த்ரிஷா இல்லனா நயன்தாரா!



தலைப்பைப் பார்த்ததும் புதுப்பட டைட்டில்னு நினைச்சா தப்பே இல்லை. இதுதான் இப்போதைய யூத்துகளின் மனநிலையும். காதலுக்கும் மெடிக்கல் காலேஜுக்கும் எப்பவுமே செம கெமிஸ்டரி இருக்கும்.

காதலர் தினம் ஓடி ஒரு மாசமாச்சே... ‘இதயம்’ முரளி மாதிரி லவ் ஃபீலோட வொய்ட் கோட்டும் நாலு வார தாடியுமா யாராவது அலைவாங்க. காதல் ஃபீலை ஷேர் பண்ணிக்கலாம்னு வண்டலூர் அருகே இருக்கும் தாகூர் டென்டல் காலேஜுக்குப் போனால், நமக்கு செம ஷாக். ‘‘லவ்வெல்லாம் ஜஸ்ட் லைக் தட் பாஸ்’’ என தடதடக்கிறார்கள் நாளைய டாக்டர்ஸ்!

‘‘காதல், பிரேக் அப் எல்லாம் ட்ரீட் வைக்க ஒரு சான்ஸ். ஒருத்தன் லவ்வுல விழுந்தான்னு வச்சிக்கோங்க. ‘மொக்கப் பையன் இவனுக்கே ஒரு ஃபிகர் உஷாராகும்போது நமக்கு கிடைக்காமலா போயிடும்’னு ஒரு தன்னம்பிக்கை உண்டாகும். அதே லவ் அவனுக்கு பிரேக் அப் ஆச்சின்னா நமக்கு செம ஜாலி; பையன் காலி. ஆளு ஃபீலிங்ல காஞ்சிப் போன பிட்ஸா மாதிரி கெடப்பான். அவனை அட்வைஸால அரிச்சு எடுத்துடுவோம்!’’ எனத் தொடர்கிறார் சையத்.

‘‘புது சிம்முக்கு 50 ரூவா ஆஃபர் வந்தாலே நம்பர மாத்தறவங்க, உன்னைவிட பெட்டரா ஒரு பையன் ட்ரை பண்ணா விடுவாங்களான்னு டிங்சரைத் தெளிச்சு, ‘உன் நல்ல மனசுக்கு இப்பவே தப்பிச்சிட்டே’ன்னு சொல்லி தேத்த வேண்டியதுதான். அப்புறமென்ன, ட்ரீட்தான்!’’ - அதிர வைக்கிறார் கார்த்திக்.‘‘வருஷத்துக்கு நாலு லட்சம் கேஷை டெபாசிட் பண்ற மாதிரி, செமஸ்டருக்கு நாலு அரியர்னு இருவது முப்பது அரியரை முதுகுல சுமந்துக்கிட்டு அலையறவங்களை நம்பி எப்படி வாழ்க்கைய ஒப்படைக்க முடியும்? வௌங்க மாட்டாங்கன்னு முடிவான பிறகுதான் விலகறாங்க கேர்ள்ஸ்!’’ - பெண்களின் மனநிலையை அதிரடியாய் முன்வைக்கிறார் காயத்ரி.

‘‘உண்மையைச் சொன்னா இப்பவெல்லாம் பொண்ணுங்க ஸ்கூல்லயே கமிட் ஆகிடறாங்க. ‘எயித் ஸ்டாண்டர்டில் கிடைக்காதது எப்பவுமே கிடைக்காது’ன்னு புதுமொழி எழுதலாம். காலேஜ்லல்லாம் எனக்கு சிஸ்டர்ஸ்தான் அதிகம். மச்சிங்க எல்லாம் வெவ்வேற காலேஜ்ல படிக்கறாங்க. ஃபேஸ்புக்ல வந்து ‘என் ஆளு...

அதாவது, உன் தங்கச்சி... உன் கிளாஸ்ல தான் படிக்கிறா. பத்திரமா பாத்துக்கோ’ன்னு ரெக்வெஸ்ட் விடறானுங்க. கடுப்பேத்திங் மை லார்ட்! நானும் ‘ஐ’ விக்ரம் மாதிரி உடம்ப ஏத்திக்கிட்டு... சாரி, எப்படியாவது குறைச்சிக்கிட்டு லவ்ல விழணும்னு மூணு வருசமா ட்ரை பண்றேன். ரெண்டுமே நடக்கல!’’ - கண் கசக்குகிறார் ஜோஷ்வா.

