸ மஞ்சரி’யில் படித்ததும் ‘மூக்கின் மீது விரலை வைத்துக்கொண்டோம்’... இப்படி ஒரு போட்டியா என்று!
- ஏ.எஸ்.நடராஜன், சிதம்பரம்.

மனதை நிலைப்படுத்தும் யோகா ரகசியங்களைப் படித்தபோது, ஒன்று புரிந்தது. நிலையற்ற மனதோடு யோகா தினம் கொண்டாடிய, அரசியல்வாதிகளுக்கு அவசிய பயிற்சி அது!
- மல்லிகா அன்பழகன், சென்னை.

‘அழியாத கோலங்கள்’ தொடரில் சாருஹாசனின் குறும்புத்தனம், நையாண்டி, உண்மை அனைத்தும் பொதிந்து இருப்பது கூடுதல் சிறப்பு. கமலின் கற்பு, கமலின் திராவிட சிந்தனை என பேசாதவற்றைப் பேசி பேராவலைத் தூண்டுகிறார் மனிதர்!
- ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்.

ஜூலை முதல் செல்லாது என அறிவிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளைப் பற்றி விரிவான விவரங்களைத் தந்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திவிட்டீர்கள். ரிசர்வ் வங்கி பழைய கரன்சிகளை மாற்றிக்கொள்ள கெடுவைத் தள்ளி வைத்திருப்பது கூடுதல் ஆறுதல்!
- கோ.சு.சுரேஷ், கோவை.

சர்வதேச கிரிக்கெட்டில் அம்பயராக ஐ.சி.எஃப் ஊழியர் ரவி நியமிக்கப்பட்டுள்ளது தமிழர்களுக்கு கிடைத்த பெருமை என்றே சொல்ல வேண்டும்!
- வி.சண்முப்பிரியா, சிவகாசி.

உலக நாடுகளில் உள்ள ‘செல்போன் அடிமைகள் நடைபாதை’ குறித்த தகவல்களும், படமும் படு சுவாரஸ்யம். மெட்ரோ ரயில் இங்கே வந்தாச்சு. இது எப்போ?
- இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.
வாரம் திங்கட்கிழமையானா வேலைய நினைச்சு பயமாயிருக்குற மாதிரி, வாரா வாரம் வெள்ளிக்கிழமையானா விமலை நினைச்சு பயமா இருக்கு. சொல்லப்போனா வெள்ளிக்கிழமை வருதோ இல்லையோ, வாரம் தவறாம விமல் படம் வந்திடுது. விதவிதமா நடிக்கிறவரு கமல்னு சொல்ல வச்ச மாதிரி, வெள்ளிக்கிழமை படம் வரவே நடிக்கிறவரு விமல்னு சொல்ல வச்சுடுவாங்க போல.

எத்தன், புலிவால், கேடி பில்லா, ஜன்னல் ஓரம், மஞ்சப்பை, தேசிங்கு ராஜான்னு படம் பேர எடுத்துட்டு பார்த்தா, எல்லா போஸ்டரும் ஒரே மாதிரி இருக்கே ப்ரோ. ‘வாகை சூட வா’ மாதிரி வித்தியாசமானதையே  வழக்கமா செய்யாட்டியும், வழக்கமா செய்யறதையே ‘கலகலப்பு’, ‘களவாணி’ மாதிரி வித்தியாசமா செய்யலாமே ப்ரோ. நல்ல திறமைசாலி நீங்க, கதை கேட்கிறப்பவும் கொஞ்சம் பொறுமைசாலியா இருந்தீங்கன்னா போதும். எங்களின் ஆசையும் ஆதங்கமும், வெள்ளிக்கிழமை விமலில் இருந்து நீங்க வெற்றிகரமான விமலா வரணும் என்பதுதான்!

ஜூலை ஒண்ணாம் தேதில இருந்து ஹெல்மெட் கட்டாயமா போட்டுக்கிட்டுதான் ரோட்டுல வண்டி ஓட்டணும்னு சொன்னாலும் சொன்னாங்க... இருமல் மருந்து விக்கிற கடையில இருந்து இரும்பு விக்கிற கடை வரை, பவுடர் விக்கிற கடையில இருந்து பருத்தி புண்ணாக்கு விக்கிற கடை வரை, சேலை விக்கிற கடையில இருந்து மாலை விக்கிற கடை வரை,  இன்றைய தேதில தமிழ்நாட்டுல டாஸ்மாக்க தவிர மீதி எல்லா கடையிலும் ஹெல்மெட் விக்கிறானுங்க.

