ஸ்ரீ அரவிந்த அன்னை



மனக்குறை நீக்கும் மகான்கள்

அருவருக்கத்தக்க எல்லாவற்றையும் ஒழித்துக் கட்டி, உனக்கும் இறைவனுக்கும் இடையே உள்ள திரையை விலக்கும் பெரும் ரகசியம் சரணாகதியே; முழுமையான, எல்லாவற்றையும் உள்ளடக்கிய இடையறாத சரணாகதியே!

எல்லா கெட்ட எண்ணங்களையும், எல்லா கெட்ட இயக்கங்களையும் சரணாகதியின் மூலம் விரட்டி விடு. இதுவே வெற்றி அடைவதற்கான மனப்பாங்கு. இது ஒரு போதும் தோல்வி அடையாது. உன் தீவிர முயற்சிக்கு வலிமை சேர்க்க எப்போதும் நான் உன்னோடு இருக்கிறேன்.

- அன்னை

உடைகள் அணியும் விஷயத்தில் அன்னையின் ரசனை அலாதியானது. நல்ல அழகுணர்வும் கலையுணர்வும் கொண்ட அன்னை மிக நேர்த்தியாக ஆடையணிவார். சில நாட்கள் அன்னை அணிந்து வரும்  ஆடைகள் எளிமையானதாக இருக்கும். சில ஆடைகள் மிக ஆடம்பரமானதாகவும் விலை உயர்ந்ததாகவும் இருக்கும். அன்னையைப் பொறுத்தவரை இரண்டு வித ஆடையும் ஒன்றுதான். ஆனால், சிலர் அன்னை ஆடம்பரமாக வாழ்வதாக நினைத்தார்கள்.

அன்னையின் உயர்ந்த ரசனையை நன்கு அறிந்த ஒரு ஆசிரமவாசி அன்னையிடம் பேசிக் கொண்டிருக்கும்போது, அதை வெளிப்படுத்தவும் செய்தார். ‘‘அன்னையே! நீங்கள் தூய்மை, அழகு, நேர்த்தி ஆகிய விஷயங்களில் கொண்டிருக்கும் ஆர்வத்தை நான் அறிவேன். ஆனால் சில சமயங்களில் நீங்கள் அணிந்துகொள்ளும் ஆடைகள் தங்களுக்கு மிகவும் பகட்டான தோற்றத்தை வழங்குவதாக உணர்கிறேன். ஏன் இது மாதிரியான ஆடைகளை நீங்கள் தவிர்த்துவிடக் கூடாது?’’

அதற்கு அன்னை, ‘‘நான் அணியும் ஆடைகள் என்னுடைய குழந்தைகளால் எனக்குப் பிரியமாக வழங்கப்பட்டவை. அவற்றில் சில ஆடைகள் எளிமையானதாக இருக்கிறது. சில பகட்டாக இருக்கிறது.

எப்படி இருந்தாலும் அவற்றை நான் அணிந்து கொள்ளாவிட்டால் என் குழந்தைகள் வருந்துவார்கள். பெற்றவளுக்கு பிள்ளை வாங்கித் தந்த உடையில் ‘எது? எவ்வளவு உயர்ந்தது? என்ன ரகம்?’ என்பதெல்லாவற்றையும் விட, அது தன் பிள்ளை வாங்கித் தந்தது என்பதில்தான் மகிழ்ச்சி. எனக்கும் அப்படித்தான்!’’ என்று பதில் சொன்னார்.

அன்னை தன் பக்தர்கள் மீது கொண்டிருந்த தாயன்பும் அவர்களின் உணர்வுகளுக்கு அளிக்கும் முக்கியத்துவமும் உணர்ந்து அந்த அன்பர் சிலிர்த்துப் போனார். இதை உணர்ந்து கொண்ட அனைவரும் அதன்பிறகு வாய் திறக்கவில்லை.

ஆசிரமத்தில் சாதகர்களிடம்  சில சச்சரவுகள் எழுந்தன. ஒருவர் மீது மற்றொருவர் குற்றம் சாட்டிக் கொண்டார்கள். ‘அவர் மோசம்’, ‘இவர் மோசம்’ என்றெல்லாம் பேச்சு எழுந்தது.  அப்பொழுது ஒரு சாதகர் அன்னையிடம், மோசமான மனிதர்களை எப்படிக் கையாள்வது என்ற கேள்வியை எழுப்பினார்.

