அழியாத கோலங்கள்



1983ம் வருடம் சென்னையில் பெண்கள் சம உரிமை தினம் என்று ஒரு நிகழ்ச்சியை Monday Charity Club   என்ற ஒரு பெண்கள் குழாம் கொண்டாடியது. (அதை ‘திங்கள் தருமக் குழுமம்’ என்று சொல்லலாமா?) அவர்கள் பெண்களுக்கு சம உரிமை கேட்டு ஆழ்வார்பேட்டையிலிருந்து ஏவி.எம். ராஜேஸ்வரி மஹால் வரை ஒரு பெரிய ஊர்வலம் நடத்தி, ஒரு பொதுக்கூட்டம் நடத்தினார்கள்.

நான் அதற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன் பரமக்குடியில் முதல் தர வக்கீலாக செயல்பட்டு முதலில் இமானுவேல் சேகரன் அவர்களுக்கும் பின்னால் முத்துராமலிங்கத் தேவர் அவர்களுக்கும் ஆஜரானவன். கமல் கதாநாயகனானதும் சென்னைக்கு வந்து, உயர் நீதிமன்றத்தில் ஒரு மூன்றாம் தர வக்கீலாக ‘பதவி இறக்கம்’ பெற்றவன்.

ஒரு பட நடிகனாக வயதால் உயர்ந்த நடிகனாகி, இந்தப் பெண்ணுரிமை கூட்டத்துக்கு அழைக்கப்பட்டேன். தீபம் நா.பார்த்தசாரதி, ‘சோ’ ராமசாமி ஆகியோருடன் ஒரே மேடையில் உட்காரும் தகுதியை ‘உதிரிப்பூக்கள்’ என்ற ஒரு படம் கொடுத்து விட்டது.சமையலறையில் மனைவிக்குக் கணவன் உதவியாகச் செயல்பட வேண்டும் என்பது போன்ற சிலவகை சமத்துவம் பற்றி தீபம் பார்த்தசாரதி பேசினார்.

நான் யோசித்தேன்... எனக்கு என்ன தெரியும்? காய்கறி நறுக்கக்கூடத் தெரியாதே! ஒருவேளை நானும் புடவை கட்டிக்கொண்டால் சமத்துவம் வந்து விடுமா?நான் ஒரு பெண்ணுரிமைவாதிதான். ஆனால், என்னிடம் கர்ப்பப்பை இல்லாததால் பெண்களைப் போல் ஒரு குழந்தையை பத்து மாதம் சுமக்கும் தகுதி இல்லை. அதைப்போலவே எனக்கு பாலியல் தொழிலில் ஈடுபடும் வாய்ப்பும் இல்லை. எனக்குத் தகுதி இல்லாமல் இல்லை...

ஆனால், பெண்களிடம் எனக்கும் வாய்ப்பு தரும் அளவுக்கு பணப்பெட்டி இல்லை. அது வந்துவிட்டால்... இதிலும் சமத்துவம் வந்துவிடும்.சோ என் இனிய நண்பர். அவ்வப்போது அவர் யோசனை கேட்டுத்தான் நடப்பேன். எனக்குத் தெரிந்த லிமிக்ஷிமிழிநி லிணிநிணிழிஞிகளில் அவரும் ஒருவர். அவர் அன்று சொல்லிய கூற்று, ‘பெண்களுக்குத் தகுதியான இடம் சமையலறை’ என்பது!

என் வாய்ப்பு கடைசியில் வந்தது.‘‘திருமணம் என்பது ஒரு அரசாட்சி போன்றது. மனைவி என்பவர் ஒரு கெட்டிக்கார சர்க்கார் அதிகாரிக்கு கொடுக்கப்பட்ட தட்டெழுத்து உதவியாளர் போன்றவர். கருத்து அவருடையதாக இருந்தாலும் உயர் அதிகாரி பச்சை மையில் கையெழுத்து இட்ட உத்தரவுதான் செயலாக்கப்படும்.

ஆகவே, பெண்ணடிமைத்தனத்துக்கும் திருமணத்துக்கும் இடையே இருக்கும் ஒரே ஒரு தடுப்புச் சுவர் ஆணடிமைத்தனம்தான். ஆகவே, பெண்கள் விடுதலை அல்லது திருமணம் இரண்டில் ஒன்றைத்தான் எதிர்பார்க்க முடியும்’’ என்றேன்.

அங்கே வந்த பெண்களில், அடிமைத்தனத்தை மனதளவில் மட்டும் ஒப்புக்கொண்ட என் இல்லத்தரசியும் ஒருவர். அவரையும் என்னையும் பெண்கள் கூட்டம் முற்றுகையிட்டு கேள்விக்கணைகள் தொடுத்தனர். ஆண்கள் பேசவேயில்லை... வேடிக்கை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தார்கள்.அதில் முதன்மையானது...

‘‘உங்கள் மனைவி வேறு ஒருவனுடன் தொடர்புகொள்ள நீங்கள் அனுமதிப்பீர்களா?’’‘‘அதைப் பற்றி எனக்குப் பெரிய கவலை ஒன்று மில்லை... என் படுக்கை அறை சுத்தமாக இருக்க வேண்டும், அவ்வளவுதான். அவள் செய்கைக்கு என்னை மதிக்காமல் குறை கூறுவீர்களே என்பதற்காக என் மனைவியிடம் அத்தகைய செய்கையைத் தவிர்க்கும்படி கேட்டுக்கொள்வேன்!’’

