கிச்சன் to கிளினிக்



உணவு விழிப்புணர்வுத் தொடர் 24

தாய்ப்பாலிலும் கலக்கும் பூச்சிமருந்துகள் !


புகழ்பெற்ற கடல்வாழ் உயிரியல் நிபுணரும் சூழலியலாளருமான ரேச்சல் கார்சன் 1962ல் ‘மெளன வசந்தம்’ என்ற உலகப் புகழ்பெற்ற நூலை எழுதினார். வேளாண்மையில் நாம் பயன்படுத்தும் ரசாயனங்கள் நம்மைச் சுற்றி என்னென்ன பாதிப்புகளை எல்லாம் ஏற்படுத்துகின்றன என்பதைப் பற்றி அந்நூல் உலகிற்கு அறிவித்தது.

அமெரிக்காவின் மிகப் பிரசித்தி பெற்ற ராபின் பறவை பனிக்காலத்தில் இங்கிலாந்து போன்ற நாடுகளுக்குச் சென்று விடும். வசந்த காலம் பிறக்கும்போதுதான் நாடு திரும்பும். இந்த ராபின் பறவை இனம் 1950களின் இறுதியில் படிப்படியாக காணாமல் போக ஆரம்பித்தது. இதற்கான காரணம் தெரியாமல் பல்வேறு ஆய்வுகள் செய்யப்பட்டன.

ஒரு முக்கியமான பறவை இனம் காரணம் ஏதுமின்றி இப்படி அழிந்து போவது அமெரிக்க விஞ்ஞானிகளுக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது.ராபின் பறவைகளைத் தொடர்ந்த விஞ்ஞானிகள் இங்கிலாந்து சென்ற பறவைகள் திரும்பவில்லை என்ற உண்மையைக் கண்டுகொண்டனர்.

இங்கிலாந்தின் சாலை ஓர மரங்களில் இருந்த புழுக்களை ராபின் பறவை உணவாக உண்பதும், புழுக்களைத் தின்ற பறவைகள் இறந்து போவதும் கண்டுபிடிக்கப்பட்டது. அப்படி புழுக்களில் என்னதான் இருக்கிறது என்ற கேள்விக்கு பதில் தெரிந்தபோது விஞ்ஞானிகளுக்கு அதிர்ச்சி ஏற்பட்டது.

1956ம் ஆண்டில் இங்கிலாந்து நாட்டின் சாலையோர மரங்களில் உள்ள இலைகளை ஒரு வித வண்டுகள் தின்று அழித்தன. அந்த வண்டுகளைக் கட்டுப்படுத்தவும்,  அழிக்கவும் ஹெலிகாப்டர் மூலம் பூச்சிக்கொல்லிகள் தெளிக்கப்பட்டது. வண்டுகள் செத்துப்போயின. ஆனால் பூச்சி மருந்து தெளிக்கப்பட்ட அந்த மரத்திலிருந்து நஞ்சு படிந்த இலைகள் உதிர்ந்து, அதைத் தின்ற மண்புழுக்கள் இறந்தன.

இறந்த மண்புழுக்களைத் தின்ற ராபின் பறவைகளும் அழிந்து போயின. மண்புழுவை உண்டும் சாகாமல் உயிர் பிழைத்திருந்த பறவைகள் கூடு கட்டவில்லை. சற்றுக் குறைவாக மண்புழுவை உண்ட பறவைகள் கூடு கட்டின. ஆனால் முட்டையிடவில்லை; இருந்த சில முட்டைகளில் 13 நாட்களில் குஞ்சு பொரிக்க வேண்டும். ஆனால் 21 நாட்களுக்குப் பின்பும் முட்டையில் எந்த மாறுதலும் இல்லை.

அமெரிக்காவில் வாழும் ராபின் பறவைகள் ஆறாயிரம் கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் இங்கிலாந்தில் தெளிக்கப்பட்ட பூச்சிக் கொல்லிகளால் பாதிக்கப்பட்டன. பூச்சிக் கொல்லிகளின் பாதிப்பு ராபின் பறவைகளோடு முடியவில்லை.

