நியூஸ் வே



தனது லேட்டஸ்ட் புராஜெக்டிற்காக ஷைனிங் ஃபேஸும், ஆப்பிள் வொயிட் கலருமாக செம ஸ்டைலிஷாக மாறியிருக்கிறார் சிவகார்த்திகேயன். பி.சி.ராம் ஒளிப்பதிவு, ரசூல் பூக்குட்டி சவுண்ட் எஞ்சினியரிங், அனிருத் மியூசிக் என பிரமாண்ட டீமோடு களமிறங்கிவிட்டார். ‘ஐ’ படத்தில் விக்ரமிற்கு மேக்கப் செய்த வீட்டா டீம் இதில் சிவாவுக்கு மேக்கப்! என்னவோ ஏதோ என கோலிவுட் பிரபலங்களிடையே எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கிறார் சிவா.

சென்னை உயர் நீதிமன்றத்தில் 22 நீதிபதி பணியிடங்கள் காலி. 60 பேர் இருக்கவேண்டிய இடத்தில் இருப்பது 38 நீதியரசர்கள். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக புதிய நியமனம் செய்யாததே காரணம்.

டைரக்டர் ஆனந்த் சங்கர்-விக்ரம் இணையும் படத்திற்கு ‘மர்ம மனிதன்’ எனப் பெயரிட்டு இருக்கிறார்கள். படத்தை இந்த மாதமே தொடங்கப் போகிறார்கள். அதற்காக சின்னதாக கெட்அப் செய்கிறார் விக்ரம். எடைக் குறைப்பு இல்லையாம்.

அப்புக்குட்டியை அஜித் எடுத்த போட்டோக்களுக்கு ஏகப்பட்ட அப்ளாஸ். செம மகிழ்ச்சியில் இருக்கிறார் சிவபாலன் என்கிற அப்புக்குட்டி. ‘‘எனக்குக் கிடைத்த பாக்கியம் இது’’ என அப்புக்குட்டி நெகிழ்வது ஒருபுறம் என்றாலும், இன்னொரு புறம், தனது போட்டோஷூட்டை பிரபலங்கள் பலரும் பாராட்டுவதால், அஜித்தும் செம ஹேப்பியாம்!

தனுஷ் தன் இரண்டு மகன்களையும் சினிமா நிகழ்ச்சிகளுக்குக் கூட்டிவருவதில்லை. ஆனால், அவர்கள் என்ன கேட்டாலும் அவர்களது ஆசையை நிறைவேற்றிவிடுகிறார். சமீபத்தில் தியேட்டரில் ‘ஜுராசிக் வேர்ல்ட்’ பார்க்க குழந்தைகளோடு மப்ளர் கட்டிக் கொண்டு மறைந்து வந்திருந்தார் தனுஷ். ரசிகர்கள் கூட்டம் வந்து விடும் என்பதே காரணம்.

அட்லி  இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்திற்கான பாடல்கள் அனைத்தையும்  ஜி.வி.பிரகாஷ் கொடுத்துவிட்டார். பின்னி மில்லில் பிரமாண்ட செட்டில் விஜய் - சமந்தா  டூயட் ஸாங்கோடு படப்பிடிப்பு ஆரம்பிக்கிறது.

செல்வராகவன்  டைரக்‌ஷனில் சிம்பு நடிக்கும் ‘கான்’, விஷ்ணுவுடன் ‘வீரதீர சூரன்’ என  கோலிவுட்டில் கேத்தரின் தெரஸா கொஞ்சம் பிஸி.  ‘கான்’ ஷூட்டிங்கில்  சிம்புவின் டெடிகேஷனைக் கண்டு ரொம்பவே வியக்குது பொண்ணு!

பாடகராகப் புகழ்பெற்று இப்போது மத்திய அமைச்சராக இருக்கும் பாபுல் சுப்ரியோ சமீபத்தில் தனது தொகுதியில் சாலை போட 26 லட்ச ரூபாய் ஒதுக்கினார். திறப்பு விழாவுக்குப் போனவர், சாலையில் நிறைய விரிசல்கள் இருப்பதைப் பார்த்து கடுப்பாகிவிட்டார். கான்டிராக்டரைக் கூப்பிட்டுத் திட்டியவர் சரி செய்த பிறகே திறப்பு விழா என கண்டிப்பாகச் சொல்லிவிட்டார்.

