மனக்குறை நீக்கும் மகான்கள்



ஸ்ரீஅரவிந்த அன்னை

நீ ஏன் இறைவனை உணராமல் இருக்கிறாய்?
அவன் உன் இதயத்தில் இருக்கிறான்!
- ஸ்ரீ அன்னை

ஸ்ரீமத் பகவத் கீதையில் பகவான் ஸ்ரீகிருஷ்ணன் உளவியல் ரீதியாக அர்ஜுனனை போருக்கு தயார் செய்தது தர்மத்தின் பொருட்டே. இந்தப் போர் ஒரு குறியீடு. இந்த உலகத்தில் சதா சர்வ காலமும் ஒவ்வொரு மனிதருள்ளும் நிகழ்ந்துகொண்டே இருக்கும். மனதின் மாய வலையில் சிக்கித் தவிக்கும் போது, ஒவ்வொரு மனிதனுக்குள்ளிருந்தும் கடவுள் வழிகாட்டிக்கொண்டே இருக்கிறார்.

யார் யாரெல்லாம் மனதின் காதைத் திறந்து வைத்து, விழிப்புணர்வோடு இருக்கிறார்களோ அவர்களுக்கு கடவுளின் குரல் கேட்கும். அந்த விழிப்புணர்வு எதனால் வரும்? நான் யார் என்கிற தேடலால் வரும். அந்தத் தேடலுக்கு என்ன வேண்டும்?

அமைதி. எதையும் நிதானமாக எதிர்கொள்ளும் அமைதி. இது ஏன் நேர்ந்தது? இது நேராமல் தவிர்த்திருக்க முடியுமா? சரி, நேர்ந்துவிட்டது; என்ன செய்ய வேண்டும்? என ஒவ்வொன்றையும் நிதானமாக ஆராயும் புத்தி.இது எப்படி வாய்க்கும்? மனதைக் கேள்விகள் மூலமாக கடைவதுதான் வழி. அதைத்தான் ஆத்ம விசாரம் என்கிறார்கள்.

எதிலிருந்து ஆரம்பிப்பது?

அமைதியாக அமர்ந்து, ஏதாவது பிடித்த ஒரு மந்திரத்தை ஜபிக்க ஆரம்பித்தால் அது தியானத்திற்கு அழைத்துச் செல்லும். மெல்ல மெல்ல அது யோகமாய் மாறும். அந்த யோகம் நான் யார் என்கிற கேள்விக்கான பதிலுக்கு அருகே அழைத்துச் செல்லும். இந்து மதம் தன்னையறிதலை நோக்கித்தான் அனைவரையும் அழைத்துச் செல்கிறது.இதையே முக்தி என்றும் வீடுபேறு என்றும் சொல்கிறார்கள்.

சரி, இது எப்போது கிடைக்கும்?

சிலருக்கு உடனே... சிலருக்கு யுகங்களாகலாம்!சுவாமி விவேகானந்தரின் ராஜயோகம் என்னும் புத்தகத்தை கையில் வைத்திருந்த மிராவின் மனதுள் கேள்விகளும் பதில்களும் நீர்க்குமிழி போல எழுந்து உடைந்தது. முக்தி என்கிற கேள்வி எழுந்தபோதே விவேகானந்தரின் ராஜயோகம் புத்தகத்தைப் படிக்கத் தொடங்கினார்.

என்ன ஆச்சரியம்! முக்திக்கான பதிலாகவே அமைந்திருந்தது அந்தப் பக்கத்தில் சுவாமி விவேகானந்தர் சொல்லியிருந்த ஒரு கதை. ஆச்சரிய மிகுதியோடு விழிவிரிய படிக்கத் தொடங்கினார் மிரா.

நாரதர் என்ற தேவ முனிவர் ஒருவர் இருந்தார். மனிதர்களிடையில் பெரிய யோகிகளான முனிவர்கள் இருப்பதுபோல், தேவர்களிலும் யோகிகள் உள்ளனர். நாரதர் மிகப் பெரிய யோகி. அவர் எங்கும் சஞ்சரிப்பார். ஒருநாள் அவர் ஒரு காட்டின் வழியாகச் செல்லும்போது ஒருவனைக் கண்டார். வெகுகாலம் ஓரிடத்திலேயே அமர்ந்து தியானித்து தவம் செய்ததால், அவனது உடலைச் சுற்றிக் கறையான்கள் புற்று கட்டிவிட்டன. அவன் நாரதரை அழைத்து, ‘‘எங்கே போகிறீர்கள்?’’ என்று கேட்டான். ‘‘நான் சொர்க்கத்திற்குச் செல்கிறேன்’’ என்றார் நாரதர்.

