துணை



ஒரு வருடமாக என் மனைவி சித்ரா என்னை நச்சரித்துக் கொண்டிருந்தாள், என் அம்மாவை முதியோர் இல்லத்தில் சேர்த்து விடச் சொல்லி. நானும் அவ்வப்போது, ‘‘நல்ல முதியோர் இல்லம் எங்க இருக்குன்னு விசாரிச்சுக் கிட்டு இருக்கேன். கொஞ்சம் பொறுத்துக்கோ’’ என்று சமாளித்துக் கொண்டிருந்தேன்.

ஞாயிற்றுக்கிழமை திடீரென சித்ராவின் அண்ணன் போனில் கூப்பிட்டான். ‘‘மாப்ளே, தாம்பரம் பக்கத்துல ஒரு முதியோர் இல்லம் இருக்கு. நல்லா பார்த்துக்கறாங்க. எல்லா வசதியும் இருக்கு. மாசச் செலவும் ரொம்பக் குறைச்சல்தான். நான் இங்கதான் வெயிட் பண்றேன். வாங்க, பார்த்துடலாம்!’’

நான் மனதைக் கல்லாக்கிக்கொண்டு சென்றேன். கூட சித்ராவும் வந்தாள். தன் சகோத ரனைக் கையில் போட்டுக்கொண்டு எவ்வளவு கிரிமினலாக யோசித்து இப்படி ஒரு காரியம் செய்திருக்கிறாள் என்று சித்ரா மீது கோபம் பொங்கியது. அந்த இல்லம் வந்தது. காத்திருந்த சித்ராவின் அண்ணன் சொன்னான்...

‘‘மாப்ளே, உங்க அம்மா இங்க தனியா இருப்பாங்களேன்னு நீங்க ஒண்ணும் கவலைப்படாதீங்க. துணைக்கு எங்க அம்மாவும் இருப்பாங்க. என்ன அப்படிப் பாக்கறீங்க? என் அம்மாவை சேர்க்கறதுக்காகத்தான் விசாரிச்சேன். நல்ல இடம்னு தெரிஞ்சதும் உங்களுக்குப் போன் பண்ணேன்.’’இப்போது சித்ரா முகத்தைப் பார்க்க வேண்டுமே!

எஸ்.எஸ்.பூங்கதிர்