உடனே அன்னை ‘மோசமானவர் என்று உலகில் யாருமே இல்லை’ என்று சொல்லி ஒரு கதையைச் சொல்லத் தொடங்கினார்.‘‘குபியோ நகரத்தைச் சுற்றியுள்ள காடுகளிலும் வயல்களிலும் எல்லாரும் பெரும் திகில் அடையும் வகையில் ஒரு பெரிய ஓநாய் அட்டகாசம் செய்துகொண்டிருந்தது.

மனிதர்களைக் கொன்று குவித்தது. மக்கள் வீதிகளில் நடக்கவே பயந்தார்கள். கடைசியாக,  ஃபிரான்சிஸ்  என்ற சாது அந்தக் கொடிய மிருகத்தைச் சந்திப்பது என்று தீர்மானித்தார். அவர் காட்டை நோக்கிப் புறப்பட்டார். அவருக்குப் பின்னால் சிறிது தூரத்தில் ஆண்களும், பெண்களுமாக சிலர் போனார்கள்.

அவர் காட்டை நெருங்கியதும் திடீரென்று அந்த ஓநாய் வாயைத் திறந்துகொண்டு ஃபிரான்சிஸ் சாது மேல் பாய்ந்தது. ஆனால், அந்த சாது அமைதியாக ஒரு சைகை காட்டினார். உடனே ஓநாய் ஒரு ஆட்டுக்குட்டியைப் போல் அமைதியாக அவருடைய காலடியில் படுத்துவிட்டது.

புனிதர் ஃபிரான்சிஸ் அதைப் பார்த்து ‘ஓநாய் சகோதரா... நீ இந்த நாட்டில் செய்துள்ள கொடுமை கொஞ்சமல்ல. அதற்காக உன்னைக் கொன்றே போடலாம். எல்லோரும் உன்னை வெறுக்கிறார்கள். ஆனால், நான் உன்னையும் என் குபியோ நண்பர்களையும் சமாதானப்படுத்தி சேர்த்து  வைக்கத் தயார்.

அதுதான் எனக்கு மிகவும் மகிழ்ச்சி தரும்!’ என்று சொன்னார்.ஓநாய் தலையைத் தாழ்த்தி வாலை ஆட்டிற்று. சாது ஃபிரான்சிஸ் ஓநாயிடம், ‘ஓநாய் சகோதரா, இந்த மக்களுடன் சமாதானமாகப் போனால் அவர்கள் உன்னிடம் அன்பாக இருப்பார்கள். உனக்கு தினமும் உணவு தருவார்கள். நீ இனிமேல் எவ்விதக் கொடுமையும் செய்வதில்லை என்று எனக்கு சத்தியம் செய்து கொடுப்பாயா?’ என்று கேட்டார்.

அப்பொழுது ஓநாய் தனது தலையை இன்னும் நன்றாகத் தாழ்த்தி தனது வலது முன்னங்காலை சாதுவின் கையில் வைத்தது. இவ்வாறு அவர்கள் இருவரும் நல்லெண்ணத்துடன் தங்களுக்குள் ஓர் உடன்படிக்கை செய்து கொண்டனர்.

அதன்பின் அந்த ஓநாயை அவர் குபியோ நகரின் சந்தைக்குக் கூட்டிச் சென்றார். அங்கு கூடியிருந்த நகர மக்கள் முன்னிலையில் முன்பு ஓநாயிடம் சொன்னதைத் திரும்பவும் சொன்னார். ஓநாயும் ‘இனிமேல் நல்லபடி நடந்துகொள்வேன்’ என்று உறுதிமொழி அளிக்கும்  அடையாளமாக முன்போலவே தன்னுடைய காலைப் புனிதரின் கையில் வைத்தது.

பிறகு அந்த ஓநாய் குபியோவில் இரண்டு ஆண்டுகள் தங்கியிருந்தது. யாருக்கும் ஒரு தீங்கும் செய்யவில்லை. ஒவ்வொரு நாளும் நகர மக்கள் அதற்கு உணவு கொண்டுவந்து கொடுப்பார்கள். அது இறந்தபோது எல்லோரும் துக்கப்பட்டார்கள்.