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங், தொழில்முறை வீரராக மாறப் போவதாக அறிவித்திருக்கிறார். இதனால் அடுத்த ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் அவர் இந்தியாவுக்காக பங்கேற்க முடியாது. ஆனால் கோடிகளில் சம்பாதிக்க முடியும். விஜேந்தர் இப்போது ஹரியானா போலீஸில் டி.எஸ்.பி.யாக இருக்கிறார். ‘‘இந்த வேலையில் இருந்தபடி தொழில்முறை குத்துச்சண்டை போட்டிகளில் சம்பாதிப்பது சட்டவிரோதம்’’ என அவரை டிஸ்மிஸ் செய்ய இருக்கிறது போலீஸ் துறை.

விக்ரம்  படத்தின் ஷூட்டிங்கிற்காக மலேசியா புறப்பட ரெடியாகிறார் காஜல் அகர்வால்.  தமன்னாவைப் போல ஜுவல்லரி பிஸினஸில் இறங்கியுள்ள காஜல், இப்போது மும்பையின் குடிசைப்பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பு தரும் சமூக சேவை அமைப்பு  ஒன்றுடனும் இணைந்து களமிறங்கியுள்ளார்.

விஜய் படத்தில் ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அது வடிவேலுவுக்காக ரிசர்வ் செய்து வைத்த கேரக்டர். வடிவேலு தரப்பில் சம்பளத்தில் ஒத்துழைப்பு இல்லை என்கிறார்கள்.

என்னதான் காதல் முறிந்தாலும், பழைய சிநேகிதிகளிடம் நட்பு பாராட்டுவதில் ஹாலிவுட்டை மிஞ்சுகிறார் சிம்பு. நயன்தாரா, ஹன்சிகாவை எங்கே பார்த்தாலும் ‘‘ஹலோ’’ சொல்லி, நின்று நிதானித்து பேசிவிட்டுத்தான் போகிறார். சிம்புவின் நாகரிகத்தை திரையுலகமே வியக்கிறது.

ஷாட் முடிந்தபின்னும் இயக்குநர் பக்கமே உட்கார்ந்திருக்கிறார் அஜித். அவருக்கு டைரக்‌ஷன் ஆசை அதிகரித்து வருவதை கூட நடிக்கும் நடிகர்கள் உறுதி செய்கிறார்கள். உறங்குகிற நேரத்தைக் குறைத்து தினமும் ஒரு நல்ல சினிமாவாவது பார்த்து விடுகிறார். இதற்காக மினி தியேட்டர் அவர் வீட்டில் உள்ளது.

சமீபத்தில் நடந்த  ஒரு விருது விழாவுக்கு ஸ்ருதி அணிந்து வந்த செம க்ளாமர்  காஸ்ட்யூம்தான் அந்த விழாவின் ஹைலைட்டாம். அவர் அஜித்தோடு இணையும் படத்தில் டாக்ஸி  டிரைவராக நடிப்பது அஜித் இல்லை; ஸ்ருதிதான். டாக்ஸி டிரைவரைப் போல  ஸ்ருதிக்கு காக்கியில் காஸ்ட்யூம் இருக்கிறது.

திருமணத்துக்குப் பிறகும் கிளாமர் ரோல்களில் நடிக்கிறார் கரீனா கபூர். ‘‘மற்றவர்கள் மாதிரி இல்லை என் மாமியார். ‘செக்ஸியான, கிளாமரான வேடங்களில் நடி. உனக்கென்ன வயதா ஆகிவிட்டது?’ எனக் கேட்கிறார். நான் பாக்கியசாலி’’ என பூரிக்கிறார் கரீனா.

