கிச்சன் to கிளினிக்



புதிய பகுதி

கிச்சனுக்கும் கிளினிக்குக்கும் என்னசம்பந்தம்?

இரண்டு வார்த்தைகளும் ஒரு ரைமிங்கில் ஒத்துப் போகிறதே தவிர வேறொன்றுமில்லையே என்றுதான் பலரும் நினைத்துக் கொண்டிருப்போம். ஆனால், உண்மை அதற்கு நேர்மாறானது! நம் வீடுகளின் கிச்சன்கள் சரியானதாக இருந்தால் நாம் கிளினிக்குகளுக்குப் போக வேண்டிய அவசியமே இல்லை. அடுக்களைகளை ஒழுங்கமைப்பதன் மூலம் ஆஸ்பத்திரிகளிலிருந்து நாம் தப்பித்துக் கொள்ள முடியும்.

‘‘ஓ... ‘உணவே மருந்து; மருந்தே உணவு’ என்று சொல்லும் அந்த குரூப்பா நீங்கள்?’’ என்ற கேள்வி உங்களுக்குள் எழுந்தால் எனக்கு ஆச்சரியம் ஒன்றுமில்லை. ஏனெனில், இன்று திரும்பிய திசைகளில் எல்லாம் உணவை மருந்தாகப் பயன்படுத்துவது எப்படி என்றும், மருந்தை உணவாக மாற்றுவது எவ்வாறு என்றும் விளக்கும் கட்டுரைகளும், நூல்களும் பரவிக் கிடக்கின்றன. நிஜத்தில் நாம் இங்கு அதுபற்றிப் பேசப் போவதில்லை!

உணவை மருந்தாகப் பயன்படுத்துவது பற்றி நாம் பேசப்போவ தில்லை என்றால் நவீன உணவுகளின் தீமைகளைப் பற்றியும், மரபுவழி உணவுகளின் பெருமை பற்றியும் கலந்துரையாடப் போகிறோமா என்ன? அதுவும் இல்லை.அப்படியெனில், உணவு பற்றிய இந்தத் தொடரின் மூலம் நாம் என்னதான் செய்யப் போகிறோம்? கோபப்படாதீர்கள்... நேராக விஷயத்திற்கு வந்து விடுவோம்.இந்த உலகில் எல்லா விஷயங்களுமே முரண்பட்ட இரண்டு துருவங்களை அடக்கியதாகவே உள்ளன.

இது இயற்கையின் நியதி. நம் வாழ்விலும் இரண்டு எதிர்த் திசைகள் எப்போதும் இருக்கும். இரண்டும் அதீத எல்லைகள். உதாரணமாக, ‘நம் பாரம்பரியம் நல்லது’ என்று பெருமிதப்படும் பண்பாட்டு ஆர்வலர்கள் பலரும் இன்னொருபுறம் ‘நவீன விஷயங்கள் முழுமையாக நல்லதில்லை’ என்று சொல்வார்கள். ‘நவீன பொருட்களே மனித வாழ்வை மாற்றின’ என்று சொல்லும் இன்னொரு தரப்பினர், ‘பாரம்பரிய அம்சங்கள் அனைத்தும் அரதப் பழசானவை. ரேஸ் பைக் யுகத்தில் கட்டை வண்டியில் போவார்களா? வாட்ஸ் அப் காலத்தில் போஸ்ட் கார்டு வேஸ்ட்’ என கிண்டல் செய்வார்கள்.

இப்படித்தான் பழமையையும் புதுமையையும் ஒரு சார்போடு புரிந்து கொள்கிறார்கள் பலரும். இதேபோன்ற இரு துருவங்கள் நம்முடைய உணவு பற்றிய புரிதலிலும் உண்டு. ஒருபுறம் நம் பாரம்பரிய உணவுகள் சிறந்தவை என்று நாம் பேசுகிறபோதே, ‘சர்வ ரோக நிவாரணி’ போல எல்லாப் பிரச்னைகளுக்கும் அவற்றை மட்டுமே தீர்வாக நம்புவதும் நிகழ்கிறது. இந்த நம்பிக்கையை அறுவடை செய்யும் நோக்கில் மிகப்பெரிய வணிக நிறுவனங்களும் களமிறங்கி, தங்கள் கடைகளை மாற்றிக்கொண்டு மரபுவழி உணவுகளை விற்கும் நிறுவனங்களாக மாறிவிடுகின்றன. இன்னொருபுறம், ‘நவீன உணவுகள் மோசமானவை’ என்று சொல்லிக்கொண்டு, குடிக்கிற தண்ணீரில் இருந்து கடிக்கிற கரும்பு வரை சகலமும் விஷம் என்று விரக்தி அடைந்து விடுவது.
இப்படியான இரு துருவங்களுக்கு இடையில் உணவு பற்றிய குழப்பங்கள் கிளம்பி வருகின்றன.

