கவிதைக்காரர்கள் வீதி



*ஆடு மேய்த்த சிறுவனை
பள்ளிக்கு இழுத்துச் சென்றது
மழை

*ஒழுகும் குடிசையில்
நனையாமல் இருக்கிறது
அடகுக்கடை ரசீது

*கற்ற கோலம்
வரைய விடாமல் செய்தது
வாசலில் தேங்கிய
மழை நீர்

*கொலுசின்
இசையைத்
திருடியது
வறுமை

*அரிவாள்
வெட்டியதில்
இனித்தது
இளநீரின் ரத்தம்

*மணல் திருடும்
வாகனத்தில்
மழை நீரை
சேமிக்கச் சொல்லும் வாசகம்

*விற்ற வயல்...
என்ன செய்யுமோ
அந்தக் குருவிகள்

*மீதமிருந்த சோற்றை
சுரண்டித் தின்று
ஈயச் சட்டியை
கழுவிக் கவிழ்க்க முற்பட

வரிசை கட்டி
ஊர்ந்து வந்த
எறும்புகளுக்காக
விட்டு வைத்தேன்
சட்டிக்குள்
ஒற்றை பருக்கையை!

துளசி ராஜா