ரோட்டுல பார்த்தா எல்லோரும் இந்த வோடபோன் விளம்பரத்துல வர்ற ஜூஜூ பொம்மை மாதிரி மண்டையோடதான் போறாங்க. அதுலயும் சிலபேரு பண்ற அலப்பறை இருக்கே, அப்பப்பா. என்னவோ நிலாவுல காலடி எடுத்து வைக்கிற நீல் ஆம்ஸ்ட்ராங் ரேஞ்சுக்கு பில்டப். போதாக்குறைக்கு ஹெல்மெட் போட்டுக்கிட்டு எடுத்த செல்ஃபிய வாட்ஸ்அப்ல ஃபார்வேர்ட் பண்ணி கொலையா கொல்றாங்க. அடேய், ஹெல்மெட் போட்டுக்கிட்டு போட்டோ எடுத்தா எல்லோரும் ஒரே மாதிரிதான்டா இருக்கீங்க, போட்டோல இருக்கிறது ஆம்பளையா பொம்பளையான்னு கூட தெரியலையேடா, என்னடா இப்படி பண்றீங்க?

இதுல பொண்ணுங்க வேற, என் ஸ்கூட்டி பிங்க் கலர், அதுக்கு மேட்ச்சா எனக்கு பிங்க் கலர் ஹெல்மெட்டுதான் வேணும்னு ‘பிரியா’ படத்துல தேவிய தேடுற ரஜினி மாதிரி தேடுறாங்க. ‘சார், உங்களை எங்கேயோ பார்த்திருக்கேன், நீங்க ஹெல்மெட் போட்டு இருக்கிறதுனால சரியா அடையாளம் தெரியல’, ‘டேய் நான் உன் அப்பாடா’ங்கிற வகை காமெடிங்க கூட சில இடங்களில் நடந்தேறிச்சு.

ஹெல்மெட் போட்டா தலைக்குப் பாதுகாப்பு என்பது உண்மைதான். ஆனா, ஹெல்மெட் மாட்டுன புதுசுல பல பேரு முன்னாடி இருக்கிற குழி, பின்னால அடிக்கிற ஹாரன்னு எதையும் கவனிக்க முடியாம ஆக்ஸிடென்ட் ஆகுறாங்க என்பதுதான் எதார்த்தம். அதனால் காவல் துறையினரே, சட்டம் அமலுக்கு வந்தாலும், மக்கள் ஹெல்மெட்டை பயன்படுத்தி பழகவும், அதன் பயன்பாட்டை அறியவும் ரெண்டு வாரம் அவகாசம் கொடுங்கள்.

கல்யாணம் பண்ற வயச தாண்டி அஞ்சு வருஷமானவனும் சரி, கல்யாணம் பண்ணி அஞ்சு வருஷமானவனும் சரி... ஒரே லெவல்லதான் சோகமா இருக்காங்க, சந்தோஷமா இருக்காங்க.  கல்யாணம் பண்ற வயச தாண்டி அஞ்சு வருஷமானவனையும் பக்கத்து வீட்டுக் குழந்தை ‘அங்கிள்’னுதான் கூப்பிடுது...

கல்யாணம் பண்ணி அஞ்சு வருஷமானவனையும் ‘அங்கிள்’னுதான் கூப்பிடுது. கல்யாணம் பண்ற வயச தாண்டி அஞ்சு வருஷமான ஆண்களுக்கும் சரி, கல்யாணம் பண்ணி அஞ்சு வருஷமான ஆண்களுக்கும் சரி... பெட்ரோல் விலை ஏற்றம், தியேட்டர்ல சினிமா டிக்கெட் விலை, சட்டை சைஸ்னு எல்லாமே சமமாதான் இருக்கு.

