குட்டிச்சுவர் சிந்தனைகள்



ஒரு பொண்ணுக்கு லவ் லெட்டர் கொடுத்து, அவள் மறுத்து... அதே லெட்டரை அவள் தோழிக்கும் கொடுத்து, அவள் மறுத்தாலும் அதையே மீண்டும் தோழியின் தங்கைக்கு கொடுத்து...

அந்தப் பொண்ணும் மறுத்தாலும் அதையே தங்கையின் தோழிக்கும் கொடுத்த வரலாறெல்லாம் பசங்களுக்கே உரித்தானது. குரூப் ஸ்டடி என குடும்பத்தையே நம்ப வைத்து, ஒரு கட்டிங்கை ஒன்பது பேர் அடித்து, மொட்டை மாடியை கெட்ட மாடியாக்குவதெல்லாம் பசங்களின் பேருக்குப் பின்னாலிருக்கும் பல்லாயிரக்கணக்கான சாதனைகளில் ஒன்று.

எந்தப் பொண்ணுக்கும் வாய்ப்பதில்லை, பொண்ணுங்களுக்கு முன்னால் பைக்கை வீலிங் செய்து, நிலைமை மாறி சில்லறை வாரி ஃபீலிங்காகி நிற்கும் நிலை. நண்பனின் கல்யாணத்துக்கோ, நண்பன் வீட்டுக் கல்யாணத்துக்கோ நாலு நாளுக்கு முன்பே சென்று, கூடிக் கும்மாளமிட்டு, முந்தின நாள் முழுக்க முழித்திருந்து, முகூர்த்த வேளையில் நித்திரை தழுவி, கல்யாணத்தைக் காணாமல் திரும்பி வரும் பாக்கியம் பசங்களுக்கே சொந்தம். காதல் ஒட்டிக்கிச்சுன்னு சொன்னாலும் கிண்டல்தான்; காதல் புட்டுக்கிச்சுன்னு சொன்னாலும் கிண்டல்தான்; பசங்களின் முப்போக வாழ்வில் எப்போதும் சோகம் என்பதே இல்லை.

பெத்த அப்பாவை பேருக்கு திட்டினாலும் மத்தவன் அப்பாவுக்கு ஏதாவது ஒண்ணுன்னா, முட்டி மோதி முன்னால் இருப்பது பசங்களுக்கே உண்டான செயல். பெண்களின் பர்ஸில் இருக்கும் காசு அவர்களின் தனி காசு, பசங்களின் பாக்கெட்டில் இருக்கும் காசு, பொது காசு. பென்சிலைக் கூட ஓசி தர தயங்கும் பெண்களின் முன்னால், பைக் முதல் போன் வரை பங்கு போடுபவர்கள் பசங்க. பசங்களாய் இருப்பதன் பெருமையையெல்லாம் வார்த்தைகளை வைத்து விளக்க முடியாது, வாழ்ந்துதான் பார்க்க வேண்டும்!

ரெண்டு மாசமா, ஆஸ்திரேலியாவுல ரன்னும் அடிக்காம வின்னும் அடிக்காம, மண்ணைக் கவ்வி மானபங்கமாகிக் கிடந்த இந்திய கிரிக்கெட் அணி, இப்ப சிங்கமா சீறி சீட்டியடிக்கிறதுக்குப் பின்னால இருக்கும் நிஜ காரணம் என்ன? பாகிஸ்தானுடன் மேட்ச் நடக்கும் முந்தின நாள் இரவு, எத்தனை ஆள் அடிக்க வந்தாலும், எத்தனை ஊரு உதைக்க வந்தாலும், ஒத்த ஆளா பறந்து பறந்து மொத்த அடியாட்களின் கதைய முடிக்கும் விஷால் நடிச்ச ‘ஆம்பள’ பட டி.வி.டிய போட்டுக் காமிச்சிருக்காங்க. அந்த வெறில தான் ஆறாவது முறையா பாகிஸ்தான கட்டிப் போட்டு, நம்மாளுங்க முட்டி போட வச்சிருக்காங்க.

ஏற்கனவே, மூணு முறை நம்மளை அடிச்ச தென் ஆப்ரிக்கா மேட்ச்சுக்கு முந்தின நாள் இரவு, எப்பவும் மூணு அடி வாங்கிட்டா, நாலாவது அடி அடிக்கிறதுக்கு முன்னாலயே எதிரிய குப்புறப் போட்டு கும்மியெடுக்கும் எம்.ஜி.ஆர் படத்தைப் போட்டுக் காமிச்சிருக்காங்க. அதனாலதான், நம்பியாரு சவுத் ஆப்ரிக்கா அணிய, ‘தம்பி யாரு?’னு கேட்டிருக்காங்க.

ஒத்தப் படை ரன்னுக்கே அவுட்டாகிட்டு இருந்த தவான், மொத்த படைக்கும் தளபதியானது எப்போ? பால்கார ரஜினி பால்கோவா கம்பெனி ரஜினியா மாறுன ‘அண்ணாமலை’ படத்தை அஞ்சு தடவை பார்த்த பிறகுதான்.

குழம்புல கொதிக்கிற கோழியாட்டம் கிரவுண்டுல கொதிச்சுக்கிட்டு இருந்த கோலி, இப்ப சாந்த சொரூபமா டீமுக்கே வேலியா நிற்க காரணம், ‘வானத்தைப் போல’ படத்த விடிய விடிய பார்த்ததுதான்.