மரங்களுக்கு மருந்து தெளிக்கப்பட்டபோது  நீரில் விழுந்த நஞ்சால் மீன்களும் செத்துப் போயின. இப்படி ஒரு பிரச்னைக்காக நாம் ரசாயனங்களை நாடுகிறபோது, அதிலிருந்து புதிய பல பிரச்னைகள் கிளம்புவதை அனுபவங்கள் உணர்த்துகின்றன.

அமெரிக்காவின் தேசியப் பறவையான வழுக்கைத்தலை கழுகும் மெல்ல மெல்ல அழிந்து வருவது, ரசாயன பூச்சிக் கொல்லிகளால் புற்றுநோய் அதிகமாவது உள்ளிட்ட பல விஷயங்களை ‘மெளன வசந்தம்’ நூலில் எழுதி உலகையே அதிர வைத்த  ரேச்சல் கார்சன், புற்றுநோயாலேயே மரணமடைந்தார்.

இது அமெரிக்க அனுபவம் மட்டுமல்ல. நம் பக்கத்து மாநிலமான கேரளாவின் முந்திரிக் காடுகளில் பூச்சித்தாக்குதலைக் கட்டுப்படுத்த எண்டோசல்ஃபான் தெளித்தபோது என்ன ஆனது என்பது நமக்குத் தெரியும். அதன் விளைவுகள் இப்போது பிறக்கும் குழந்தைகள் வரை தொடர்வது கண்டுதான் மத்திய அரசு எண்டோசல்ஃபானுக்கு தடை விதித்தது.

‘‘நாம் சாதாரணமாகப் பயன்படுத்தும் பூச்சிக்கொல்லிகள் காற்றிலும், நீரிலும் பரவி விஷத்தன்மையை உருவாக்குகின்றன. இதே போன்ற நஞ்சை நம் நாட்டில் ஆண்டுதோறும் ஆயிரம், லட்சம் கிலோ அளவில் நமது பயிரிலும், நிலத்திலும், நீரிலும், காற்றிலும் கலந்து கொண்டே இருக்கிறோம்’’ என்று கூறுகிறார் இயற்கை வேளாண் விஞ்ஞானி முனைவர் நம்மாழ்வார் அவர்கள்.

ஒரு தாவரத்தில் ஏற்படும் பூச்சித் தாக்குதலைக் கட்டுப்படுத்த விஷத்தன்மையுள்ள ரசாயனத்தைப் பயன்படுத்துகிறோம். அதே விஷத்தன்மையால் நாமும், நம்மைச் சுற்றியுள்ள பலவிதமான உயிரினங்களும் பாதிப்படைவதைக் கண்டுகொள்வதில்லை. விஷத்தால் வளர்க்கப்படும் பயிர்களிலும், அவற்றிலிருந்து பெறப்படும் காய்கறிகள், பழங்களிலும், நம்மைச் சுற்றியுள்ள காற்றிலும், ரசாயனம் தெளிக்கப்படும் மண்ணிலும் நச்சுத்தன்மை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

பூச்சி மருந்துகள், உரங்கள் பயன்படுத்தப்பட்ட தாவரங்களை உண்டு வாழும் ஆடு, மாடுகள் பாதிக்கப்படுகின்றன. அவற்றிலிருந்து நாம் பெறும் பால் பாதிக்கப்படுகிறது. இப்படி ஒரு சங்கிலித் தொடர் போல பாதிப்பின் பயணம் நீளமானது.

பஞ்சாப் பல்கலைக்கழக பூச்சியியல் துறையைச் சேர்ந்த முனைவர் பல்விந்தர் சிங், நாம் பயன்படுத்தும் ரசாயனங்கள் எப்படிப் பரவலாகி நச்சுத் தன்மையை அதிகரிக்கின்றன என்பதை பல ஆய்வுகளைக் கொண்டு நிரூபித்துள்ளார்.

கோதுமை, அரிசி, மக்காச்சோளம் என நமது தட்டில் முதன்மை உணவாக வந்து சேரும் அனைத்திலும் நஞ்சு கலந்திருந்தது. கோதுமையை மாவாக அரைத்தாலும் நஞ்சு குறையவில்லை. மாவை சப்பாத்தியாகச் சுட்டாலும் நஞ்சின் அளவு மாறவில்லை. கடைகளில் விற்பனையாகும் வெண்டைக்காய், உருளைக்கிழங்கு, கேரட், காலிஃப்ளவர், முட்டைக் கோஸ்... இப்படி சமையலுக்குப் பயன்படும் காய்கறிகளும் நஞ்சிலிருந்து தப்பவில்லை.

