காவிரியை மொத்தமாக இழக்கிறோமா?



அணைகளால் மிரட்டும் கர்நாடகம்...

மீண்டும் ஒருமுறை ஒட்டுமொத்த தமிழகத்தையும் தாகத்தில் தவிக்க விடும் முயற்சியில் விஷமத்தனமாக இறங்கியிருக்கிறது கர்நாடகம். காவிரிப் படுகையில் இருக்கிற 20 லட்சம் மக்களை மட்டுமல்ல... சென்னை, திருச்சி, ஈரோடு, திருப்பூர், சேலம் மாநகராட்சிகள், காஞ்சிபுரம் தொடங்கி தர்மபுரி வரையிலு முள்ள 19 மாவட்டங்களில் வசிக்கும் 5 கோடி மக்களையும், கேரளா, புதுவை மாநிலங்களையும் சேர்த்து வஞ்சிக்கத் துடிக்கிறது கர்நாடகம்.

ஒகேனக்கல்லுக்கு மேலே, காவிரியும் ஆர்க்காவதி நதியும் சங்கமிக்கும் இடத்தில் மேகதாது, ராசிமணல் பகுதிகளில் 2 புதிய அணைகளைக் கட்டி, தங்கள் எல்லையைக் கடந்து வெளியே வரும் கொஞ்ச நஞ்ச உபரிநீரையும் தடுக்கத் துடிக்கிறது கர்நாடக அரசு. இந்த அணைகளுக்கான இறுதிக்கட்ட ஆய்வுகள் முடிந்து, அடிப்படை பணிகளுக்காக 25 கோடி ரூபாயையும் பட்ஜெட்டில் ஒதுக்கியிருக்கிறார்கள். இவை மட்டும் கட்டப்பட்டால் காவிரி டெல்டா மட்டுமில்லை, தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களும் பாலைவனமாகிவிடும் அபாயம் இருக்கிறது. 

'காவிரியில் இரு மாநிலங்களின் புரிந்துணர்வு இல்லாமல் எந்தப் பணியையும் செய்யக்கூடாது’ என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், அதை சிறிதும் மதிக்காமல், மத்திய அரசின் அனுமதியையும் பெறாமல், நதிநீர் சட்டங்களைப் புறம்தள்ளி, தமிழகத்தின் உரிமையை மறுத்து தன்னிச்சையாக பணிகளைத் தொடங்கியிருக்கிறது கர்நாடகம். உச்ச நீதிமன்றம் சொன்னபடி காவிரி மேலாண்மை வாரியத்தையும், ஒழுங்காற்றுக் குழுவையும் அமைக்காமல், கர்நாடகத்தின் அத்துமீறலையும் கண்டிக்காமல் அமைதியாக வேடிக்கை பார்க்கிறது மத்திய அரசு. கொதிப்பில் இருக்கிறார்கள் தமிழக விவசாயிகள்.

ஏற்கனவே கர்நாடகம் கட்டியுள்ள கிருஷ்ணராஜசாகர், கபினி, ஹேமாவதி, சாரங்கி உள்ளிட்ட 7 அணைகளில் சுமார் 125 டி.எம்.சி தண்ணீரைத் தேக்க முடியும். இப்போது ‘குடிநீர் மற்றும் மின் தேவைக்காக’ இந்த அணைகளைக் கட்டுவதாகச் சொல்கிறது கர்நாடகம். உண்மையில் இந்த அணைகள் இதற்காகத்தானா?

‘‘நிச்சயமாக இல்லை. கர்நாடகத்தில் அரசியல்வாதிகள் அனைவரும் விவசாயிகளின் கட்டுப்பாட்டில் இருக்கிறார்கள். அங்கிருக்கும் காங்கிரஸ் அரசு விவசாயிகளிடம் நல்ல பெயரும் ஓட்டும் வாங்குவதற்காக நம் வயிற்றில் அடிக்கிறது. அதே நோக்கத்துக்காக பி.ஜே.பி. போன்ற பிற கட்சிகளும் அதை ஆதரிக்கின்றன’’ என்று குமுறுகிறார் தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிர்வாகி சுவாமிமலை விமலநாதன்.

