ஐந்தும் மூன்றும் ஒன்பது...



மர்மத் தொடர் 26

“அந்தக் கல்வெட்டுப் பாடலை நான் திரும்பத் திரும்பப் படித்தேன்.
‘சித்திரைச் சந்திர வெள்ளி எழும் பின் பிரம்மத்தில்
முத்திரைப் பொன்னின் இத்தரைப் பாகம் சக்கரைப்பானை
கிழங்கென ஒளிரும் - அத்தரை சித்தரே காண
பத்தரை மாற்றுப் பத்திரமாம் இது சத்தியமே... நஞ்ச
மண முனி பகர்வதிந்த சாட்சியமே!’

- எனும் அந்தக் கல்வெட்டுப் பாடல் 100 முதல் 200 ஆண்டுகளுக்குள் ஏதோ ஒரு நாளில் ஒரு முனிவரால் வெட்டப்பட்டது என்பது எனக்கு விளங்கி விட்டது. நிச்சயமாய் பெஸ்கி எனப்படும் வீரமாமுனிவரின் பாடல்களோடு தொடர்புடைய ஒருவர் இந்த முனிவர் என்பதையும் நான் உறுதி செய்து கொண்டேன். மேற்கோள் குறி, ஆச்சரியக் குறி, இடைக்கோடு என்று இதில் காணப்பட்ட குறிகளே அதற்கு சான்று.

இதன் அர்த்தம் மேலோட்டமாகப் பார்த்தால் ஒருவிதமாக இருக்கும். நுணுக்கமாய் வார்த்தைகளை வெட்டிப் பிளந்து பார்த்தால் வேறுவிதமாக இருக்கும். வெட்டிப் பிளந்து பார்த்தாலே பொருளானது தெளிவாகவும், சரியாகவும் புரியும். இல்லாவிட்டால் நாம் ஏமாற்றத்துக்கு ஆளாவோம்.‘சித்திரைச் சந்திர வெள்ளி எழும் பின் பிரம்மத்தில்’ எனும் முதல் வரிக்குப் பொருள், ‘சித்திரை பௌர்ணமி நாளின் அதிகாலைப் பொழுதில்’ என்று பொருள்... ‘முத்திரைப் பொன்னின் இத்தரைப் பாகம்’ என்றால் ‘தங்கம் கொண்ட தரைப்பகுதி’ என்பது பொருள்...

‘சக்கரைப் பானை கிழங்கென ஒளிரும்’ - பொங்கல் பானையை சக்கரைப் பானை என்போம். அதில் கட்டப்படும் கிழங்கு மஞ்சள் கிழங்கு - ‘அந்த மஞ்சள் கிழங்கு போல் மஞ்சள் நிறத்தில்’ என்று பொருள்... ‘அத்தரை சித்தரே காண பத்தரை மாற்றும் பத்திரமாம்’ என்றால் ‘தங்கம் கொண்ட அந்த தரைப்பகுதியை ஒரு சித்தன் பார்த்தால் இங்கே தங்கம் இருக்கிறது என்று தெரிந்து கொள்வான்’.

அதாவது பத்தரை மாற்று என்பது பத்தரை மாற்றுத் தங்கத்தை குறிக்கிறது. அப்படிப்பட்ட தங்கம் இருப்பது சத்தியமான உண்மை. ‘நஞ்ச மணமுனி பகர்வதிந்த சாட்சியமே’ எனும் வரிகளில்தான் வார்த்தையைப் பிளந்து பார்க்கத் தெரிய வேண்டும். நஞ்ச மணமுனி என்ற பதத்தை நன் சமணமுனி என்றும் கொள்ளலாம்.

‘அப்படிப்பட்ட நல்ல ஒரு சமணமுனியாகிய நானே இதற்கு சாட்சி’ என்று முடிகிறது பாடல்! இந்தப் பாடல் அந்தப் பகுதியில் தங்கம் இருப்பதை உறுதி செய்து விடவும் எங்கள் குழு பரபரப்புக்கு ஆளாயிற்று..!’’ - கணபதி சுப்ரமணியனின் ஆய்வுக் கட்டுரையிலிருந்து...

இரவின் பிடியில் அந்த உருவத்தை வர்ஷன் பார்க்கவில்லை. பார்க்கக்கூடிய விதத்திலும் அந்த உருவம் தென்படவில்லை. அப்போது மொட்டை மாடி நோக்கி யாரோ வரும் சப்தம் கேட்கவும், வர்ஷன் பீர் பாட்டிலை மறைத்துக் கொண்டு யார் என்பது போல பார்த்தான். ‘‘நான் பிறகு பேசுகிறேன்’’ என்று போனையும் கட் செய்தான்.கையில் பாய், தலையணை மற்றும் கொசுவத்திச் சுருளோடு அப்பார்ட்மென்ட் வாசி ஒருவர் வந்து கொண்டிருந்தார்.