‘‘இவனுக்கு வாயும் பெருசு. ஆளும் பெருசு. எப்படிங்க பொண்ணுங்க மடங்கும்? வாங்கற கூல் டிரிங்ஸை இவன் சீக்கிரம் குடிச்சிட்டு அவங்களுதையும் ஆட்டையப் போட்டா லவ்வா வரும்?’’ - ஜோஷ்வாவை வாரி விட்டு தொடர்கிறார் ஞானசேகரன். ‘‘ஒரு காலத்துல பொண்ணுங்கன்னா அதிசயமா தெரிஞ்சிருக்கலாம்.

இப்பவெல்லாம் நாங்க ஸ்கூல் லைஃப்ல இருந்தே சகஜமா பழகறோம். ஒண்ணா படிக்கிறோம். விளையாடறோம். என்ன பிடிக்கும் பிடிக்காதுன்னு ஷேர் பண்ணிக்கிறோம். எது நம்ம லிமிட் அப்படிங்கற புரிதல் இருக்கு. பிடிக்கலன்னா சாரி சொல்லிட்டு நகரும் தைரியமும் இருக்கு. ஸோ... இப்ப பொண்ணுக்காகவெல்லாம் அழவோ, உயிரை விடவோ முடியாதுங்க பாஸ். த்ரிஷா இல்லாட்டி நயன்தாரா. அதுவும் இல்லாட்டி எமி!’’

‘‘அசாம்ல இருக்கற அபினயாவ கூட அசால்ட்டா இங்கருந்தே உஷார் பண்ண முடியும்ங்கறபோது அண்ணா நகர் பொண்ணு போயிடுச்சின்னு அழணுமா?’’ - அதிரடிக்கிறார்கள் பரத்தும் தமீமும்.

‘‘இப்பவெல்லாம் சென்டிமென்ட்னு எதுவுமே இல்லை. லவ் பண்றதுக்கு முன்னால பொண்ணு பேசினா போதும்னு அலையற பாய்ஸ், பொண்ணுங்க லவ் சொன்ன பின்னாடி அலட்சியப்படுத்தறாங்க. பொண்ணுங்களும் எப்பவும் பசங்க சாக்லெட்டும் கையுமா சுத்தணும்னு எதிர்பார்க்கறாங்க. போர் அடிச்சா ஒரு நிமிஷத்துக்கு 10 சேனலை மாத்தற நாம, புரிஞ்சிக்காத லவ் பிரேக் அப் ஆனா கவலையா பட முடியும்’’ என்கிறார் சாட் ரூமில் திடீர் என்ட்ரி கொடுத்த பயிற்சி மருத்துவர் ஐஸ்வர்யா.

‘‘22 வயசாகியும் ஒரு பெண்ணை மடக்க முடியலையேனு நினைக்கறது நெகட்டிவ் தாட்ஸ். அதையே மாத்தி யோசிங்க. 22 வருஷமா ஒரு ஃபிகரால கூட நம்மை மடக்க முடியலைங்கறது பாசிட்டிவ் தாட்ஸ். ஸோ... மாத்தி யோசி மாமு!’’ என்கிறார் காலேஜின் ஆஸ்தான கருத்து கந்தசாமி பிரேம்குமார்ஒட்டுமொத்தமா நீங்க என்ன தான் சொல்றீங்க? ‘‘அம்பிகாபதி - அமராவதி காதல் இன்னைக்கும் இருக்கு. அதெல்லாம் அரிதான உயிரினங்கள். பேட்ச்சுக்கு ஒண்ணு ரெண்டு இருக்கும். எதிர்காலத்தை முடிவு செஞ்சி உஷாரா ஸ்டெப் வைக்கற காதல்தான் இப்ப தொண்ணூறு சதவீதம்!’’ என்கிறார்கள் இருதரப்பும்.  உஷாராத்தாம்பா இருக்காங்க..!

- எஸ்.ஆர்.செந்தில்குமார்
படங்கள்: புதூர் சரவணன்