இந்தி நடிகர் ஷாகித் கபூர், டெல்லி பெண்ணான மீரா ராஜ்புட்டை மணக்கிறார் என்கிற செய்திதான் இப்போது சமூக வலைத்தளங்களில் செம வைரல்! ஷாகித் நடிக்க வந்த புதிதில் கரீனா கபூருடன் டேட்டிங்கில் இருந்தார். அந்த உறவில் விரிசல் விழ... வித்யா பாலன், தீபிகா, பிரியங்கா, அனுஷ்கா வரை இணைத்து கிசுகிசுக்கப்பட்டார். கடைசியில் வீட்டில் பார்த்த பெண்ணான மீராவை ஓகே சொல்லியிருக்கிறார். இதற்கு இரண்டு வீட்டுக்கும் நெருக்கமான ஆன்மிக குருவே காரணம் என்கிறார்கள்.

ஒன்றரை கிலோமீட்டர் நீளம் கொண்ட பீட்சாவை உருவாக்கி கின்னஸ் சாதனை செய்திருக்கிறார்கள் இத்தாலி பீட்சா தயாரிப்பாளர்கள். அங்குள்ள சிறந்த அறுபது தயாரிப்பாளர்கள் இணைந்து மிலன் நகரில் நடைபெற்று வரும் உலக உணவுக் கண்காட்சியில் இரவு பகலாக இந்த பீட்சாவை உருவாக்கியிருக்கின்றனர். இதற்கு 18 மணி நேரம் செலவானதாம். 1.5 டன் இத்தாலி சீஸ், 2 டன் தக்காளி சாஸ், காய்கறிகள், பழங்கள் என மொத்தம் 5 டன்னில் தயாரிப்பு முடிந்திருக்கிறது.

‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’வில் சிவகார்த்திகேயனின் ஜோடியாக  வருவாரே ரெஜினா, ஞாபகம் இருக்கிறதா? சமீபத்தில் தெலுங்கு படத்தின்  ஷூட்டிங்கிற்காக அமெரிக்கா சென்று வந்திருக்கிறார். ரெஜினாவின் ஃபேவரிட்  ஹாபி, டிரெக்கிங். தமிழ்நாட்டில் ஏலகிரி மலை அவரது ஃபேவரிட் டிரெக்கிங்  ஸ்பாட்.

90களில் சினிமாவில் யானை, நாய், குரங்கு என விலங்குகள் எல்லாம் போட்டி போட்டுக் கொண்டு பக்தி செலுத்தி தமிழக மக்களை பரவசத்தில் ஆழ்த்தி வந்ததை யாரும் மறந்திருக்க முடியாது. அது சினிமா. நிஜத்தில் சமீபத்தில் தர்மபுரி மாவட்டம் பெரியாம்பட்டி அருகே தும்பல அள்ளி மாரியம்மன் கோயிலுக்கு
மாவிளக்கு எடுத்துவந்து வேண்டுதல் நிறைவேற்றியுள்ளது அப்பகுதியைச் சேர்ந்த தங்கவேல் என்பவரின் வளர்ப்பு நாய் மணி! செம்ம!

‘இஞ்சி  இடுப்பழகி’க்காக 14 கிலோ எடை அதிகரித்து, இப்போதைய நமீதாவிற்கு தங்கை  கெட்டப்பில் இருக்கிறார் அனுஷ்கா. ‘‘ ‘பாகுபலி’யில் போர்க்களக் காட்சியில் டூப்  இல்லாமல் நடிச்சிருக்கேன். ரிஸ்க்கான சீன்களில் நடிப்பதற்கு முன் ராஜமௌலி  சார் ரிகர்சல் பார்த்துவிடுவார். ஆபத்து இல்லை எனத் தெரிந்த பிறகே என்னை  நடிக்கச் சொல்லுவார்’’ என்கிறார் புன்னகையுடன்.

ஷூட்டிங் கிளம்புவதற்கு முன், அரை மணி நேரமாவது யோகா செய்கிறார் ஹன்சிகா. மும்பையில் வீட்டில் இருந்தால் இரண்டு மணி நேரம் யோகா ப்ராக்டீஸ் பண்ணுது பொண்ணு!