‘‘யாருப்பா நீ... இங்க என்ன பண்றே? நில்லு... முகத்தைக் காட்டு...’’ - என்கிற அவர் குரலும் கேட்டது. பதில் குரல் இல்லை. மாறாக அவர் கேள்வி கேட்ட நபர், பதில் கூறாமல் அவரைக் கடந்து கீழே இறங்கிச் செல்வது அவர் பேச்சை வைத்தே தெரிய வந்தது.‘‘ஏய்... என்ன நான் கேட்டுக்கிட்டே இருக்கேன். நீ பாட்டுக்கு பதில் சொல்லாம போய்க்கிட்டிருக்கே...’’ என்ற அந்த வார்த்தைகள் வர்ஷனை கூர்மையாக்கின. அவர் குரல் வர்ஷனுக்குப் புதியதில்லை. கீழே கிரவுண்ட் ஃப்ளோரில் இருக்கும் கோயில் குருக்கள் ஒருவர்தான் அவர்.

அந்த குருக்கள் வருவதற்குள் பீரை மடமடவெனக் குடித்துவிட்டு, அதைத் தண்ணீர் தொட்டி தூணை ஒட்டி ஒளித்தும் வைத்து விட்டு வந்து நின்றான்.
அவரும் வந்து நின்றார்.‘‘யாரது?’’‘‘நான்... நான் வர்ஷன்தான் குருக்களே!’’
‘‘வர்ஷனா... அது யாருப்பா கேக்க கேக்க பதிலே சொல்லாம போறான்?’’
‘‘அப்படியா... யாருன்னு தெரியலியே!’’

‘‘தெரியலியா... அப்ப இங்க அவன் உன் கூட இல்லையா?’’
‘‘நான் மட்டும்தான் குருக்களே இருக்கேன்...’’
‘‘அப்ப அவன் யார்? முகத்தைக் கூட காட்டாம எதுக்கு அவ்வளவு வேகமாக என்னைத் தாண்டிப் போறான்?’’
‘‘அதான் போய்ட்டான்ல... விடுங்க! அப்பார்ட்மென்ட் வீடுகள்ல யார் வீட்டுக்காவது வந்த ரிலேட்டிவா இருக்கலாம்.’’
‘‘ரிலேட்டிவா இருந்தா நின்னு சொல்லலாமே... திருடன் மாதிரியா ஓடணும்?’’

‘‘விடுங்க குருக்களே! நாம வேற விஷயம் பேசுவோம்...’’
‘‘என்ன வர்ஷன் நீ... சாதாரணமா இதை நினைக்கறே? பக்கத்துத் தெரு அப்பார்ட்மென்ட்ல ஒரு பாட்டியோட கழுத்தை நெரிச்சுக் கொன்னு பாடியை ஃப்ரிட்ஜுக்குள்ள வெச்சு பூட்டிட்டும் போய்ட்டான் ஒரு கொலைகாரன்!  விஷயம் வெளிய தெரிய வர்றதுக்கே நாலஞ்சு நாள் ஆயிடிச்சு. அப்புறம் போலீசும் நாயும் வந்து என்னத்தை செய்ய முடியும்? கொலைகாரன் இந்த ஸ்ேடட்டை விட்டு இல்ல, நாட்டை விட்டுக்கூட போயிருப்பான்!’’

‘‘அப்படி யாராவது இருப்பான்னு சந்தேகப்படறீங்களா?’’
‘‘படணும்ப்பா... காலம் அப்படி!’’

- பாய் விரித்தபடியே சூடானார் குருக்கள். வர்ஷனுக்குள்ளும் ப்ரியா சொன்னது நெளிய ஆரம்பித்தது. கச்சிதமாய் ப்ரியாவிடம் இருந்து திரும்பவும் அழைப்பொலி.
‘முன்பே வா... என் அன்பே வா...’‘‘யாருப்பா... உன் வருங்காலமா?’’ - குருக்கள் மிகச் சரியாகவே கேட்க, ஒதுங்கிப் போய் பேசத் தொடங்கினான் வர்ஷன்.
‘‘என்ன வர்ஷன்... எதுக்கு டக்குன்னு கட் பண்ணே? இப்ப பேசலாம்தானே!’’‘‘நான் என் ரூமுக்குப் போயிடறேன். போய்ட்டு கூப்பிடறேன்!’’

