தியேட்டரில் பார்க்காததை நெட்டில் பார்க்கலாம்!




படம்: ஜிகர்தண்டா

கேரக்டர்கள்: சித்தார்த், கருணாகரன்.
சித்தார்த் ரவுடியோடு பழக வந்து, தன்னை வம்பில் மாட்டிவிடுவாரோ என்ற கடுப்பில் இருக்கிறார் கருணாகரன்.
கருணாகரன்: டேய், 5 வருஷமா கான்டாக்டே இல்லாமதானே இருந்தே... இப்ப மட்டும் என் நம்பர் எப்படிக் கிடைச்சது?
சித்தார்த் (தம் அடித்துக்கொண்டே) : ஃபேஸ்புக்!
கருணாகரன்: டேய், எனக்கு கல்யாணமெல்லாம் ஆகிடுச்சுடா!
சித்தார்த்: தெரியுமே.. லட்சுமி
தானே? போட்டோ பார்த்தேன். லைக் போட்டிருந்தேனே!
கருணாகரன்: நீ ஏன்டா என் பொண்டாட்டி போட்டோவுக்கு லைக் போட்டே?
சித்தார்த் (சத்தமாக சிரித்துக்கொண்டே): ஃப்ரெண்ட்ஸுக்கெல்லாம் ஷேர் கூடப் பண்ணினேன் மச்சி!

படம்: மெட்ராஸ்

கேரக்டர்கள்: கார்த்தி, கேத்தரீன் தெரெஸா
தனிமையில் காதலாகப் பேசிக்கொள்ளும் தருணம்.
கேத்தரின்: எனக்கு விக்ரம்தான் புடிக்கும்
கார்த்தி: எனக்கும் விக்ரம்தான் புடிக்கும்
கேத்தரின்: ஹே... சூப்பர்! (சிரிக்கிறார்கள்) ஹீரோயின்ல யாரு புடிக்கும்?
கார்த்தி: ஷோபா... ‘மூடுபனி’, ‘அழியாத கோலங்கள்’... செம்ம அழகி. அப்படியே நம்ம ஏரியா பொண்ணு மாதிரியே இருப்பாங்க. ஷோபா ஒரு தேவதை. அதுக்கப்புறம்... சில்க். அவங்க கண்ணு இருக்குதே... ப்பா! இப்ப சமந்தாதான். ‘நீதானே என் பொன்வசந்தம்’
பாத்தியா?கேத்தரின் (கோபித்துக்கொள்கிறார்): நான் விக்ரம் புடிக்கும்னுதானே சொன்னேன். ஆனா நீ... ஷோபா சூப்பரு, அழகி... அப்டீன்னு பயங்கரமா
வர்ணிக்கிறே..?

ரசனையான இந்தக் காட்சிகளை நீங்கள் திரையரங்குகளில் பார்த்திருக்க முடியாது. சென்சார் காரணமாகவோ, நீளம் காரணமாகவோ சூப்பர் ஹிட் படங்களில் இருந்து வெட்டப்பட்ட சீன்கள் இவை. சம்பந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனங்களே இவற்றை ஃபைனல் கட் வடிவமாக யூ டியூபில் ஏற்றி விடுவது இப்போ லேட்டஸ்ட் டிரெண்ட். பாலிவுட் ‘பிகே’ முதல் லோக்கல் பட்ஜெட் படம் வரை ‘டெலீட்டட் சீன்ஸ்’ என்று போட்டால் நெட்டில் கொட்டுகின்றன. இந்தக் காட்சிகளை மக்கள் முன் வைப்பதால் இவர்களுக்கு என்ன கிடைக்கிறது?

‘‘விளம்பரம் வரும் சார்! நல்ல பிஸினஸ் அது!’’ என ஆரம்பிக்கிறார் தயாரிப்பாளர் ஒருவர்.‘‘எனக்குத் தெரிஞ்ச புரொடியூஸர் ஒருத்தர், இந்த மாதிரி திரைக்கு வராத சீன்களை எல்லாம் விலை கொடுத்து வாங்கி, தனியா ஒரு சேனலே ஆரம்பிக்கலாம்னு இருந்தார். அதுக்குள்ள அந்தந்த புரொடக்‌ஷன் கம்பெனிகளே முழிச்சிக்கிட்டாங்க. லட்சக்கணக்குல மக்கள் பார்க்குறாங்கன்னா யூ டியூபே அதுல விளம்பரத்தை ஓட விட்டு நமக்கு காசு தரும்!’’ என்கிறார் அவர்.

‘‘தயாரிப்பாளருக்கும் இயக்குநருக்குமான ஈகோ மோதலினால் கூட சில காட்சிகளை நீக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கும். ‘நான் எப்படியொரு காவியத்தை அந்தக் காட்சியில சொல்லியிருந்தேன். அதைத் தூக்கிட்டியே... இதையே யூ டியூப்ல போட்டா, எவ்ளோ லைக் வருதுன்னு பாக்குறீயா.. பாக்குறீயா?’ என வீம்புக்காகக் கூட டைரக்டர்களே சில காட்சிகளை வெளியிட்டு விடுவார்கள்!’’ என புது ஆங்கிள் சொல்கிறார் இயக்குநர் ஒருவர்.