அந்த ஓநாய் அவ்வளவு கொடியதாகத் தோன்றியபோதும், அதனுள் ஏதோ ஒரு நல்ல அம்சம் இருந்திருக்கிறது. ஆனால், பிறருக்கு அது தெரியவில்லை. சாது அதை ‘சகோதரனே’ என்று அழைத்ததும் அதன் உயர்குணம் வெளிப்பட்டது.

இந்தக் கதையில் வரும் ஓநாய் மக்களால் மிகவும் வெறுக்கப்படும் ஒரு பெரிய குற்றவாளியைக் குறிப்பிடுகின்றது என்பதில் சந்தேகமில்லை. நம்பிக்கைக்கே இடமில்லை என்று சொல்லும்படி அவ்வளவு மோசமானவர்களிடமும் கூட சில நற்குணங்கள் இருக்கின்றன. சிறிது அன்பு காட்டினால் அவை துளிர்த்து விடுகின்றன என்பதைக் காட்டுவதே இந்தக் கதையின் நோக்கம்.

அதுபோலத்தான் நம்மைச் சுற்றி இருக்கும் மனிதர்களும். நல்லவர், கெட்டவர் என்பதையெல்லாம் சூழல்களும் வாய்ப்புகளும் உணர்வுகளும்தான் முடிவு செய்கின்றன. விழிப்புடன் இருந்து தீயதை வெல்ல வேண்டும். அப்பொழுது நல்லவராக முயல்கிறோம்.  கவனமாக இருந்து கோபத்தை வெல்ல வேண்டும். அப்போது அன்பானவராக முயல்கிறோம். எதுவுமே நிரந்தரமல்ல. தீயது நல்லதுக்கு எதிராகவும், நல்லது தீயதுக்கு எதிராகவும் போராடிக்கொண்டே இருக்கும்.

இந்த சண்டை இருக்கும் வரைதான் உலக இயக்கம் இருக்கும். உண்மையில் இரண்டின் இயக்கத்தையும் இறைவன்தான் கண்காணிக்கிறான். ஆகவே, பரஸ்பரம் விழிப்புடன் இருப்பதுதான் முக்கியம்!’’ என்றார். சாதகர்கள் மனது நிர்மலமானது. தெளிவு அவர்கள் முகத்திலும், அன்பு அவர்கள் கண்களிலும் வெளிப்பட்டன.

ஆசிரமத்தில் சலவைக்கென தனித்துறை ஆரம்பிக்கப்பட்டது. அதை கவனித்துக்கொண்ட சாதகருக்கு தன் பணியின் நேர்த்தி குறித்து கொஞ்சம் கர்வம் உண்டு. தினமும் சலவை செய்யப்பட்ட துணிகள் நேர்த்தியாக அடுக்கப்பட்டு அன்னையின் பார்வைக்காகக் கொண்டு வரப்படுவது வழக்கம். ஒருநாள் அதே போன்று மிக அழகாக அடுக்கப்பட்ட துணி மூட்டை  அன்னையின் பார்வைக்காக கொண்டுவரப்பட்டது. அருகில் அந்த சாதகரும் நின்றார்.

சாதாரணமாக பார்த்துக் கொண்டிருந்த அன்னை, அடுக்கின் நடுவில் இருந்து ஒரு துணியை இழுத்தார். அந்தத் துணியைப் பிரித்துக் காட்டினார். அதில் மிக மோசமான கறை இருந்தது. அந்த சாதகர் முகத்தில் அதிர்ச்சி. தவித்துப் போய் நின்றார். ‘துவைத்தபோது இதை எப்படி கவனிக்காமல் போனோம்... அதே சமயம் அன்னை எப்படி மிகச் சரியாக இந்தத் துணியை எடுத்தார்?’ என்ற வியப்பு அவர்முகத்தில் தெரிந்தது.

அன்னை நிதானமாகச் சொன்னார்... ‘‘பகைச் சக்திகள் மனிதர்களுடன் ஏதோ ஒரு வழியில் தொடர்பை உண்டாக்கிக்கொள்கின்றன. பின்னர் மனிதர்களைச் சோதிப்பதில் அவை கொடூர இன்பம் காண்கின்றன.ஒருவன் மிகவும் தன்னம்பிக்கையோடு சில விஷயங்களில் பெருமை அடித்துக் கொண்டாலும், அல்லது ஆணவப் பேச்சின் மூலம் முன்னிறுத்தினாலும், அந்த தற்பெருமை என்னும் ஓட்டை மூலம் பகைச் சக்தி உள்ளே நுழைந்துவிடும்.