‘‘கட்டாயம் கூப்பிடு. எனக்கு ஒரே படபடப்பா இருக்கு. உன் கூட பேசறதுதான் இப்போதைக்கு எனக்கு ஒரே ரிலாக்ஸ்...’’
‘‘எனக்கும் இங்க அப்படித்தான்... ‘நம்மைக்கூட யாராவது வாட்ச் பண்ணிக்கிட்டு இருக்கலாம்’னு நீ சொன்னது ஹண்ட்ரட் பர்சன்ட் கரெக்ட். இங்க ஒருத்தன் மொட்டை மாடில எனக்கே தெரியாம நின்னுக்கிட்டு இருந்துருக்கான்...’’‘‘மை காட்! அவன் யார்னு தெரிஞ்சதா?’’

‘‘இல்ல... ஓடிட்டான்! இரு, ரூமுக்குள்ள போய்ட்டு கூப்பிடறேன். இங்க குருக்கள் ஒருத்தர் மேல மொட்டை மாடில படுத்துத் தூங்க வந்துட்டார், இங்க இனி பேச முடியாது...’’‘‘மொட்டை மாடில குருக்கள் படுத்துத் தூங்கப் போறாரா... அவன் என்ன லூசா! கொசு பிச்சு எடுத்துடாது?’’
‘‘கொசுவத்தியோட வந்துருக்கார். கீழ அவர் பொண்ணும் மாப்பிள்ளையும் வெளியூர்ல இருந்து வந்திருக்காங்க... சிங்கிள் பெட்ரூம் ஃப்ளாட். உனக்குப் புரியும்னு நினைக்கறேன்.’’

‘‘ஓ... அதுவா விஷயம்?’’
‘‘சரி... சரி... நான் கூப்பிட்றேன்.’’
- திரும்ப கட் செய்தான். குருக்களிடம் வந்தான். அவர் வானில் நட்சத்திர மண்டலத்தைப் பார்த்தபடி இருந்தார்.
‘‘குருக்களே... என்ன பாக்கறீங்க?’’

‘‘நட்சத்திர மண்டலம்பா... அதோ மிருகசீரிஷ நட்சத்திர மண்டலம். இன்னிக்கு மிருக
சீரிஷ நட்சத்திரம்!’’‘‘அப்படின்னா?’’‘‘ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நட்சத்திரத்தோட பிடியில இருக்கோம். சம்பந்தப்பட்ட நட்சத்திரமும் வானத்துல தெரியும்.’’
‘‘லட்சக்கணக்குல நட்சத்திரங்கள் இருக்கு. இதுல மிருகசீரிஷம்னு பர்ட்டிகுலரா ஒரு கூட்டத்தைக் காட்டி, அதோட பிடியில நம்மளோட நாள் இருக்குன்னா எப்படி குருக்களே?’’

‘‘கோடிக்கணக்குல கூட நட்சத்திரங்கள் இருக்கலாம். ஆனா குறிப்பிட்ட திசையில, குறிப்பிட்ட தூரத்துல இருக்கற நட்சத்திர மண்டலம்தான் பூமி மேல ஆதிக்கம் செலுத்த முடியும்...’’‘‘அதனால என்ன இப்ப?’’‘‘என்னடா அம்பி! அதனால என்னன்னு சாதாரணமா கேட்டுட்டே. இதுக்குப் பேர்தான் அஸ்ட்ராலஜி. நட்சத்திரம், கிரகம் இதெல்லாம்தானே நம்மளை ஆட்டிப் படைக்கறது?’’

‘‘அது எங்கேயோ இருக்கு... அது எப்படி நம்மை ஆட்டிப் படைக்க முடியும்?’’‘‘இங்க இருந்துண்டே நாம ஸ்பேஸ்ல விண்கலங்களை ஆட்டி வைக்கறோமே... அது எப்படி?’’‘‘நாமதானே அவற்றை மேல அனுப்பி வெச்சோம். நாம அனுப்பினது நம்ம கன்ட்ரோல்லதானே இருக்கும்?’’