‘‘கர்நாடகத்தின் மேற்குப்பகுதியில் பாயும் 14 நதிகளில் ஒவ்வொரு ஆண்டும் 3375 டி.எம்.சி. தண்ணீர் அரபிக்கடலில் கலக்கிறது. இதில் வெறும் 10 சதவீதத்தைப் பயன்படுத்தினாலே கர்நாடகம் முழுமைக்கும் குடிநீர் தேவை தீர்ந்துவிடும். 2003ல் கர்நாடக பொதுப்பணித்துறையில் தலைமைப் பொறியாளராகப் பணியாற்றிய டாக்டர் பவானிசங்கர் இதற்காக ஒரு திட்டத்தை உருவாக்கி அரசிடம் வழங்கினார்.

ஆனால் அதைக் குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டு தமிழர்களின் வயிற்றில் அடிக்கப் பார்க்கிறது கர்நாடகம். இதன் பின்னணியில் இருப்பது வெற்று அரசியல். தமிழர்கள் மீதான வன்மம். மத்திய அரசின் மீது நம்பிக்கை அற்றுப் போய்விட்டது. இதைத் தடுத்து தமிழர்களின் உரிமையைக் காக்க வேண்டிய முழுப் பொறுப்பும் உச்ச நீதிமன்றத்திற்கே இருக்கிறது’’ என்கிறார் விமலநாதன்.

‘‘1974ல் கர்நாடகத்தின் பாசனப் பரப்பு 6.8 லட்சம் ஏக்கர். இப்போது 21 லட்சம் ஏக்கர். அடுத்த 5 ஆண்டுகளுக்குள் 30 லட்சமாக்க இலக்கு நிர்ணயித்திருக்கிறார்கள். கடந்த 2 ஆண்டுகளில் கர்நாடகா 3000 புதிய ஏரிகளை உருவாக்கியிருக்கிறது. பாசனப் பரப்பை பல மடங்கு விரிவுபடுத்தியிருக்கிறார்கள். உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகும் அவர்கள் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடவே இல்லை.

மழையால் பெருகிய வெள்ள நீரைத் திறந்துவிட்டு தங்களைத் தற்காத்துக் கொண்டதோடு, கணக்கையும் நேர் செய்துவிட்டார்கள். தமிழகத்தையும், உச்ச நீதிமன்றத்தையும், கண்காணிப்புக் குழுக்களையும் அப்பட்டமாக ஏமாற்றுகிறார்கள். மத்திய அரசு இந்த விஷயத்தில் மௌனமாக இருப்பது விபரீதமான விளைவுகளைத்தான் உருவாக்கும்.

காவிரி டெல்டாவில் பல விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். பெரும்பாலானோர் இடம்பெயர்ந்து விட்டார்கள். இது காவிரி டெல்டா மக்களின் பிரச்னை மட்டுமல்ல. ஒட்டுமொத்த தமிழகத்தின் பிரச்னை. சென்னையில் இருந்து ராமநாதபுரம் வரை மக்கள் குடிப்பது, காவிரி நீர்தான். இன்றும் மேட்டூரிலிருந்து தினமும் 2000 கன அடி தண்ணீர் சென்னையின் தாகம் தணிப்பதற்காக போய்க்கொண்டிருக்கிறது.

கர்நாடகாவில் கடந்த 10 ஆண்டுகளில் தண்ணீருக்காக மக்கள் எந்தப் பகுதியிலும் போராட்டம் நடத்தியதில்லை. காரணம், அங்கே தண்ணீர் நிறைவாக இருப்பதுதான். ரங்கராஜன் குமாரமங்கலம் மத்திய அமைச்சராக இருந்த காலத்தில், நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் மூலம் மேகதாது, ராசிமணல், ஒகேனக்கல் பகுதிகளில் நீர்மின் நிலையங்கள் அமைக்கத் திட்டமிட்டார்கள். தமிழகம் அதற்கு ஆதரவளித்தது.

ஆனால், மத்திய அரசின் தலையீட்டை மறுத்து கடுமையாக எதிர்த்தது கர்நாடகம். அப்போது எதிர்த்த கர்நாடகா, இன்று மின்சாரத்துக்காக அதே பகுதியில் அணை கட்டுகிறோம் என்கிறது. தமிழகத்தை வஞ்சிக்க வேண்டும் என்பதைத் தவிர இதற்கு வேறு எந்த நோக்கமும் சொல்ல முடியாது’’ என்கிறார் அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன்.