இது நடந்தது 32 ஆண்டுகளுக்கு முன். இப்போதெல்லாம் காலையில் நான் என் நடைவண்டியுடன் கடற்கரையில் உட்கார்ந்திருப்பேன். பல எலும்புகள் முறிந்த என் வலது கைக்கு என் தசைப் பயிற்சியாளர் பயிற்சி அளித்துக்கொண்டிருப்பார்.

அங்கே, மிக அழகிய - என் மகள் வயதுள்ள பெண்மணி - இரண்டு மாதங்களுக்கு ஒரு முறைதான் பீச்சில் தோன்றுவார் - என்னிடம் வந்து, உடல்நலம் பற்றியும் என் உடைந்த வலது கையின் முன்னேற்றம் பற்றியும் விசாரித்துச் செல்வார்.

சில மாதங்கள் கழித்து எனக்கு நடக்கும் தெம்பு ஏற்பட்டதும் அன்று மீண்டும் சந்தித்த அவரை, ‘‘நீங்கள் என்னுடன் கொஞ்சம் மெதுவாக நடங்களேன்! இருவரும் ஒன்றாகப் போகலாம்...’’ என்றேன். எல்லோரும் பார்த்து வியக்கும் அழகிய பெண்ணுடன் பேசிக்கொண்டே நடக்கும் ஆசை யாருக்குத்தான் வராது?!   நடக்க ஆரம்பித்ததும், ‘‘நீங்கள் ஏன் என்னுடன் நடக்க விரும்புகிறீர்கள்?’’ என்றார்.

நான்... ‘‘நீங்கள் ஏன் என் உடல்நலம் பற்றி விசாரித்தீர்கள்?’’ என்றேன்.அவர் தொடர்ந்தார்... ‘‘உங்கள் பேரன் என் மகனுடன் ஒரே பள்ளியில் படிக்கிறான். அவன் என் மகனிடம் சொன்னானாம்... நீங்கள் உங்கள் பெண்களிடம் திருமணம் வேண்டாமென்று யோசனை கூறினீர்களாமே, உண்மையா?’’‘‘ஆமாம்..!’’‘‘மூன்று பேருக்கும் திருமணம் செய்து வைத்தீர்களே... அது ஏன்?’’

‘‘திருமணம் தவறு என்பது என் கருத்து... அந்தத் தவறை செய்யும் உரிமை அவர்களுக்குத்தான் உண்டு. சரியோ, தவறோ... நான் சொல்வதை அவர்கள் செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்தும் உரிமை எனக்குக் கிடையாது!’’

இதைக் கேட்ட அந்த அழகிய அம்மையார் ஆங்கிலத்தில் சீறினார்...  ‘‘Where the hell were you man, when I got married?”இந்த அம்மையார் எங்கோ வெளிநாட்டில் வேலை பார்க்கிறாராம். அவருக்குத் திருமணத்துக்குப் பின் எத்தனை தொல்லையோ?அவர் கூறியதை ஒழுங்காக தமிழ்ப்படுத்தினால்....“எனக்குக் கல்யாணம் நடந்தபோது நீ எங்கேய்யா போய்த் தொலைஞ்சே?’’

‘‘ஒருவேளை உன் திருமணத்துக்கு முன்... நான் இளைஞனாக இருந்து உன்னை சந்தித்திருந்தால் ‘ஐ லவ் யூ’ என்று சொல்லியிருப்பேன். நீயும் என்னை மணந்துகொண்டு இன்று வேறு ஒரு கிழவனிடம் கண்ணீர் விட்டுக் கொண்டிருப்பாய்..!’’ என்றேன். அதற்குப் பின் மறுபடி அவரை இன்னும் சந்திக்கவில்லை.

கவிஞர் பழநிபாரதி

சாதி, மதம், கலை, கலாசாரம், வியாபாரம், குடும்பம், விளம்பரம் அனைத்துமே இங்கு ஒரு பெண்ணின் உடலை முன்வைத்தே பேசப்படுகின்றன. பாலியல் வன்முறை என்பதோடு முடியாமல் உயிரும் பறிக்கப்பட்டு வீதியோரங்களில் குப்பையாக வீசப்படுகிறாள் பெண். தன் உடல் மீதே பெண்ணுக்கு சுதந்திரமில்லாத சமூகத்தில் பெண்ணுரிமை பற்றிப் பேசுவதில் அர்த்தமில்லை. முதலில் அவள் உடல் மீது அவளுக்கு இருக்கும் பதற்றத்தை போக்குவதற்கு என்ன செய்யப்போகிறோம்? பெண்ணடிமைத்தனத்துக்கும் திருமணத்துக்கும் இடையே இருக்கும் ஒரே ஒரு தடுப்புச் சுவர் ஆணடிமைத்தனம்தான்.

(நீளும்...)

சாருஹாசன்

ஓவியங்கள்: மனோகர்