ஏழு ஸ்டேஷனும் எங்க ஊரு மெட்ரோ ரயிலும்!



பொருட்காட்சி ஜெயன்ட் வீலில் ஏறக் காத்திருக்கும் கூட்டமோ என சந்தேகம் வருகிறது. இல்லை, இது மெட்ரோ ரயில் டிக்கெட் கவுன்ட்டர்தான். வாட்டமாக வாட்ச்சை வாட்ச்சை பார்த்துக்கொண்டு நிற்கும் அலுவல் பார்ட்டிகளே இங்கில்லை. ‘சும்மா ஜாலியா பார்த்துட்டுப் போலாம்னு வந்தோம்’ என்பது எல்லார் முகத்திலும் எழுதி ஒட்டியிருக்கிறது. இந்தியாவின் காஸ்ட்லியான மெட்ரோ ரயில் சேவையாச்சே... ஒரு அஜித், விஜய் படம் ரேஞ்சுக்காவது ஓப்பனிங்கும் ஃபேமிலி ஆடியன்ஸும் இல்லாவிட்டால் எப்படி?

நாமும் அந்த ஆடியன்ஸில் ஒருவரானோம்!விமான நிலையம் போல ராயல் லுக்கில் கோயம்பேடு மெட்ரோ ஸ்டேஷன். முதல் தளத்தில்தான் டிக்கெட் கவுன்ட்டர். டிக்கெட் பேப்பரில் இல்லாமல் ேடாக்கனாகத் தரப்படுகிறது. எல்லா தளத்திலும் எஸ்கலேட்டர், படிக்கட்டுகள் என இரண்டு வழிகள் உண்டு. டோக்கன் வாங்கவும் கவுன்ட்டர், ஆட்டோமெட்டிக் டோக்கன் மெஷின் என இரண்டு இடங்கள். பெண் பணியாளர்கள் சிலரும், தன்னார்வ கல்லூரி மாணவிகளும் இந்த நடைமுறைகளில் வழி காட்டுகிறார்கள்.

டோக்கன் வாங்கியபின் சோதனை ஏரியா. தியேட்டர் வாசல் போல நம்மை ஒருவர் பாக்கெட் செக்கிங் பண்ண, உடைமைகள் ஸ்கேன் செய்யப்படுகின்றன. ஏற்கனவே பைக்குள் சரக்கு பாட்டில் வைத்திருந்த இளைஞர் கூட்டம் ஒன்று ‘சார்... சார்...’ என கெஞ்சிக் கொண்டிருக்க அவர்களை சிநேகப் புன்னகையோடு கடக்கிறோம். ரயில் நடைமேடை இரண்டாவது தளத்தில்.

தானியங்கி தடுப்பு வழியில் நமது டோக்கனைக்காட்டினால்தான் அது வழிவிடுகிறது. நம்மூர் ரயில் போல லெஃப்ட்டில் போய் லெஃப்ட்டில் வரும் கதையே இங்கில்லை. போகிற ரயில், அந்த ட்ராக்கிலேயே திரும்பும் என்பதால், எந்தப் பக்கம் ரயில் வரும் என விசாரித்து நிற்க வேண்டும். ஒலிபெருக்கியில் அதை கிரிக்கெட் கமென்ட்ரி மாதிரி சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள்.

நாம் எதிர்பார்த்திருக்கும் ரயில் எவ்வளவு நேரத்தில் வந்து சேரும் என நடைமேடை எல்.இ.டி திரை ஒன்று அப்டேட் பண்ணிக்கொண்டே இருக்கிறது. ஆனால், காத்திருக்கும் நேரத்தில் உட்காரத்தான் ஒரு சேர் கூட இல்லை எந்த ஸ்டேஷனிலும். ‘‘குடிக்க தண்ணி கூட இல்ல சார்!’’ என்கிறார்கள் காத்திருக்கும் சில பயணிகள்.
பத்து நிமிடக் காத்திருத்தலுக்குப் பின் முழுவதும் குளிரூட்டப்பட்ட மெட்ரோ ரயில் கண்ணுக்குக் குளிர்ச்சியாக வந்து நிற்கிறது.

 நான்கே பெட்டிகள்தான்... அதில் மகளிருக்ெகன்று ஒரு கோச். ‘அட, 25% இட ஒதுக்கீடு’ எனப் பார்த்தால், அறியாமையில் ஆண்களும் அங்கே பெருமையாக அமர்ந்திருக்கிறார்கள். டிரைவர் சீட்டுக்கு அடுத்து சின்னதாக ஒரு சிறப்பு வகுப்பு. இதற்கு கட்டணம் இரு மடங்கு. ‘அப்படி என்ன அதில் ஸ்பெஷல்’ என்றால், சீட்டில் கொஞ்சம் குஷன் இருக்குமாம்!

வெளியூர்க்காரர்கள் வந்தால், ‘இது எந்த ஸ்டேஷன்?’ என பக்கத்தில் யாரையும் சுரண்ட வேண்டியதில்லை. மொத்த ஸ்டேஷன் லிஸ்ட்டும், ‘அடுத்தது எது’ எனும் எல்.இ.டி இண்டிகேஷனும் எல்லா பெட்டியிலும் உண்டு. கோயம்பேடு, புறநகர் பேருந்து நிலையம், அரும்பாக்கம், வடபழனி, அசோக் நகர், ஈக்காட்டுத்தாங்கல் தாண்டி ஆலந்தூர் வந்து சேர 18 நிமிடங்களே ஆகின்றன. அதுவரை பேச்சுக்கொடுக்க அங்கே ஆளா இல்லை?

