குட்டிசுவர் சிந்தனைகள்



வாரா வாரம் திங்கட்கிழமையானா வேலைய நினைச்சு பயமாயிருக்குற மாதிரி, வாரா வாரம் வெள்ளிக்கிழமையானா விமலை நினைச்சு பயமா இருக்கு. சொல்லப்போனா வெள்ளிக்கிழமை வருதோ இல்லையோ, வாரம் தவறாம விமல் படம் வந்திடுது. விதவிதமா நடிக்கிறவரு கமல்னு சொல்ல வச்ச மாதிரி, வெள்ளிக்கிழமை படம் வரவே நடிக்கிறவரு விமல்னு சொல்ல வச்சுடுவாங்க போல.

எத்தன், புலிவால், கேடி பில்லா, ஜன்னல் ஓரம், மஞ்சப்பை, தேசிங்கு ராஜான்னு படம் பேர எடுத்துட்டு பார்த்தா, எல்லா போஸ்டரும் ஒரே மாதிரி இருக்கே ப்ரோ. ‘வாகை சூட வா’ மாதிரி வித்தியாசமானதையே  வழக்கமா செய்யாட்டியும், வழக்கமா செய்யறதையே ‘கலகலப்பு’, ‘களவாணி’ மாதிரி வித்தியாசமா செய்யலாமே ப்ரோ. நல்ல திறமைசாலி நீங்க, கதை கேட்கிறப்பவும் கொஞ்சம் பொறுமைசாலியா இருந்தீங்கன்னா போதும். எங்களின் ஆசையும் ஆதங்கமும், வெள்ளிக்கிழமை விமலில் இருந்து நீங்க வெற்றிகரமான விமலா வரணும் என்பதுதான்!

ஜூலை ஒண்ணாம் தேதில இருந்து ஹெல்மெட் கட்டாயமா போட்டுக்கிட்டுதான் ரோட்டுல வண்டி ஓட்டணும்னு சொன்னாலும் சொன்னாங்க... இருமல் மருந்து விக்கிற கடையில இருந்து இரும்பு விக்கிற கடை வரை, பவுடர் விக்கிற கடையில இருந்து பருத்தி புண்ணாக்கு விக்கிற கடை வரை, சேலை விக்கிற கடையில இருந்து மாலை விக்கிற கடை வரை,  இன்றைய தேதில தமிழ்நாட்டுல டாஸ்மாக்க தவிர மீதி எல்லா கடையிலும் ஹெல்மெட் விக்கிறானுங்க.

ரோட்டுல பார்த்தா எல்லோரும் இந்த வோடபோன் விளம்பரத்துல வர்ற ஜூஜூ பொம்மை மாதிரி மண்டையோடதான் போறாங்க. அதுலயும் சிலபேரு பண்ற அலப்பறை இருக்கே, அப்பப்பா. என்னவோ நிலாவுல காலடி எடுத்து வைக்கிற நீல் ஆம்ஸ்ட்ராங் ரேஞ்சுக்கு பில்டப். போதாக்குறைக்கு ஹெல்மெட் போட்டுக்கிட்டு எடுத்த செல்ஃபிய வாட்ஸ்அப்ல ஃபார்வேர்ட் பண்ணி கொலையா கொல்றாங்க. அடேய், ஹெல்மெட் போட்டுக்கிட்டு போட்டோ எடுத்தா எல்லோரும் ஒரே மாதிரிதான்டா இருக்கீங்க, போட்டோல இருக்கிறது ஆம்பளையா பொம்பளையான்னு கூட தெரியலையேடா, என்னடா இப்படி பண்றீங்க?

இதுல பொண்ணுங்க வேற, என் ஸ்கூட்டி பிங்க் கலர், அதுக்கு மேட்ச்சா எனக்கு பிங்க் கலர் ஹெல்மெட்டுதான் வேணும்னு ‘பிரியா’ படத்துல தேவிய தேடுற ரஜினி மாதிரி தேடுறாங்க. ‘சார், உங்களை எங்கேயோ பார்த்திருக்கேன், நீங்க ஹெல்மெட் போட்டு இருக்கிறதுனால சரியா அடையாளம் தெரியல’, ‘டேய் நான் உன் அப்பாடா’ங்கிற வகை காமெடிங்க கூட சில இடங்களில் நடந்தேறிச்சு.

ஹெல்மெட் போட்டா தலைக்குப் பாதுகாப்பு என்பது உண்மைதான். ஆனா, ஹெல்மெட் மாட்டுன புதுசுல பல பேரு முன்னாடி இருக்கிற குழி, பின்னால அடிக்கிற ஹாரன்னு எதையும் கவனிக்க முடியாம ஆக்ஸிடென்ட் ஆகுறாங்க என்பதுதான் எதார்த்தம். அதனால் காவல் துறையினரே, சட்டம் அமலுக்கு வந்தாலும், மக்கள் ஹெல்மெட்டை பயன்படுத்தி பழகவும், அதன் பயன்பாட்டை அறியவும் ரெண்டு வாரம் அவகாசம் கொடுங்கள்.