உணவுகளைப் பற்றியும், அவற்றின் மரபுத்தன்மை, கலப்படம் பற்றியும் பேசுகிறபோது உணவிற்கும், நம் உடலுக்குமான அடிப்படைத் தொடர்பை நாம் மறந்து விடுகிறோம். இந்த ஞாபக மறதியை அடியுரமாகப் பயன்படுத்தும் பல வணிக நிறுவனங்கள், பயத்தை மூலதனமாகக் கொண்டு லாபத்தை அறுவடை செய்கின்றன. பழைய பண்பாடும் வரலாறும் இல்லாமல் இன்றைய நாம் இல்லை; அதேபோல நவீனத்தை புறக்கணித்துவிட்டு இருள்குகைகளில் வாழவும் யாரும் தயாராக இல்லை. உணவு விஷயத்திலும் இதுதான் இயல்பான நடைமுறையாக இருக்க வேண்டும்.

நம்முடைய அன்றாடப் பழக்கங்கள், உணவுகள், உணவுமுறைகளை மரபுத்தன்மையோடு நவீன காலத்திற்கு ஏற்றவாறு மாற்றிக் கொள்வதைப் பற்றிப் பேசுவதுதான் இத்தொடரின் பிரதான நோக்கம். ஒவ்வொரு உணவின் தயாரிப்பு முறைகளில் உள்ள குளறுபடிகள் பற்றியும், அந்தக் காலத்தில் உணவுகளை எந்த அடிப்படையில் பயன்படுத்தினார்கள் என்பதன் அறிவியல் பூர்வமான ரகசியங்களைப் பற்றியும் அறிந்து கொள்வோம்.

அப்படி அறிந்து கொள்ளும்போதே, நம் நவீன கால வாழ்வில் அவற்றை எவ்வாறு நடைமுறைக்குக் கொண்டு வருவது என்பது பற்றியும் விரிவாகப் பார்க்கலாம்.
‘நாற்பது வயதில் தன்னுடைய உடலை அறிந்தவன் மருத்துவனாக இருக்கிறான்; அறியாதவன் முட்டாளாக, நோயாளியாக இருக்கிறான்’ என்பது ஒரு ஆங்கிலப் பழமொழி. நாம் மருத்துவர் ஆகா விட்டாலும் பரவாயில்லை; எந்த வயதிலும் நோயாளியாக மாறாமல் இருப்பதற்கு உடலையும், உணவையும் அறிந்து கொள்ள வேண்டும்.

உணவும் உடலும் வெவ்வேறானவை அல்ல. ஒன்றிலிருந்துதான் இன்னொன்று தீர்மானிக்கப்படுகிறது. எனவேதான் உடலைப் பற்றி அறிய வேண்டுமென்றால் உணவைப் பற்றி அறிய வேண்டும். உணவைப் பற்றிப் புரிய வேண்டுமென்றால் உடலைப் பற்றியும் புரிந்துகொள்ள வேண்டும்.உணவுகளைப் பற்றிய பல தவறான புரிதல்களும், மிக மோசமான உணவுப் பழக்கங்களும் நம்மிடம் இருக்கின்றன. இவைதான் நம்மை கிச்சனிலிருந்து கிளினிக்கிற்கு அனுப்பும் காரணிகள். எதற்குச் சாப்பிட வேண்டும் என்ற உடலியல் ரீதியான கேள்விக்கு பதில் தெரியாமல் இருப்பது ஒரு புறம். இன்னொருபுறம் உணவுகள் நோய்களைப் போக்கிவிடும் என்று காரணம் தெரியாமல் நம்புவது. இவைதான் நாம் செய்யும் இரட்டைத் தவறுகள். ஒன்று - உடல் பற்றிய அறியாமை, இன்னொன்று - உணவு பற்றிய அறியாமை.

*எல்லா பழங்களும் உடலுக்கு நல்லது என்ற பொதுவான கருத்தை நம்பி, ஆப்பிள் போன்ற அமிலத்தன்மையுள்ள பழங்களை அளவிற்கு அதிகமாகச் சாப்பிடுவது.

