உலக நாயகன் வருகை!



மீடியாக்கள் பெருகி, தகவல்களாகவும் குப்பைகளாகவும் செய்திகள் பரவியும் இறைந்தும் கிடக்கும் இந்த டெக்னோ யுகத்தில் ‘உலகப்புகழ்’ என்பதும், உலகம் அறிந்த பிரபலம் ஆவதும் அரிதாக சிலருக்குத்தான் வாய்க்கிறது.

அப்படி ஒருவர் ஒபாமா. அமெரிக்க அதிபரே உலகத்தின் நாட்டாமையாக சர்வதேச சமூகத்தால் ஒப்புக் கொள்ளப்படுவதால், அந்தப் பதவியில் அமரும் யாரும் உலகின் எல்லா நாடுகளிலும் அறியப்பட்டவர் ஆகிவிடலாம்.

இரண்டாவது முறை அதிபராகி இருக்கும் ஒபாமா, இந்தியாவின் குடியரசு தின விழாவில் கலந்து கொள்ளும் முதல் அமெரிக்க அதிபர் என்ற பெருமையோடு வந்திருக்கிறார். தங்கள் அதிபரின் பாதுகாப்பு என்பது அமெரிக்க நிர்வாகத்துக்கு கௌரவமான ஒரு விஷயம். அதற்காக அவர்கள் என்ன செய்கிறார்கள்?

பொதுவாக இந்தியாவுக்கு அரசு விருந்தினர்களாக வரும் வெளிநாட்டு அதிபர்கள் தங்குவதற்கு என குடியரசுத் தலைவர் மாளிகையில் பிரத்யேக வளாகம் உண்டு; வசதியான சொகுசு அறைகள் உண்டு. ஆனால் கிளின்டன் இந்தியா வந்தபோது இங்கு பார்வையிட வந்த அமெரிக்க அதிகாரிகள், கரப்பான் பூச்சிகளையும் எலிகளையும் பார்த்து மிரண்டு விட்டார்கள். அப்போதிருந்து அமெரிக்க அதிபர் வந்தால் தங்குவது டெல்லி மௌர்யா ஷெரட்டன் ஹோட்டலில்தான்.

ஒபாமா அங்குதான் தங்குகிறார். அந்த ஹோட்டலின் அத்தனை அறைகளையும் புக் செய்திருக்கும் அமெரிக்க பாதுகாப்புப் படை அதிகாரிகள், ஒட்டுமொத்தமான அந்த ஏரியாவையே தங்கள் கண்காணிப்பில் கொண்டு வந்தனர். ஒபாமா அங்கிருக்கும் நாட்களில் அந்நிய நபர்களுக்கு அனுமதி இல்லை. ஹோட்டலின் சமையல்காரர்கள் உள்ளிட்ட சில ஊழியர்கள் இடையில் வீட்டுக்குப் போகவும் தடை.

ஒபாமா வெளிநாடுகளில் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகள் பெரும்பாலும் திறந்தவெளி அரங்குகளில் நடத்தப்படுவதில்லை. பாதுகாப்பு கொடுப்பது தலைவலியான விஷயம் என்பதால், அமெரிக்க அதிகாரிகள் இதை அனுமதிப்பதில்லை. ஆனால் குடியரசு தின அணிவகுப்பு டெல்லி ராஜ்பாத்தில் திறந்தவெளியில்தான் நடக்கும்.

அதனால் கடும் கண்காணிப்பு. ஒபாமா வருவதற்கு முன்பாகவே இந்தியா வந்த சீக்ரெட் சர்வீஸ் அதிகாரிகள், அந்த ஏரியாவில் திரியும் தெருநாய்களை அப்புறப்படுத்தச் சொன்னார்கள். குடியரசு தின விழாவுக்கு வருகை தரும் வி.ஐ.பி.கள் பட்டியலையும் கேட்டு, அவர்களைப் பற்றி விசாரித்தார்கள்.

டெல்லி முழுக்க கண்காணிப்பை பலப்படுத்த சுமார் 15 ஆயிரம் இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க இப்படி கேமராக்கள் பொருத்தச் சொல்லி ஏற்கனவே டெல்லி உயர் நீதிமன்றம் உத்தர விட்டு இருந்தும், மூன்று ஆண்டுகளாக எதுவும் ஆக்ஷன் இல்லை.

இப்போது ஒபாமாவுக்காக இப்படிச் செய்ததும் பொங்கி எழுந்த கோர்ட், ‘‘ஒரு வெளிநாட்டு அதிபருக்காக இதையெல்லாம் செய்வீர்கள். உங்கள் சொந்தக் குடிமக்களை பாதுகாக்க செய்ய மாட்டீர்களா?’’ என அரசைக் கடுமையாக கண்டித்திருக்கிறது. ஒபாமா திரும்பிப் போன பிறகும் இந்த கேமராக்களை அகற்றக் கூடாது என நீதிமன்றம் உத்தரவு போட்டிருக்கிறது.

