டைவர்ஸ்



‘‘டைவர்ஸ் பெட்டிஷனை ரெடி பண்ணி கொண்டு வந்திருக்கேன். சம்பந்தப்பட்ட ரெண்டு பேரும் இதுல கையெழுத்துப் போட்டாச்சுன்னா இன்னைக்கே கோர்ட்ல ஃபைல் பண்ணிடலாம்...’’ என்று வக்கீல் சொன்னார்.

அதைக் கேட்டு விஷாலும் திவ்யாவும் இறுகிப் போனார்கள். திவ்யாவின் இடுப்பிலிருந்த குழந்தை ஏதோ பெரிய பிரச்னை என்று பயந்து அழ ஆரம்பித்தது. ‘எவ்வளவு அன்பாக ஒன்றுபட்டிருந்த குடும்பம் பிரியப் போகிறதே!’ - விஷால் விரக்தியின் உச்சத்தில் இருந்தான்.

விஷாலின் அப்பா வேதனையில் கண் கலங்கினார். விஷாலின் அம்மா கேவவே ஆரம்பித்துவிட்டாள். சிடுசிடு முகத்துடன் ஆளுக்கொரு பக்கம் இரும்பு உலக்கையால் வெற்றிலை இடித்துக்கொண்டிருந்த விஷாலின் தாத்தாவும் பாட்டியும் தட்டுத் தடுமாறியபடி எழுந்து வந்தனர்.

‘‘எந்த நேரமும் சண்டையும் சச்சரவுமா இருந்தா வேற என்ன தான் செய்யறது? ரெண்டே மாசத்துல டைவர்ஸ் வாங்கிக் குடுத்துடுங்க...’’ என்று தாத்தா கடுகடுத்தார்.‘‘ரெண்டு மாசமென்ன, முடிஞ்சா ஒரே மாசத்துல டைவர்ஸ் வாங்கிக் குடுத்துடுங்கய்யா... ரோதனை தாங்கலை...’’ என்று பாட்டி படபடத்தார்.இருவரும் ஒருவரை ஒருவர் முறைத்தபடியே அந்த விவாகரத்து மனுவில் கையொப்பமிட்டனர்!

சுபமி