எந்தக் காரியத்தைப் பற்றி நாம் பெருமை அடித்துக் கொள்கிறோமோ, அதற்கு மாறான ஒன்றைச் செய்யுமாறு தூண்டி நம்மைத் தவறாக அது வழி நடத்தும். ஆகவே, எதிலும் தற்பெருமை கூடாது. கவனம் முக்கியம்’’ என்று சொன்னார். சாதகரின் கர்வம் தொலைந்தது. அன்னை அரவிந்தரைப் பாதுகாக்கும் விஷயத்தில் எவ்வளவு கவனமாக இருந்தார்! ‘எது நடக்கக் கூடாது’ என நினைத்தாரோ அது நடந்தேவிட்டது. அது? 

வாழ்வை வளமாக்கிய அன்னை!

‘‘சின்ன வயதில் இருந்தே எனக்கு ஆன்மிகத் தேடல் உண்டு. நிறைய கோயில்களுக்குப் போயிருக்கிறேன். ஆனால், எங்கும் நிறைவு வந்ததில்லை. 1996ல் எனக்கு திருமணம் ஆனது. ஆரம்பத்தில் என் மனைவி குரு பார்வதி வீட்டிலேயே வசிக்க வேண்டி இருந்தது. அவர்தான் முதன்முதலாக  என்னை அன்னை ஆசிரமத்திற்கு அழைத்துச் சென்றார். முதன்முதலாக அன்னையின் திருவுருவப் படத்தை தரிசித்த உடனே என் மனம் இதுவரை காணாத நிறைவைக் கண்டது. அன்று முதல் அன்னையின் தீவிர பக்தனாகிவிட்டேன்.

கொஞ்ச நாளில் தனியாக ஒரு வீட்டை லீசுக்கு எடுத்து நானும் மனைவியும் குடியேறினோம். அந்த வீட்டின் அருகே நாகலிங்கப்பூ  கிடைக்கும். தினமும் அந்த மலரை வைத்து அன்னையை வணங்கத் தொடங்கினோம். அடுத்து கொஞ்ச நாளிலேயே சொந்த வீடு வாங்கிக்கொண்டு செல்லும் அளவுக்கு என் எஞ்சினியரிங் பிசினஸ் வளர்ந்தது.

அன்னை என்னை வளமாக்கினார். எங்களுக்கு மகன் பிறந்தபோது, அரவிந்தன் என்று பகவானின் பெயரை வைத்தேன். படிப்பில் எப்போதும் முதலிடத்தில் இருக்கிறான். தற்போது +2வில் 1155 மார்க் எடுத்து பள்ளியில் முதல் மாணவனாகத் தேர்ந்துள்ளான்.

இப்படி  நிறைவான நல்ல வாழ்வைத் தந்தருளிய அன்னைக்கு நன்றி செலுத்தும் விதமாக எல்லா  ஞாயிற்றுக்கிழமைகளிலும் சென்னையில் உள்ள அன்னை ஆஸ்ரம மையங்களுக்கு குடும்பத்தோடு சென்று சேவை செய்வதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறேன்!’’ என்று நெகிழ்கிறார், சென்னையைச் சேர்ந்த சுப்பையா.

வரம் தரும் விதை வழிகாட்டும் காபி

ஏதேனும் ஒரு செயலை ஆரம்பிக்கும்போது ‘என்ன செய்வது? எப்படிச் செய்வது?’ என்று வழி தெரியாமல் தவிக்க நேரும். அப்படியான சூழ்நிலையில் காபிக் கொட்டைகளை அரவிந்த அன்னைக்கு சமர்ப்பித்து வேண்டிக்கொள்ளுங்கள். உங்களுக்குத் தேவையான உதவியும் வழிகாட்டுதலும் அன்னையின் அருளால் உடனே கிடைக்கும்!

(பூ மலரும்)

எஸ்.ஆா்.செந்தில்குமாா்
ஓவியம்:மணியம் செல்வன்