பொதுவாக அமெரிக்க அதிபர்கள் எந்த வெளிநாட்டுக்குப் போனாலும், அங்கு அவரது பாதுகாப்பை உறுதி செய்வது அவரது சீக்ரெட் சர்வீஸ் அதிகாரிகள்தான். உலகின் பல நாட்டு உள் விவகாரங்களில் தலையிடும் பெரியண்ணன் என்பதால் எங்கிருந்து, யாரால், எப்போது ஆபத்து வரும் என கணிக்க முடியாத நிலை. அதனால், அதிபர் போவதற்கு முன்பே அதிகாரிகள் படை போய்விடும். 2010ம் ஆண்டு ஏற்கனவே ஒபாமா வந்தபோது 800 அதிகாரிகள் அவரது பாதுகாப்புக்காக வந்தனர். இம்முறை 1600 பேர். கிட்டத்தட்ட 80 விமானங்களில் இவர்கள் வந்தனர்; கருவிகளும் வாகனங்களும் வந்தன. இதில் 40 மோப்ப நாய்களும் அடக்கம்.

குடியரசு தின விழாவுக்கு வரும் விருந்தினர் எப்போதும் நமது ஜனாதிபதியுடன் அவரது காரில் வந்து இறங்குவது மரபு. இந்த மரபு ஒபாமாவுக்காக மீறப்படுகிறது. அமெரிக்க அதிபர் எங்கு சென்றாலும் அவரது பிரத்யேகக் காரில்தான் பயணிக்க வேண்டும். இதற்காக ஒரே மாதிரி இருக்கும் மூன்று கறுப்பு கெடிலாக் கார்களை வெள்ளை மாளிகையில் வைத்திருக்கிறார்கள். அதிபர் எங்கு சென்றாலும் அவருக்கு முன்பாக இந்தக் கார் விமானத்தில் போய் இறங்கிவிடும்.

குண்டுகளாலோ, உயிரியல் ஆயுதங்களாலோ தாக்குதல் நடத்த முடியாத அளவுக்கு பாதுகாப்பான இந்தக் காரே அதிபரின் கட்டுப்பாட்டு அறையாக செயல்படுகிறது. இதில் இருந்தபடி அவர் வெள்ளை மாளிகையைத் தொடர்பு கொள்ள முடியும். அமெரிக்க துணை அதிபருக்கோ, ராணுவத் தளபதிகளுக்கோ உத்தரவுகள் பிறப்பிக்க முடியும். அமெரிக்க அணு ஆயுதங்களை இயக்கவும் முடியும்.

அதிபரின் பாதுகாப்புக்காக மெரைன் ஹெலிகாப்டர்களையும் எடுத்துச் செல்வார்கள். இவற்றை பிரித்து, விமானத்தில் எடுத்துச் சென்று, எந்த நாட்டிலும் திரும்பப் பொருத்திக் கொள்வார்கள். ஏதேனும் ஆபத்து என்றால், நிமிடங்களில் அதிபரை பத்திரமாகக் கூட்டிச் செல்ல இது உதவுகிறது.

எல்லாவற்றையும்விட பாதுகாப்பானது அமெரிக்க அதிபரின் ‘ஏர் ஃபோர்ஸ் 1’ விமானம். இதை ‘பறக்கும் வெள்ளை மாளிகை’ என்கிறார்கள். அதிபர் இதில் ஏறியவுடனே இது வெள்ளை மாளிகையாகி விடுகிறது. இதில் அதிபரின் சொகுசு ஓய்வறை, பிரத்யேக அலுவலகம், அவரது உதவியாளர்களுக்கு ஆபீஸ், கூட்ட அறை, மினி ஆபரேஷன் தியேட்டருடன் ஒரு மருத்துவமனை, நூறு பேருக்கு உணவு தயாரிக்க முடிகிற கிச்சன் என சகலமும் உண்டு. மூன்று அடுக்குகளில் 4 ஆயிரம் சதுர அடியில் இருக்கும் இந்த விமானத்தை இயக்க ஒரு மணி நேரத்துக்கு 60 லட்ச ரூபாய் செலவிடுகிறது அமெரிக்கா.

அவசரத்துக்கு நடுவானிலேயே எரிபொருள் நிரப்ப முடியும் என்பதால், இதில் தொடர்ச்சியாக அதிபர் பறந்துகொண்டே இருக்கலாம். இதில் இருந்தபடியே அதிபர் நாட்டு மக்களுக்கு உரையாற்றலாம். 87 தொலைபேசிகள், 19 டி.விக்கள் கொண்ட தொடர்பு மையம் இதில் உள்ளது. ரேடார்களுக்கு சிக்காத, ஏவுகணைகளால் தாக்க முடியாத பாதுகாப்பு கவசங்களைக் கொண்ட விமானம் இது. அமெரிக்க அதிபராக இருப்பது எவ்வளவு ஆபத்தான விஷயம் என்பதை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள்!

- அகஸ்டஸ்