மங்கிப் போன தங்கமா, சொங்கிப் போயிருந்த நம்ம அணி பவுலர்களுக்கு வொயிட் அண்ட் வொயிட்ல வந்து அஜித் வெயிட் காமிச்ச ‘வீரம்’ படத்த போட்டுக் காட்டி ரூட்டு மாத்தியிருக்காங்க.

கொஞ்ச நாளா ‘பூவே உனக்காக’, ‘பிரியமானவளே’ன்னு படம் ஓட்டிக்கிட்டு இருந்த தோனிகிட்ட, பன்னெண்டு பேர பன்னெண்டு இடத்துல போடும் ‘துப்பாக்கி’ படத்த காமிச்சு, துணிச்சல் ஏத்தியிருக்காங்க.

ரோகித் ஷர்மாவுக்கு இந்த வாரம்தான் ‘மான் கராத்தே’ படத்த காமிச்சிருக்காங்க, அதனால இனி வரும் போட்டிகளில் மொத்தமா லூட்டி அடிப்பாருன்னு நம்பப்படுகிறது.
அது மட்டுமில்லாம, இந்திய அணி காலிறுதிக்கு வந்த பின்னாடி, கால் மணி நேரத்துக்கு ஒரு தடவை ‘காசு பணம் துட்டு மணி மணி’ பாட்டப் போட்டுக் காட்ட திட்டம் தீட்டியிருக்காங்க.

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில, ரெண்டு மிகப்பெரிய ஜாம்பவான்களையும் ஜெயிச்சிருக்கோம். அந்த வெற்றிக்கு நம்ம பிரபலங்கள் வாழ்த்து சொன்னா எப்படி இருக்கும்?
வைகோ:

நைபீரிய நதிக்கரையோரம் நடந்த சைபீரியப் போரிலே, யாரோ இவன் என்று நினைக்குமளவு போரிட்ட நீரோ மன்னனின் வீரத்தையும், ஆயிரத்தி எண்ணூத்தி நாற்பதாம் வருடம், உலகம் உறங்கிக்கிடந்த ஒரு நாளிலே, ‘நோ மணி நோ மணி’ என்று துவண்டு கிடந்த ஜெர்மனியைப் புரட்டிப் போட்டானே,

அந்த மனிதர் குல மெழுகுவர்த்தி மாபெரும் சக்கரவர்த்தி குட்நைட் கொசுவர்த்தி, தேம்ஸ் நதியோரம் பிறந்த ஜேம்ஸ், அவனது தீரத்தையும், முதுமலைக் காட்டிலே, அதற்குப் போகும் மசினக்குடி ரோட்டிலே இருக்கும் ஈரத்தையும் கலந்தது போல விளையாடி வெற்றி பெற்ற இந்திய மட்டைப்பந்து வீரர்கள் அனைவருக்கும் எட்டு திக்கிலே இருக்கும் ஒரு முக்கிலே நிக்கும் ஒரு தமிழனின் வீர வணக்கங்கள்.

தமிழிசை: இந்தியா வெல்லக் காரணம் பிரதமர் நரேந்திர மோடி என்பதே என் கருத்து.ஓ.பன்னீர்செல்வம்: இதய தெய்வம், புரட்சித்தலைவி, கழகத்தின் நிரந்தரப் பொதுச் செயலாளர், எங்கள் மனதில் குடியிருக்கும் தெய்வம், தங்கத்தாரகை, மனதின் முதல்வர் அம்மா அவர்களின் ஆணைக்கிணங்க, பாகிஸ்தான் மற்றும் தென் ஆப்ரிக்காவை வென்ற இந்திய அணிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.தா.பாண்டியன்: இந்திய கிரிக்கெட் அணி பெற்றிருப்பது, அது தோனிக்குக் கிடைத்த வெற்றி, அது அந்த பதினோரு பேர் கூட்டணிக்குக் கிடைத்த வெற்றி.

மேலும் பாகிஸ்தானை ஆறு முறை தோற்கடித்த இந்திய அணியின் முதலாளித்துவப் போக்கைக் கண்டித்து, வரும் பிப்ரவரி 29ம் தேதி நாடு தழுவிய உண்ணாவிரதம் மேற்கொள்ள இருக்கிறோம்.

ஈவிகேஎஸ்: பாகிஸ்தான் அடைந்திருக்கும் தோல்வி, ஆம் ஆத்மியிடம் பாஜக அடைந்த தோல்வி போல. அதனால் தோல்விக்கு பொறுப்பேற்று பிரதமர் மோடி அவர்கள் பதவி விலக வேண்டுமென தமிழக காங்கிரஸ் கேட்டுக்கொள்கிறது.

ராமதாஸ்: இந்தியா வெற்றியிலே பணம் விளையாடி இருக்கிறது. ஆளும் ஆட்டக்காரர்கள் இரவு நேரத்தில் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டது குறித்து பல புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன.  இதையும் மீறி 2019 உலகக் கோப்பையில் அன்புமணி தலைமையில் பாமக வெற்றி பெற்று கோப்பையைப் பிடிக்கும்.

ஆல்தோட்ட பூபதி