வேண்டாம்



மாப்பிள்ளை வீட்டாருக்கு எங்கள் பெண் சுதாவை ரொம்பவும் பிடித்திருந்தது. நிச்சயதார்த்தத்துக்கு அவசரப்பட்டார்கள். எங்களுக்கு சேலம். மாப்பிள்ளை வீட்டாருக்கு கோபி. பையன் வேலை பார்ப்பது கோவையில்.

கோபியிலோ, கோயம்புத்தூரிலோ எங்களுக்குத் தெரிந்தவர் என்று யாருமே இல்லை. மாப்பிள்ளை பற்றி யாரிடம் விசாரிப்பது?
யோசித்து யோசித்து மண்டை காய்ந்தது.

அன்று காலை, ‘‘ஏங்க, உங்க காலேஜ் ஃபிரண்ட் தனபால் கோயம்புத்தூர்லதானே வேலை பார்க்கிறார்... ரொம்ப நாள் கழிச்சு ஃபேஸ்புக்ல திடீர்னு ஃபிரண்ட் ரிக்வெஸ்ட் கொடுத்து திரும்பவும் பேசினதா சொன்னீங் களே?’’ என நினைவூட்டினாள் மனைவி.ஆஹா! எப்படி மறந்தேன். உடனே செல்போனில் தேடி தனபால் கொடுத்த நம்பரை டயல் செய்து பேசினேன்.
மாப்பிள்ளை வேலை பார்க்கும் அலுவலகத்தைச் சொன்னதும்,

‘‘அது எங்க ஆபீஸ்தான்’’ என்ற தனபால், ‘‘டைரக்ட் ரெக்ரூட்மென்ட்ல எனக்கு மேலதிகாரியா வந்துட்டான். கீழே வேலை பார்க்கிறவங்களை நம்புறதில்ல. சரியான சந்தேகப் பேர்வழி. இவனைக் கட்டிக்கப் போறவ பாடு திண்டாட்டம்தான்’’ என்றான் தனபால்.மனைவி கேட்டாள்... ‘‘வேற வரன் தேட வேண்டியதுதானா?’’‘‘வேண்டாம்.

இந்த வரனையே நிச்சயம் பண்ணி டலாம். தனபால் ஒழுங்கா வேலை செய்ய மாட்டான். லஞ்சத்துக்கு அலையறவன். அவன் ஒருத்தரைக் கெட்டவர்னு சொன்னா அவர் நல்லவராத்தான் இருப்பார்’’ என்றேன் திடமான குரலில்.

நாமக்கல் பரமசிவம்