கல்யாணம் பண்ற வயச தாண்டி அஞ்சு வருஷமானவனும் சரி, கல்யாணம் பண்ணி அஞ்சு வருஷமானவனும் சரி... ஒரே லெவல்லதான் சோகமா இருக்காங்க, சந்தோஷமா இருக்காங்க.  கல்யாணம் பண்ற வயச தாண்டி அஞ்சு வருஷமானவனையும் பக்கத்து வீட்டுக் குழந்தை ‘அங்கிள்’னுதான் கூப்பிடுது...

கல்யாணம் பண்ணி அஞ்சு வருஷமானவனையும் ‘அங்கிள்’னுதான் கூப்பிடுது. கல்யாணம் பண்ற வயச தாண்டி அஞ்சு வருஷமான ஆண்களுக்கும் சரி, கல்யாணம் பண்ணி அஞ்சு வருஷமான ஆண்களுக்கும் சரி... பெட்ரோல் விலை ஏற்றம், தியேட்டர்ல சினிமா டிக்கெட் விலை, சட்டை சைஸ்னு எல்லாமே சமமாதான் இருக்கு.

கல்யாணம் பண்ணினவங்களுக்குன்னு தனியா ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளும், கல்யாணமாகாதவங்களுக்குத் தனியா கிரிக்கெட் போட்டிகளும் நடத்தறது இல்லை. கல்யாணமானவர்களுக்கு ஸ்பெஷலா டாஸ்மாக் பார் நடத்துறதும், கல்யாணமாகாதவர்களுக்கு டாஸ்மாக்கில் சரக்கு தரமாட்டோம்னு சொல்றதும் இல்ல. கல்யாணமானவர்களுக்கும் பிரதமர் மோடிதான், கல்யாணமாகாதவர்களுக்கும் அதே மோடிதான். ஏன் மோடியே கல்யாணமாகி கல்யாணமாகாதவர்தான்.

இந்தா இப்ப தொடங்கின மெட்ரோ ரயில்ல கூட கல்யாணமாகாதவங்களுக்கு, கல்யாணமானவங்களுக்குன்னு தனித்தனி இருக்கைகள் இல்ல. எல்லோருக்கும் ஒரே டிக்கெட்தான். சலூன்ல முடி வெட்டுறதுல, கோயில்ல திருநீறு கொடுக்கிறதுல, ஹோட்டல்ல சர்வீஸ் பண்றதுல, கெட்டிச் சட்னி கேட்டா முறைச்சு பார்க்கிறதுலன்னு எல்லாத்துலயும் ஒரே மாதிரிதானே நடத்துறாங்க. ஏ சமூகமே, இப்படி எல்லா இடத்துலயும் எங்களை ஒரே மாதிரி நடத்துற நீ... ஒட்டுமொத்தமா பார்க்கிறப்ப மட்டும் கல்யாண வயச தாண்டியும் பேச்சிலரா இருக்கறவங்களை ஏன் தீவிரவாதிய பார்க்கிற மாதிரி பார்க்குற?

தீபாவளிக்கு மிச்சம் வச்ச பட்டாச கார்த்திகைக்கு வெடிக்கிறதும், துவைச்ச துணிமணிகள காய வச்சு மடிக்கிறதும், தான் காதலிக்கிற பொண்ணுக்காக தன்னைக் காதலிக்கிற பொண்ணை எம்ஜிஆர் தங்கச்சியாக்குறதும்,  ஆயிரம் வேலை கிடந்தாலும் கடைசி அஞ்சு ஓவர் பார்க்கிறதும், அதிகம் படிக்க முடியாதவன் ஆடு மாடுகளை மேய்க்கிறதும், கூட இருந்தவன் முன்னேறுனா குழி பறிச்சு சாய்க்கிறதும், சீட்டு சேராட்டியும் செகண்ட் ரம்மிக்கு ஜோக்கர சேர்க்கிறதும், அன்புக்காக பழகுனவங்களோட தெரிஞ்சே தோற்கிறதும்,

மழை பெய்ஞ்சாலே மெட்ராஸ் ரோடு அரிக்கிறதும், இரும்பே தின்னாலும் இஞ்சி மரப்பா தின்னா செரிக்கிறதும், ஓசில சரக்கு கிடைச்சா மூச்சு முட்ட குடிக்கிறதும், பசங்கன்னா பரீட்சைக்கு முதல் நாள் மட்டும் படிக்கிறதும், ஊரு பண்ணையாரை உள்ளூர் ஹீரோ எதிர்க்கிறதும், தீர்ந்து போன பேஸ்ட்டை கடைசி வரை பிதுக்கிறதும், இடைத்தேர்தல் வந்தாலே ஆளுங்கட்சி ஜெயிக்கிறதும் சகஜம்தானேப்பா.

அதுக்காக, ஒரு வார்டுல மொத்த வாக்காளர் எண்ணிக்கைய விட பதிவான ஓட்டுகளின் எண்ணிக்கை அதிகமா இருக்கிறது ரொம்ப ஓவர்! யாருக்குத் தெரியும், ஒருவேளை ‘மொத்த வாக்குகளின் எண்ணிக்கைக்கு மேல 10 சதவீதம் அதிகமா பதிவானா தப்பில்லை’ன்னு சட்டத்தில இடமிருக்கோ என்னவோ!

ஆல்தோட்ட பூபதி