ராஜதந்திரம்



சின்னத் திருட்டு ஸ்பெஷலிஸ்ட்களான மூன்று இளைஞர்கள், பெரிய திருட்டு ஒன்றை வெற்றிகர மாகச் செய்து முடிப்பதே ‘ராஜதந்திரம்’!டிப் டாப் ஆசாமிகளாக ஸ்மார்ட் ஏமாற்று வேலைகள் செய்பவர்களே வீராவும் அவர் இரு நண்பர்களும்.

 பெரிய வேலை செய்தால் சிக்கிக்கொள்வோம் என அடக்கி வாசிப்பவர்களைத் தேடி வருகிறது வம்பு. அந்தப் பெரிய திருட்டு மூலம் பலருக்கும் நன்மை(!) எனத் தெரிந்த பின், முழுமனதாய் அதில் இறங்குகிறார்கள். பக்கா ப்ளானிங், அதிரடி ட்விஸ்டுகள் எனப் போகும் அந்த ஆபரேஷன் வெற்றி அடைந்ததா என்பதே க்ளைமேக்ஸ்!

உட்கார வைப்பதில் ஜெயித்திருக்கும் அறிமுக இயக்குநர் அமித்துக்கு வருங்காலம் கன்ஃபார்ம்! திருட்டு பற்றிய கதைதான். ஆனாலும், ‘சூது கவ்வும்’, ‘சதுரங்க வேட்டை’ வரிசை யில் எல்லாம் சேர்க்க முடியாது.

நல்ல விஷயத்துக்காக திருட்டு என மழுப்புவதும் கடைசியில் நாயகன் திருந்துவதுமாக அடிப்படை கான்செப்டில் 90ஸ் நெடி!நண்பர்கள் குழாமில் நாயகன் வீரா, டர்புகா சிவா, அஜய் ப்ரசாத் மூவருமே கவனம் ஈர்க்கிறார்கள். குறிப்பாக டர்புகா சிவாவின் வசனங்களில் ஆர்.ஜேத்தனமான வேகமும் கமென்ட்ஸும் சேர்ந்துகொண்டு அப்ளாஸ் அள்ளுகின்றன.

இருந்தும் என்ன... காதல், நாயகனுக்குத்தானே வொர்க் அவுட் ஆகும். ரெஜினா - வீரா காதல் செக்மென்ட், இது மாதிரி ஒரு ‘கேங் ராபரி’ கதைக்கு ஸ்பீட் ப்ரேக்கர். தன்னிடம் தயங்கித் தயங்கிப் பேசும் பையன்களிடம் தடாலடியாக ரெஜினா தன் செல் நம்பரையே தருவது புத்தம் புதுசு. ஹீரோயின் எம்.எல்.எம் ஏஜென்ட் என்பதும், ஷேர் ஆட்டோ சந்திப்பும் என்றைக்கோ தமிழ் சினிமா பிரதிபலித்திருக்க வேண்டிய கரன்ட்(!) டிரெண்ட். ரெஜினாவை ‘கே.பி.கி.ரங்கா’வில்தான் கடைசியாகப் பார்த்த ஞாபகம். ஃப்ரெஷ், இளமை, அழகு என மனதை அள்ளிச் செல்லும் இந்தப் பொண்ணுக்கு தமிழில் இவ்வளவு கேப் ஏனோ? கவனிங்கப்பா!

வில்லனாக கே.சேகர் செம யதார்த்தம். நம்பிக்கைத் துரோகங்களை கேஷுவலாகச் செய்துவிட்டுப் போகும் அவர், பார்வையாளனின் வெறுப்பை சம்பாதித்து விடுகிறார்!பைக் திருட்டில் ஏமாந்த நபரைக் காட்டும்போதெல்லாம் பல்சர் உறுமலையே பேக்கிரவுண்ட் ஆக்கியிருப்பது, வாவ். யாருப்பா பேக்கிரவுண்ட்? சந்தீப் சவுதா! நிச்சயம் அவரின் பின்னணியைப் பாராட்ட கடைசி பாரா வரை போக வேண்டாம்!

கொலை வெறியோடு தேடும் பழைய பகையாளிகள்... பணத்தாசை பிடித்த நகைக்கடை முதலாளி... பிடிக்கக் காத்திருக்கும் போலீஸ்... இந்த மூவரையும் வைத்து வீரா ஆடும் விறுவிறு ஆட்டத்தையே படத்தின் பிரதானமாக வைத்தது ஹாலிவுட் ஸ்டைல்தான். ஆனால், இப்படிப்பட்ட கதைகளில் லாஜிக் கேள்விகள் வரக்கூடாது டைரக்டர் சார். கடைசி வரை ஹீரோ அண்ட் கோ தப்பிக்கிற மாதிரி மேஜிக்கை எல்லாம் நம்ப முடியுமா? குட்டி எதிரிகளைத் தட்டி வைக்காமல், நகைகளைக் கொள்ளையடிக்க அனுமதித்து சேகர் வீட்டிலேயே உட்கார்ந்திருப்பது படு செயற்கை.

பரபர திரைக்கதையும் ப்ரவீன் ஆன்டனியின் எடிட்டிங்கும் படத்துக்கு சுறுசுறுப்பு. ஒளிப்பதிவைப் பொறுத்தவரை உடைத்த கோலி சோடா போல விர்ரென்று எஸ்.ஆர்.கதிர். சூப்பரப்பு! கொள்ளைத் திட்டம் இன்னும் ரசிக்கும்படி இருந்திருந்தால் ‘ராஜதந்திரம்’ என்ற பெயருக்கு முழு நியாயம் கிடைத்திருக்கும். இப்போதும் என்ன... பாதிக்கும் மேல் நியாயம் செய்திருக்கிறார்கள்!

- குங்குமம் விமர்சனக் குழு