பால், வெண்ணெய், நெய் போன்ற கால்நடை தரும் உணவுப்பொருட்களை சோதித்தார்கள். சோதிக்கப்பட்ட 244 மாதிரிகளிலும் நஞ்சு கலந்திருப்பது கண்டறியப்பட்டது. ‘‘நாம் உண்ணும் உணவில் 10 லட்சம் பாகத்திற்கு 11.4 அளவு நஞ்சு இருந்தாலே அது உடல்நலத்தைப் பாதிக்கும் காரணியாக மாறுகிறது’’ என்று கூறுகிறது உலக சுகாதார நிறுவனம். அதாவது, 1000 லிட்டர் பாலில் 11.4 மி.லி. விஷம் இருந்தாலே பால் முழுவதும் விஷத்தன்மையுடன் செயல்படும். பஞ்சாபில் நடத்தப்பட்ட பரிசோதனையில் இதை விட அதிகமான நஞ்சு கலந்திருந்தது.

பஞ்சாப் மாநிலத்தில் குழந்தை பெற்ற 130 தாய்மார்களின் பால் மாதிரிகளை பரிசோதித்தார்கள். அனைத்திலுமே நஞ்சு கலந்திருந்தது. ஒரு குழந்தை ஒரு நாளைக்கு 600 மி.லி. தாய்ப்பால் குடிப்பதாக வைத்துக் கொண்டால், அந்த சிசு மூன்று நாட்களில் ஒரு மி.லி. நஞ்சை உட்கொள்கிறது. 1983லேயே பஞ்சாப்பில் தாய்மார்களின் மார்பிலிருந்து பாலோடு நஞ்சும் சேர்ந்து சுரப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின்பும் நாம் உணவுப் பயிர்களில் ரசாயனங்கள் பயன்படுத்துவதைக் குறைத்துக் கொள்ளவில்லை. இன்னும் அதிகமாக்கி இருக்கிறோம்.

நாம் ஏன் இப்படிப்பட்ட ஆய்வுகளுக்கு பஞ்சாப்பை எடுத்துக் கொள்கிறோம்? பஞ்சாப்பில்தான் பசுமைப்புரட்சி வெற்றிகரமாக நிறைவேறியதாக நம் அரசுகள் அறிவித்தன. நம் நாடு முழுவதும் நடைபெற்ற ரசாயனப் பயன்பாட்டிற்கு பஞ்சாப்தான் முன்னுதாரணம்.

சமீபத்தில் இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் 217 உணவுப்பொருட்களுக்கு அமெரிக்கா தடை விதித்திருப்பதற்கும், தமிழ்நாட்டிலிருந்து அனுப்பப்படும் காய்கறிகளுக்கு கேரளா தடை விதித்திருப்பதற்கும் அரசியல் காரணங்களைத் தாண்டி அதில் கலந்திருக்கும் பூச்சிக்கொல்லி மருந்துகள் தான் காரணம் என்பதை நாம் மறுக்க முடியாது. அந்த அளவிற்கு பிற நாடுகளை விட, நம் நாட்டின் வேளாண்மையில் ரசாயனப் பயன்பாடு அதிகம்.

நம் உணவுகளை நஞ்சாக்கி, நம்மை கிளினிக்கிற்கு அனுப்பும் ரசாயனப் பொருட்களில் வேளாண்மை நஞ்சுகள் மிக முக்கியப் பங்கை வகிக்கின்றன.1983லேயே பஞ்சாப்பில் தாய்மார்களின் மார்பிலிருந்து பாலோடு நஞ்சும்  சேர்ந்து சுரப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின்பும் நாம் உணவுப் பயிர்களில் ரசாயனங்கள் பயன்படுத்துவதைக் குறைத்துக் கொள்ளவில்லை.

(தொடர்ந்து பேசுவோம்...)

படங்கள்: புதூர் சரவணன்
மாடல்: ப்ரியங்கா