‘‘அப்படியானால், ஆண்டவன் எனக்கு எப்போது அருள்புரிவார், எப்போது முக்தி அளிப்பார் என்று நீங்கள் தெரிந்து வர வேண்டும்’’ என்று கேட்டுக்கொண்டான் அவன். நாரதர் சிறிது தூரம் சென்றார். அங்கே ஒருவன் பாடிக் குதித்து நடனமாடிக் கொண்டிருந்தான். அவன் நாரதரைக் கண்டு, ‘‘நாரதரே! எங்கு செல்கிறீர்?’’ என்று கேட்டான்.

அவனது குரலும் செயலும் சாந்தமாக இல்லை. நாரதர், ‘‘நான் சொர்க்கத்திற்குப் போகிறேன்’’ என்றார். ‘‘அப்படியானால்  எனக்கு எப்போது முக்தி கிடைக்கும் என்று கேட்டு வாருங்கள்’’ என்றான் அவன். நாரதர் சென்று விட்டார்.

சிறிது காலத்திற்குப் பின் நாரதர் அந்தக் காட்டின் வழியாகத் திரும்பி வந்தார். உடலைச் சுற்றிப் புற்று வளர்ந்திருந்த மனிதன், ‘‘நாரதரே! என்னைப் பற்றி பகவானிடம் கேட்டீரா?’’ என்று கேட்டான்.

‘‘ஆம்’’ என்றார் நாரதர். ‘‘பகவான் என்ன சொன்னார்?’’ என்று கேட்டான் அவன்.‘‘நீ இன்னும் நான்கு பிறவிகளுக்குப் பின்னர் முக்தி அடைவாய் என்று பகவான் கூறினார்’’ என்றார் நாரதர்.
அதைக் கேட்டதும் அவன் அழுது புலம்பி, ‘‘என்னைச் சுற்றிப் புற்று மூடும்வரை இவ்வளவு காலம் தியானித்தேன். இன்னும் நான்கு பிறவிகளா?’’ என்றான்.

நாரதர் மற்ற மனிதனிடம் சென்றார். ‘‘பகவானிடம் கேட்டீரா, நாரதரே?’’ என்றான் அவன். ‘‘ஆம், கேட்டேன் அந்தப் புளியமரத்தைப் பார். அதில் எத்தனை இலைகள் உள்ளனவோ அத்தனை பிறவிகளுக்குப் பின்பு உனக்கு முக்தி கிட்டும் என்றார் பகவான்’’ என்று நாரதர் கூறினார். அதைக் கேட்டதும் அவன் மகிழ்ச்சியால் குதித்தபடியே, ‘‘இவ்வளவு விரைவாக எனக்கு முக்தி கிடைக்கப் போகிறதே!’’ என்று கூறினான். அப்போது ஒரு குரல், ‘‘மகனே! இந்தக் கணமே உனக்கு முக்தி அளிக்கிறேன்’’ என்று கூறியது.

- அவனது விடாமுயற்சிக்குக் கிடைத்த வெகுமதி அது. அத்தனை பிறவிகளிலும் பாடுபட அவன் தயாராக இருந்தான். எதுவும் அவனைத் தளரச் செய்யவில்லை. ஆனால் முதல் மனிதனுக்கோ நான்கு பிறவிகள்கூட மிக நீண்ட காலமாகத் தோன்றியது.

யுகயுகங்களாகவும் காத்திருக்கத் தயாராக இருந்த மனிதனிடம் இருந்தது போன்ற விடாமுயற்சி மட்டுமே பெரும் பேற்றை அளிக்கும்- என்று சொல்லும் விவேகானந்தர், மனதின் ஒருமைக்கான ராஜயோகம் குறித்தும் பேசுகிறார். மிரா புத்தகத்தைக் கூர்மையாய் படிக்கத் தொடங்கினார்.