‘‘இதே நியாயம்தான் கிரகங்களுக்கும்... அதுகளோட டைரக்‌ஷன்லதான் நாம பூமிக்கு வந்தோம். அப்ப அதுகளோட பிடியிலதானே நாமளும் இருந்தாகணும்?’’
‘‘குருக்களே! நீங்க சயின்ஸையும், கற்பனையையும் ஒண்ணா பார்த்து, ஒண்ணா நினைச்சு பேசறீங்க. என் அப்பாவும் அம்மாவும் சேரப் போய், அவங்க உயிரணுக்களாலதான் நான் இந்த பூமிக்கு வந்தேன். எந்த கிரகமும் என்னை அனுப்பி வைக்கல.

அதோட, நான் உயிருள்ள மனுஷன். கிரகம்ங்கறது கல், மண் மாதிரி ஒரு ஜடம். எந்த ஜடத்தாலயும் உயிரை ஆட்டிப் படைக்க முடியாது. ஆனா உயிருள்ள மனுஷன் ஜடத்தை என்ன வேணா செய்யலாம். இதை நீங்க புரிஞ்சுக்குங்க...’’- வர்ஷன் இறங்குவதற்காக படிகளை நோக்கி நடந்தபடியேதான் அவருக்கு பதில் சொன்னான்.‘‘அம்பி, நில்லு... இன்ட்ரஸ்ட்டிங்கான டாபிக்கை தொட்டுட்டு அப்படியேபோறியே?’’

‘‘வேலை இருக்கு குருக்களே! அப்புறம் உங்கள மாதிரி ஆட்கள்கிட்டல்லாம் சயின்ஸைப் பற்றிச் சொல்லிப் புரிய வைக்கறதும் ரொம்ப கஷ்டம். நீங்க மூட நம்பிக்கைகளோட பேசறவங்க. நாம தொடர்ந்து பேசினா சண்டைலதான் அது முடியும்!’’‘‘இதோ பார்...

இப்ப எனக்கு வேலை இருக்குன்னு பொய் சொல்லாதே. வா இப்படி! உட்கார்ந்து பேசு. நான் ஒண்ணும் சயின்ஸுக்கு எதிரியில்ல. நான் அந்தக் கால எஸ்.எஸ்.எஸ்.சி. சயிஸ்லதான் அதிக மார்க் எடுத்தேன்...’’‘‘அது பாடம் குருக்களே! படிச்சுட்டு எழுதறதுங்கறது வேற... விஞ்ஞானத்தை சரியா புரிஞ்சுக்கறது வேற...’’

‘‘சரியா புரிஞ்சுக்கறதுன்னா?’’‘‘எப்படிச் சொன்னா உங்களுக்குப் புரியும்னு தெரியலியே... ஆங் - உங்களுக்கு சரியான விஞ்ஞான அறிவு இருக்குன்னா நீங்கள் கோயில்ல குருக்களா எல்லாம் இருக்க மாட்டீங்க...’’‘‘எதை வச்சு சொல்றே?’’‘‘கோயில்ல இருக்கறது ஒரு சிலை.

அதை ரசிக்கலாம். ஆனா அது நம்மை விட மேலானதுன்னு அதை உயிருள்ளதா நினைச்சு கும்பிடறது, பிரார்த்தனை பண்ணிக்கறதெல்லாம் வேஸ்ட்.’’‘‘வேஸ்ட்டா?’’‘‘பின்ன... அது சுப்பீரியர் - பவர்ஃபுல்லானதுன்னா நீங்க இப்படியா இருப்பீங்க. உங்க லைஃப் நாங்க தட்டுல போடற காசுகளை நம்பியா இருக்கும்?’’‘‘அம்பி... தட்டுல விழற காசுக்குப் பேர் ‘காணிக்கை’. அது ஒருவித தர்மம். நான் தர்மம் பண்ணக் காரணமா இருக்கறவன்.

காணிக்கையை நான் ஏத்துக்கறேன். அவ்வளவுதான் அதுக்குள்ள இருக்கற விஷயம். நான் சந்தோஷமா இருக்கறதுங்கறது என் கர்மாவைப் பொறுத்த விஷயம்பா...’’
‘‘தெரியும்... இங்கதான் நீங்க வந்து நிப்பீங்கன்னு... விடுங்க - நிச்சயம் நாம பேசிக்கிட்டா சண்டையிலதான் முடியும். அப்புறம் உங்க கூட பேசற ஒரு மனநிலைலயும் நான் இப்ப இல்லை. இன்னொரு சந்தர்ப்பத்துலபேசறேன்...’’- வர்ஷன் விறுவிறுவென்று விலகி, அவன் அப்பார்ட்மென்ட் அறைக்குள் நுழைந்து கதவையும் தாழிடப் போனான்.