சில சமயம் இதுவே தலைகீழாகக் கூட நடக்கும். ஒரு படத்துக்காக எடுத்த நல்ல காட்சியை நீளத்துக்காக கட் பண்ணும்போது, டைரக்டர் அந்த கான்செப்ட்டை தன்னுடைய அடுத்த படத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம் என நினைத்திருப்பார். ஆனால், அவரிடம் கூட சொல்லாமல் சில தயாரிப்பு நிறுவனங்கள் பப்ளிசிட்டிக்காக இப்படிப்பட்ட கட் காட்சிகளை இணையத்தில் விட்டு விடுகின்றன. ‘இப்டி பண்ணிட்டாங்களேடா’ என இதனால் புலம்பல்ஸ் கிளம்புவதும் உண்டாம்!

‘நான் சிவப்பு மனிதன்’, ‘டார்லிங்’ படங்களின் எடிட்டர் ரூபனிடம் இந்த டெலீட்டட் சீன் டிரெண்ட் பற்றி கேஷுவலாக உரையாடிப் பார்த்தோம்.
‘‘இங்க இது கம்மிங்க. தமிழ்நாட்டுல ஒரு படம் ரிலீஸ் ஆகி, ஓடி முடிச்ச பிறகுதான் இப்படி கட் பண்ணின காட்சிகளை யூ டியூப்ல போடுறாங்க. ஆனா, ஹாலிவுட், பாலிவுட்ல அப்படியில்ல. அங்கே டெலீட்டட் சீன்களை பட ரிலீஸுக்கு முன்னாடியே பதிவேற்றம் பண்ணிடுவாங்க.

அது அந்த படத்தோட பிஸினஸுக்கும், பப்ளிசிட்டிக்கும் நல்லா கை கொடுக்குது. சில படங்கள்ல எல்லா சீன்களுமே சூப்பரா வந்திருக்கும். இரண்டரை மணி நேரத்துக்குள்ள சுருக்கணுமேன்னு மனசே இல்லாம சில சீன்களை வெட்ட வேண்டியிருக்கும். பொதுவா பெரிய படங்கள்ல நீளம் அதிகமாயிட்டா, காமெடி சீன்லதான் கை வைப்பாங்கனு ஃபீல்டுல ஒரு டாக் உண்டு. டைரக்டர் எதைச் சொல்றாரோ அதைத்தான் நாங்க வெட்டுவோம்.  

ஒரு சில சீன்ஸ் ரொம்ப நல்லா இருந்து, படத்துல வர முடியாம போச்சுன்னா அசிஸ்டென்ட்ஸ் எல்லாம் அதை யூ டியூப்ல போடச் சொல்லி ஆர்வம் காட்டுவாங்க. டைரக்டருக்கும் அது சரின்னு தோணினா யூ டியூப்ல வந்துடும்.  அதுல தப்பே இல்ல. நான் தினமும் 2 மணி நேரத்தை யூ டியூப்ல செலவழிக்கறேன். ஹாலிவுட் படங்கள்ல ஆரம்பிச்சு எல்லாத்தோட டெலீட்டட் சீன்ஸையும் பார்ப்பேன். இதனால என்னை நானே அப்டேட் பண்ணிக்க முடியுது. அப்படி நாம போடுற சீன்களும் யாருக்காச்சும் இன்ஸ்பிரேஷனா இருக்கும்தானே?’’ என்றார் அவர்.

நேரத்துக்காக வெட்டிய காட்சிகள் மட்டுமென்றால் பரவாயில்லை. சில சமயம் சென்ஸார் அதிகாரிகளால் தணிக்கை செய்யப்பட்ட டபுள் மீனிங், ஆபாசம், வன்முறைக் காட்சிகளும் இதே மாதிரி யூ டியூபில் வந்துவிடுகின்றன. இது சரியா? மத்திய தணிக்கைக் குழு அதிகாரியான பழனிச்சாமியிடம் கேட்டோம்.

‘‘யூ டியூப் என்பதை இப்போதைக்கு தனிப்பட்ட விஷயமாகத்தான் நாங்க பார்க்கறோம். கம்ப்யூட்டர், இன்டர்நெட்... இதெல்லாம் தனி மனித உரிமைன்னு ஆகிப் போச்சு. உங்க கன்ட்ரோல்ல நீங்க பார்க்க விரும்புறதை எல்லாம் அதுல பார்க்கலாம். அதுக்கு தணிக்கை இல்லை. ‘தலைப்புலயே டெலீட்டட் சீன்னு போட்டிருக்குல்ல... உங்களுக்கு வேண்டாம்னா அதை ஏன் நீங்க க்ளிக் பண்றீங்க’ன்னு ஒரு கேள்வி வரும். ஆனா, சினிமா அப்படியில்ல. மாஸ் மீடியம்.

அதுல ஆட்சேபகரமா எதுவும் வந்துடக் கூடாதுங்கறதுக்காகத்தான் சென்ஸார் போர்டு. ஆனா, இதே வீடியோவை நாலு பேர் கூடுகிற பொது இடங்கள்ல, ஒரு பள்ளிக்கூடத்துல, கல்லூரிகள்ல, தியேட்டர்ல பொதுமக்களுக்கான வீடியோவா ஒளிபரப்பும்போது கண்டிப்பா சென்ஸார் பண்ணியாகணும்’’ என்றார் அவர் கறாராக!
ஷகிலா சீஸன் சமயம் இப்படி ஒரு டிரெண்ட் இல்லாமப் போச்சேப்பா!

நான் எப்படியொரு காவியத்தை அந்தக்  காட்சியில சொல்லியிருந்தேன். அதைத் தூக்கிட்டியே... இதையே யூ டியூப்ல  போட்டா, எவ்ளோ லைக் வருதுன்னு பாக்குறீயா.. பாக்குறீயா?

- மை.பாரதிராஜா