யோகமாகிய நெருப்பு மனிதனைச் சூழ்ந்துள்ள பாவக்கூட்டை எரித்துவிடுகிறது. அப்போது அறிவு தூய்மை பெறுகிறது. நிர்வாணம் நேரடியாக வாய்க்கிறது. யோகத்திலிருந்து ஞானம் வருகிறது, ஞானம் யோகிக்கு உதவுகிறது.

 யார் யோகத்தையும் ஞானத்தையும்  இணைத்து கடைப்பிடிக்கிறானோ அவனுக்கு இறைவன் அருள்புரிகிறார். மஹாயோகத்தைத் தினமும் ஒருமுறை அல்லது இரண்டு முறை அல்லது மூன்று முறை அல்லது எப்போதும் கடைப்பிடிப்பவர்கள் தேவர்களே என்பதை அறிந்து கொள்ளுங்கள். யோகத்தில் இரு பிரிவுகள் உள்ளன.

ஒன்று அபாவம், மற்றது மஹாயோகம். தனது ஆன்மாவைச் சூன்யமாக, குணமற்றதாக தியானிப்பது அபாவம். ஆன்மாவைப் பேரானந்தம் நிறைந்ததாக, நிர்மலமானதாக, இறைவனுடன் ஒன்றுபட்டு இருப்பதாகக் காண்பது மஹாயோகம். இந்த இரண்டின் மூலமாகவும் யோகி தன் ஆன்மாவை உணர்கிறான்.

 மஹாயோகத்தில் யோகி தன்னையும் பிரபஞ்சம் முழுவதையும் இறைவனாகக் காண்கிறான். இது யோகங்கள் அனைத்திலும் உயர்ந்தது. மேலான இதனுடன் ஒப்பிடும்போது, நாம் படித்தும் கேட்டும் உள்ள பிற யோகங்கள், யோகம் என்று கூறத் தகுதியற்றவை.யமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்யாஹாரம், தாரணை, தியானம், சமாதி என்பவை ராஜயோகத்தின் அங்கங்கள்.

அஹிம்சை, சத்தியம், அஸ்தேயம், அபரிக்கிரகம், பிரம்மச்சரியம் ஆகியவை யமம். இவை மனத்தை அதாவது சித்தத்தைத் தூய்மையாக்கும். மனத்தாலோ வாக்காலோ உடலாலோ எந்த உயிருக்கும் துன்பம் விளைவிக்காமல் இருப்பது அஹிம்சை. அஹிம்சையை விட மேலான தர்மம் ஒன்றில்லை.

சத்தியத்தால் நாம் கர்ம பலன்களை அடைகிறோம். படைப்பிலுள்ள எந்த உயிருக்கும் தீங்கு செய்யாமலிருப்பதால் ஒருவனுக்குக் கிடைக்கின்ற ஆனந்தத்தைவிட மேலான ஆனந்தம் எதுவுமில்லை. சத்தியத்தால் அனைத்தையும் அடையலாம். சத்தியத்திலேயே அனைத்தும் நிலைபெற்றிருக்கின்றன.

உள்ளதை உள்ளபடி கூறுதல் - இதுதான் சத்தியம். திருட்டுத்தனமாகவோ, வலிமையைப் பயன்படுத்தியோ பிறர் பொருளைக் கவராது  இருத்தல் அஸ்தேயம். மனம், வாக்கு மற்றும் உடலால் எப்பொழுதும் எல்லா நிலைகளிலும் தூயவனாக இருப்பது பிரம்மச்சரியம். எவ்வளவுதான் பயங்கரமாகத் துன்புற்றாலும், பிறர் பொருளைத் தானமாகப் பெறாமலிருப்பது அபரிக்கிரகம்.

பிறரிடமிருந்து தானமாக ஒன்றைப் பெறுகின்ற ஒருவனின் உள்ளம் அசுத்தம் அடைகிறது. அவன் தாழ்ந்த நிலையை அடைகிறான். சுதந்திரத்தை இழக்கிறான், கட்டுண்டவனாகிறான், பற்றுக் கொண்டவனாகிறான்...