*வாழைத்தண்டு ஜூஸ் சாப்பிட்டால் சிறுநீரகக் கற்கள் கரையும் என்று இன்னொருவரின் அனுபவத்தை ஏற்று, தொடர்ந்து வாழைத்தண்டு ஜூஸ் சாப்பிட்டு உடலின் நீர்ச்சமநிலையைக் கெடுத்துக் கொள்வது.

*உடலின் புளிப்புச் சுவை அதிகரிப்பால் ஏற்பட்ட மலச்சிக்கலை வாழைப்பழம் அதிகரிக்கும் என்பது புரியாமல், ‘எல்லா விதமான மலச்சிக்கலுக்கும் வாழைப்பழம் நிவாரணம் தரும்’ என்று நம்பி வாழை மரங்களை மொட்டையடிக்கும் அளவிற்குச் சாப்பிடுவது.

*மணியடித்தால் சோறு என்ற தத்துவத்தின் அடிப்படையில் வாட்ச் காட்டும் நேரத்திற்கு அலாரம் வைத்து சாப்பிட்டு உடலைக் கெடுத்துக் கொள்வது.

*சமையல் என்ற சத்துக்களைச் சமப்படுத்தும் செயலில் என்ன நடக்கிறது என்று அறியாமல், எல்லா உணவுகளையும் அதன் சமநிலை கெடுமாறு சமைப்பது; சாப்பிடுவது.

உடலிலும் உணவிலும் நாம் செய்யும் தவறுகளை இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். நம்முடைய முன்னோர்கள் உணவிலும், உண்ணுவதிலும் பல ரகசியங்களைப் புரிந்து கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு உடலும் தனித்தன்மை வாய்ந்தது; எனவே ஒவ்வொரு உடலுக்கும் ஏற்ற தனித்தனியான உணவுகளைக் கொடுக்க வேண்டும் என்ற புரிதல் அவர்களுக்கு இருந்தது. உணவு பற்றியும், உடல் பற்றியும் பல ஃபார்முலாக்களை நமக்காக உருவாக்கித் தந்தார்கள் நம் தாத்தாக்கள்.

உடலையும், உணவையும் புரிந்து கொள்ள நம் முன்னோர்கள் என்ன விஞ்ஞானிகளா என்ன? ஆம். விஞ்ஞானிகள்தான். உணவியல், உடலியல், உளவியல், உலகியல் என்னும் நான்முகத் தத்துவத்தையும், அவர்களின் அறிவியலையும் நாம் புரிந்துகொள்ள முயல்வோம்.

தேனி மாவட்டம், கம்பத்தைச் சேர்ந்தவர் அக்கு ஹீலர் அ.உமர் பாரூக். மரபுவழி அறிவியலை மீட்டுருவாக்கம் செய்யும் பணியை ஒரு இயக்கமாக முன்னெடுத்துச் செல்பவர். உணவு மற்றும் மருத்துவ வணிகத்துக்குப் பின்னுள்ள சர்வதேச அரசியலை ஆய்வுசெய்து, அதன் ஆதி அந்தங்களை அம்பலப்படுத்துவதில் கவனம் ஈர்ப்பவர்.

ஆங்கில மருத்துவத் தொழில்நுட்பம் மற்றும் அக்கு பஞ்சர் மருத்துவத்துறையில் பல ஆண்டுகள் அனுபவம் பெற்ற இவர், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல பல்கலைக்கழகங்களில் பாடத்திட்ட வடிவமைப்புக் குழுக்களில் பங்களித்திருக்கிறார்.

மனிதகுல வளர்ச்சிக்குச் சவாலாக அதிகரித்து வரும் நோய்கள், அவற்றின் பின்னணி, உணவில் மிகுந்துள்ள கலப்படங்கள், மருத்துவ முறைகேடுகள், அக்குபஞ்சர் மருத்துவம் சார்ந்து 20க்கும் மேற்பட்ட நூல்களையும் எழுதியிருக்கிறார். ‘நாற்பது வயதில் தன்னுடைய உடலை அறிந்தவன் மருத்துவனாக இருக்கிறான்; அறியாதவன் நோயாளியாக இருக்கிறான்’ என்பது ஒரு ஆங்கிலப் பழமொழி. நாம் மருத்துவர் ஆகாவிட்டாலும் பரவாயில்லை; நோயாளியாக மாறாமல் இருக்க என்ன வழி?

(தொடர்ந்து பேசுவோம்...)

அக்கு ஹீலர் அ.உமர் பாரூக்