ஒரு காலத்தில் டெல்டாவில் 1.10 லட்சம் ஹெக்டேரில் குறுவை சாகுபடியும், இதே அளவுக்கு தாளடி சாகுபடியும் நடக்கும். 4 லட்சம் ஹெக்டேர் பரப்பில் சம்பா சாகுபடி செய்வார்கள். கடந்த 10 ஆண்டுகளில் மெல்ல மெல்ல குறுவையும், தாளடியும் அருகி விட்டன. கர்நாடகம் வடித்துவிட்ட உபரிநீரால் சம்பா மட்டும் தட்டுத் தடுமாறி நடந்தது.

இறுதியாக அதற்கும் முடிவு கட்ட முனைகிறது கர்நாடகம். இதையும் நாம் கண்டும் காணாமல் இருந்தால், தமிழ் மக்களின் உணர்வோடும் உயிரோடும் உறவாடிக் கலந்திருக்கும் காவிரி என்ற நதியின் மீதான நம் உரிமையை ஒட்டுமொத்தமாக இழந்து விடுவோம்!

ஒகேனக்கல்லுக்கு குறி

மாநிலங்கள் பிரிக்கப்பட்ட காலத்தில் இருந்தே கர்நாடக அரசியல்வாதிகளுக்கு ஓகேனக்கல் மீது கண் உண்டு. தமிழகம் அப்பகுதியில் எந்த திட்டத்தைச் செய்தாலும் கர்நாடகம் ‘உரிமைக் குரல்’ எழுப்புவது வழக்கம். ஒகேனக்கல்லை ஆட்கொண்டு விட்டால் காவிரியின் மீதான தமிழகத்தின் உரிமையை முற்றிலும் தடுத்துவிடலாம் என்பதே இதற்குக் காரணம்.

இப்போது மீண்டும் கர்நாடக முதல்வர் சித்தராமையா ஒகேனக்கல் உரிமைப் பிரச்னையை எழுப்பியிருக்கிறார். ‘‘ஒகேனக்கல்லை உள்ளடக்கி 68 கி.மீ. தூரத்துக்கு தமிழகத்தோடு 50 ஆண்டுகளுக்கும் மேலாக எல்லைப் பிரச்னை தொடர்கிறது. மத்திய சர்வே ஆணையம் உடனடியாக சர்வே செய்து எல்லையை மறு வரையறை செய்ய வேண்டும்’’ என்று அவர் இப்போது வலியுறுத்தி யிருக்கிறார்.

எதிர்க்கும் வனத்துறை

மேகதாது அணைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இடம், காவிரி வன விலங்குகள் சரணாலயத்தின் மையத்தில் இருக்கிறது. ‘‘யானை, புலிகள், மிக அபூர்வமான வன விலங்குகளின் உறைவிடமாக இருக்கும் இந்தப் பகுதியில் அணை கட்டினால் நூற்றுக்கணக்கான ஏக்கர் வனம் நீரில் மூழ்கிவிடும்.

விலங்குகள் பாதிப்படையும். சுற்றுச்சூழல் மாசுபடும். எனவே இத்திட்டத்தைக் கைவிட வேண்டும்’’ என்று வலியுறுத்தியிருக்கிறார் கர்நாடக தலைமை வனப்பாதுகாப்பு அதிகாரி வினய் லுத்ரா. அப்பகுதிகளில் வாழும் பழங்குடி மக்களும் போராட்டம் நடத்த ஆயத்தமாகி
வருகிறார்கள்.

போராட்டமாகும் டெல்டா வாழ்க்கை

கடந்த 10 ஆண்டுகளாக டெல்டா மக்களின் வாழ்க்கை போராட்டமயமாகி விட்டது. தண்ணீர்ப் பிரச்னை வாழ்க்கையை நசுக்க, உற்பத்திக்கு உரிய விலையும் கிடைக்கவில்லை. அதனால் இளைஞர்கள் விவசாயத்தை வெறுத்து இடம்பெயரத் தொடங்கினார்கள். கிராமங்கள் வெறிச்சோடின.

நடுத்தர, வயதான மனிதர்களே விவசாயத்தை வம்படியாகச் செய்து வந்தார்கள். தண்ணீருக்காகப் போராடிய மக்கள் மீத்தேன் திட்டத்திற்குப் பிறகு தங்கள் நிலத்துக்காகப் போராடினார்கள். இப்போது அணைப் பிரச்னை. ஒருகாலத்தில் வளம்கொழித்த மக்களின் வாழ்க்கை மிகுந்த நெருக்கடியை எதிர்கொண்டிருப்பது தமிழகத்தின் செழுமைக்கு நல்லதல்ல.

- வெ.நீலகண்டன்