படிக்கப் படிக்க விவேகானந்தர் மிராவின் மனதில் சிகரமாய் உயர்ந்து நின்றார். ‘அடடே, எப்படிப்பட்ட ஞானி இவர். பாரதம் இந்த உலகத்திற்குத் தந்த அருள் கொடைகளில் மகத்தானவர் அல்லவா இவர்! யோகம் பற்றி இவர் கூறும் விஷயங்கள் எத்தனை நேர்த்தியாக இருக்கின்றன...’ இப்படியாக யோசித்துக் கொண்டிருந்தவரின் மனதில் பாரதம் என்கிற வார்த்தை மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. ‘பாரதம்... பாரதம்... கர்ம பூமி அல்லவா அது? அதை நான் எப்போது தரிசிக்கப் போகிறேன். கண்களை மூடி கடவுளிடம் கேட்டார்; ‘‘பகவானே நான் எப்போது பாரத மண்ணை தரிசிப்பேன்?’’

அன்னையின் அற்புதம் அன்னை என் தாய்!

‘‘எனக்கு ஒன்பது வயது இருக்கும்போது என் தாயாரை இழந்துவிட்டேன். தாயன்பு கிடைக்காதது என் மனதில் மிகப் பெரிய வேதனையாக இருந்தது. என் திருமணத்திற்குப் பிறகும் அந்த வேதனை நீடித்தது. அப்போது என் தோழி அரவிந்த அன்னையின் திருவுருவப் படத்தைக் கொடுத்து ‘இந்த அன்னையிடம் உன் அம்மாவுடன் பேசுவது போலவே பேசலாம். உனக்கு அன்னை பூரண அன்பைப் பொழிவார்’ என்று சொன்னாள்.

நானும் அதன்படி அன்னையின் படத்தை வைத்து வழிபட்டு வந்தேன். மானசீகமாக அன்னையிடம் பேசி வந்தேன். நான் சொல்வதை எல்லாம் பெற்றவளைப் போல அன்னை கேட்பதை உணர்ந்தேன். இதற்கிடையே எனக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. வைத்தியம் பார்த்தோம். வலி மட்டும் குறைந்தபாடில்லை.

குடும்பத்துடன் பாண்டிச்சேரி அரவிந்தர் ஆசிரமம் சென்றேன். அன்னையின் சமாதி முன் அமர்ந்து மனம் விட்டு அன்னையிடம் பேசினேன். மறுநாள் வீட்டுக்கு வந்து தூங்கி எழுந்த போது என் கால் வலி முழுதும் நீங்கி இருந்தது. அன்னை என் வாழ்வில் நிகழ்த்திய அதிசயம் இது.

இப்போதும் வடவள்ளியில் வசிக்கிறேன். கோவை சாய்பாபா காலனி, நாராயண குரு சாலையில் இருக்கும் அன்னை ஆசிரம தியான மையம் எனக்கு பிறந்த வீடு போல. அங்கு சென்றவுடன் தாய்மடியில் தலை சாய்க்கும் நிம்மதி. அன்னை என்னோடு இருக்கிறார்!’’ - நெகிழ்கிறார், இல்லத்தரசி சத்யா ரவிராஜன்.

வரம் தரும் மலர்

செல்வம் தரும் சிவப்பு அல்லி


ஒரு மனிதன் நிம்மதியாக வாழ பொருளாதாரத் தன்னிறைவு அவசியம். பசி, வறுமை எனும் கொடுமைகள் அண்டாதிருக்க மகாலட்சுமியின் அருள் அவசியம். மகாலட்சுமியின் அருள் கிடைத்தால் செல்வ வளம் தானாக வந்து சேரும். மகாலட்சுமியின் அருளை அரவிந்த அன்னையிடம் முறையிட்டு எளிதில் பெறலாம். அன்னைக்கு சிவப்பு அல்லி மலரை சமர்ப்பித்து வேண்டிக் கொண்டால் போதும். கருணை மிகுந்த அரவிந்த அன்னையின் அருளால் வீட்டில் செல்வம் பெருகும். கடன் நீங்கும். நிம்மதி பெருகும்.

(பூ மலரும்...)

எஸ்.ஆர்.செந்தில்குமார்
ஓவியம்: மணியம் செல்வன்