‘‘எங்களுக்கு திருமுல்லைவாயில் சார்... இன்னைக்கு குடும்பத்தோட `பீச்’சுக்கு போலாம்னு இருந்தோம். சரி, அப்படியே மெட்ரோவையும் பார்த்திட்டு போய்ரலாம்னு வந்திருக்கோம்’’ என ஹாயாகத் துவங்குகிறார் தனசேகர்.‘‘இது ரொம்ப நல்லாயிருக்கு. வேகமா வர முடியுது. ஏ.சி எல்லாம் ஓகேதான். ஆனா, கட்டணம் நமக்கு கட்டுப்படியாகாது. நாங்க நாலு பேர் ஆலந்தூர் வர 160 ரூபாய் ஆகிருச்சு. மறுபடியும் கோயம்பேடு போகணும்னா, 320 ரூபாய் ஆகிடும். என்னைக்காவது ஒரு நாள்னா ஓகே...

தினமும் இதுல வரமுடியுமா?’’ - விட்டால் சினிமா போல ‘ஒரு தடவை பார்க்கலாம்’ என்பார் போலிருக்கிறது!‘‘மெட்ரோ ரயிலைப் பார்க்குற ஆசையிலதான் காலேஜ் விட்டதும் கிளம்பி வந்துட்ேடாம்.   பறந்து போய் சென்னையை உயரத்திலிருந்து பார்க்குற இந்த அனுபவம் செம சூப்பர். நம்ம ஊர்ல இவ்வளவு நவீன வசதிகள் எல்லாம் ரொம்ப நாள் கனவு இல்லையா!’’ என்கிறது கல்லூரி மாணவிகள் டீம் ஒன்று!

நடராஜன் ஈரோட்டிலிருந்து சென்னை வந்திருக்கிறார். ‘‘நானும், என் மனைவியும் பஸ்ல வந்து கோயம்பேட்ல இறங்கினோம். மகன் வீடு ஈக்காட்டுத்தாங்கல்ல. சிட்டி பஸ்ல கசங்காம, இனி ஈஸியா இதுல போயிடலாம். கொஞ்சம் காஸ்ட்லிதான். எப்பவாவது வர்றதால சிரமம் தெரியாது!’’ என்கிறார் அவர் உற்சாகமாக. குழந்தைகளை குதூகல பிக்னிக் மாதிரி அழைத்து வந்திருக்கிறார் கிண்டியைச் சேர்ந்த கோபால்.

‘‘நம்ம எலக்ட்ரிக் ரயில்ல  கிண்டி யிலிருந்து எக்மோர் போகும்போது வழியில யாரையாவது இறங்கிப் பார்த்துட்டு போலாம். ஆனா, இங்க கீழ இறங்கிட்டா டோக்கன் அவ்வளவுதான். மறுபடியும் போக புதுசா டோக்கன் வாங்கணும். அப்புறம், ரிட்டர்ன் டிக்கெட் எடுக்குற வசதியும் இல்ல. இன்னும் கொஞ்சம் ப்ளானிங் வேணும்!’’ என்கிறார் அவர் கறாராக.

இப்போ இது ஓகே... ஆனால், புதுசு என்ற மலைப்பும் மயக்கமும் தீர்ந்த பின் இந்த மெட்ரோ ரயிலில் யார் பயணிக்கப் போகிறார்கள் என்பதுதான் ட்ரில்லியன் டாலர் கேள்வி. ஒருவேளை சில்ட்ரன்ஸ் பார்க், காந்தி மண்டபம் போல இதுவும் லவ் ஸ்பாட் ஆகிவிடுமோ! இப்போதே அதற்கான அறிகுறிகள் ஆங்காங்கே தென்படுகின்றன. ரூ.14,600 கோடி ப்ராஜெக்ட் பாஸ்... பார்த்து பதமா யூஸ் பண்ணுங்க!

மெட்ரோ ரூல்ஸ்!

* மெட்ரோ ரயில் ஒவ்வொரு ஸ்டேஷனிலும் 35 வினாடிகள் மட்டுமே நிற்கும். தானியங்கி கதவுகள் என்பதால் அதில் சாய்ந்து கொண்டோ, பிடித்துக்கொண்டோ பயணிக்கக் கூடாது.
* மது பாட்டில்கள், சிகரெட், பான்மசாலா போன்றவற்றுக்கு தடா. மது அருந்திவிட்டு பயணிகளுக்கு இடையூறு செய்தால் 500 ரூபாய் அபராதம். நடைமேடையில் எச்சில் துப்பினாலும் அபராதம் உண்டு.
* ஒருவர் 15 கிலோ எடை கொண்ட பொருட்களை மட்டுமே எடுத்துச் செல்ல முடியும். வளர்ப்புப் பிராணிகளுக்கு அனுமதி இல்லை.
* ஒரு ஸ்டேஷனுக்கு டோக்கன் வாங்கிவிட்டு அதைத் தாண்டியுள்ள அடுத்த ஸ்டேஷனில் இறங்க முடியாது.
* ஒரு டிராக்கிலிருந்து இன்னொரு டிராக்கிற்கு செல்ல முதல் தளம் வழியே இறங்கித்தான் போக முடியும். மீறி டிராக்கைக் கடக்க முற்பட்டால் அபராதம் பிளஸ் சிறைத் தண்டனையும் உண்டு.
* அத்துமீறி ரயிலிலோ நடை மேடையிலோ எந்தப் பொருட்களையும் விற்க முடியாது.

- பேராச்சி கண்ணன்
படங்கள்: ஆர்.சந்திரசேகர்