ஹாலில் சன் டி.வியில் அனுஷா ‘ஆதிரா’ பார்த்தபடி இருந்தாள். அவன் கதவைத் தாழிடும்போது கூர்மையாகப் பார்த்தாள். அவன் அதைப் பொருட்படுத்தாமல் போனில் ப்ரியாவைப் பிடித்தான்.‘‘ப்ரி...’’‘‘அப்பா! வந்துட்டியா... இவ்வளவு நேரமா என்ன பண்ணிக்கிட்டிருந்தே?’’
‘‘மாடில குருக்கள பத்தி சொன்னேன்ல? அவர் பிடிச்சுக்கிட்டார்! அவர் பாட்டுக்கு நட்சத்திரம் - கிரகம் - ஆதிக்கம்னு எங்கேயோ போய்ட்டார். நானும் விடாம கவுன்ட்டர் டாக் கொடுத்ேதன். அதான் நேரமாயிடிச்சு.’’

‘‘அவருக்கு எதிரா பேசினியா?’’
‘‘ஆமாம்... ஏன் கேக்கறே?’’
‘‘அப்ப நீ இன்னும் பழைய வர்ஷனாதான் இருக்கியா?’’
‘‘இது என்ன கேள்வி ப்ரியா... நான் எப்பவும் நானாதானே இருக்க முடியும்?’’
‘‘இந்த ‘நான்’ங்கற வார்த்தைக்குப் பின்னால யோசிக்க எவ்வளவு விஷயம் இருக்கு
தெரியுமா வர்ஷன்!’’

‘‘ப்ரியா... நீ என்ன அந்த குருக்கள் மாதிரியே பேசறே?’’
‘‘வர்ஷா... நம்மைச் சுத்தி நடந்துக்கிட்டிருக்கற மெளடீகமான விஷயங்கள கொஞ்சம் நினைச்சுப் பார். இதுநாள் வரை நாம நினைச்சுக்கிட்டிருந்த பல விஷயங்கள் தப்புன்னு உனக்குத் தோணல?’’

‘‘ப்ரியா... நம்மைச் சுத்தி மர்மமா சில விஷயங்கள் நடந்துகிட்டிருக்கு. அதுக்கு சில மனிதர்கள்தான் காரணம்னு நான் நினைக்கறேன். நீ எப்படி அப்படி இல்லேன்னு நினைக்கறே?’’‘‘சிம்பிளா உனக்குச் சொல்லிடறேன். நீ இந்த ஆவி, பேய், பிசாசு... இதையெல்லாம்
நம்பறியா?’’
‘‘நிச்சயமா இல்லை!’’

‘‘ஆனா நான் நம்பறேன்
வர்ஷன்.’’
‘‘எதை வெச்சு?’’

‘‘நான் சொல்லப் போறதக் கேட்டு அதிர்ச்சியடையாதே. செத்துப் போன முத்தழகுவோட ஆவி இப்ப எங்க வீட்டுக்குள்ளதான் சுத்திக்கிட்டிருக்கு..!’’
- ப்ரியா சொல்ல... வர்ஷன் விக்கித்தான்!

‘‘காய்ச்சல் வந்தால்தான் நினைவுக்கு வருது டாக்டர்...’’
‘‘என் நினைப்பா..?’’
‘‘உங்களுக்குத் தர வேண்டிய பழைய பில் பாக்கி நினைப்பு டாக்டர்!’’

நான் உயிருள்ள மனுஷன். கிரகம்ங்கறது  கல், மண் மாதிரி ஒரு ஜடம். எந்த ஜடத்தாலயும் உயிரை ஆட்டிப் படைக்க  முடியாது. ஆனா உயிருள்ள மனுஷன் ஜடத்தை என்ன வேணா செய்யலாம்...

‘‘மருமகளே! உன் கையால விஷம் கொடுத்தாக்கூட குடிக்கத் தயாரா இருக்கேன்மா..’’
‘‘அப்படியெல்லாம் புலம்பாதீங்க அத்தே! நான் சாப்பாடுதான் போடுவேன்!’’
‘‘அதைத்தான் அப்படி பக்குவமா சொல்றேன்!’’

‘‘சாட்சிகளைக் கலைச்சிட்டீங்களாமே..?’’
‘‘சுத்தப் பொய்... அவங்கதான் சாட்சி சொல்லி சாட்சி சொல்லி களைச்சிட்டாங்க!’’
- ஏ.நாகராஜன்,சென்னை-75.

- தொடரும்...

இந்திரா சௌந்தர்ராஜன்

ஓவியம்: ஸ்யாம்