கல்யாணம் பண்ணினவங்களுக்குன்னு தனியா ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளும், கல்யாணமாகாதவங்களுக்குத் தனியா கிரிக்கெட் போட்டிகளும் நடத்தறது இல்லை. கல்யாணமானவர்களுக்கு ஸ்பெஷலா டாஸ்மாக் பார் நடத்துறதும், கல்யாணமாகாதவர்களுக்கு டாஸ்மாக்கில் சரக்கு தரமாட்டோம்னு சொல்றதும் இல்ல. கல்யாணமானவர்களுக்கும் பிரதமர் மோடிதான், கல்யாணமாகாதவர்களுக்கும் அதே மோடிதான். ஏன் மோடியே கல்யாணமாகி கல்யாணமாகாதவர்தான்.

இந்தா இப்ப தொடங்கின மெட்ரோ ரயில்ல கூட கல்யாணமாகாதவங்களுக்கு, கல்யாணமானவங்களுக்குன்னு தனித்தனி இருக்கைகள் இல்ல. எல்லோருக்கும் ஒரே டிக்கெட்தான். சலூன்ல முடி வெட்டுறதுல, கோயில்ல திருநீறு கொடுக்கிறதுல, ஹோட்டல்ல சர்வீஸ் பண்றதுல, கெட்டிச் சட்னி கேட்டா முறைச்சு பார்க்கிறதுலன்னு எல்லாத்துலயும் ஒரே மாதிரிதானே நடத்துறாங்க. ஏ சமூகமே, இப்படி எல்லா இடத்துலயும் எங்களை ஒரே மாதிரி நடத்துற நீ... ஒட்டுமொத்தமா பார்க்கிறப்ப மட்டும் கல்யாண வயச தாண்டியும் பேச்சிலரா இருக்கறவங்களை ஏன் தீவிரவாதிய பார்க்கிற மாதிரி பார்க்குற?

தீபாவளிக்கு மிச்சம் வச்ச பட்டாச கார்த்திகைக்கு வெடிக்கிறதும், துவைச்ச துணிமணிகள காய வச்சு மடிக்கிறதும், தான் காதலிக்கிற பொண்ணுக்காக தன்னைக் காதலிக்கிற பொண்ணை எம்ஜிஆர் தங்கச்சியாக்குறதும்,  ஆயிரம் வேலை கிடந்தாலும் கடைசி அஞ்சு ஓவர் பார்க்கிறதும், அதிகம் படிக்க முடியாதவன் ஆடு மாடுகளை மேய்க்கிறதும், கூட இருந்தவன் முன்னேறுனா குழி பறிச்சு சாய்க்கிறதும், சீட்டு சேராட்டியும் செகண்ட் ரம்மிக்கு ஜோக்கர சேர்க்கிறதும், அன்புக்காக பழகுனவங்களோட தெரிஞ்சே தோற்கிறதும்,

மழை பெய்ஞ்சாலே மெட்ராஸ் ரோடு அரிக்கிறதும், இரும்பே தின்னாலும் இஞ்சி மரப்பா தின்னா செரிக்கிறதும், ஓசில சரக்கு கிடைச்சா மூச்சு முட்ட குடிக்கிறதும், பசங்கன்னா பரீட்சைக்கு முதல் நாள் மட்டும் படிக்கிறதும், ஊரு பண்ணையாரை உள்ளூர் ஹீரோ எதிர்க்கிறதும், தீர்ந்து போன பேஸ்ட்டை கடைசி வரை பிதுக்கிறதும், இடைத்தேர்தல் வந்தாலே ஆளுங்கட்சி ஜெயிக்கிறதும் சகஜம்தானேப்பா.

அதுக்காக, ஒரு வார்டுல மொத்த வாக்காளர் எண்ணிக்கைய விட பதிவான ஓட்டுகளின் எண்ணிக்கை அதிகமா இருக்கிறது ரொம்ப ஓவர்! யாருக்குத் தெரியும், ஒருவேளை ‘மொத்த வாக்குகளின் எண்ணிக்கைக்கு மேல 10 சதவீதம் அதிகமா பதிவானா தப்பில்லை’ன்னு சட்டத்தில இடமிருக்கோ என்னவோ!

ஆல்தோட்ட பூபதி