வெங்கல்ராவை விசாரித்த ரஜினி



எங்கேயோ பார்த்த முகம்

என்ன ராவ்...  வீடு கட்டியாச்சா?

வடபழனி, பஜனை கோயில் தெரு... வரிசையாக நான்கைந்து ஒண்டுக்குடித்தனம்... வெளியே இருக்கும் அடிபம்ப்பில் கைலி கோலமாக தண்ணீர் அடித்துக் கொண்டிருக்கிறார் வெங்கல்ராவ்.
‘‘கேமராகாரு வந்துட்டாரா? மொட்ட மாடிக்கு போங்கோ... டிரஸ்ஸு மாத்திட்டு வந்துடுறேன்!’’ என நம்மை படிக்கட்டு பக்கம் பேக் பண்ணுகிறார்.

வீட்டு வாசலருகே ஒரு பழைய சைக்கிள்... வாய்ப்பு கேட்கவும் ஷூட்டிங்குக்கும் இன்னமும் இந்த சைக்கிளில்தான் செல்கிறாராம் வெங்கல்! ‘‘பேட்டி என்றால் இப்படித்தான்’’ என போஸ் கொடுக்கும் மூடிலேயே இருந்தவரை, ‘‘சும்மா நேச்சுரலா... கேஷுவலா... உண்மையா பேசுவோம் சார்...’’ என நார்மலாக்க நிறைய நேரம் தேவைப்பட்டது!

ஆயிரம் படங்களுக்கு மேல் ஃபைட்டராக, காமெடியனாக ‘தலை’ காட்டியவர்... பழைய அழுக்குத் துணிகளுக்கும், சமையல் பாத்திரங்களுக்கும், கடவுள் படங்களுக்கும் இடையே சினிமா ஷீல்டுகளைத் தேடினால், ‘‘அதெல்லாம் இல்ல சார்’’ என நாம் கேட்காமலேயே பதில் சொல்கிறார் வெங்கல். ‘‘வேலைக்குப் போய் ஒன்றரை மாசம் ஆச்சு.

 இப்போ தெலுங்கு தெலுங்குக்கு போயிடுச்சு. கன்னடம் கன்னடத்துக்குப் போயிடுச்சு. இந்தி இந்திக்குப் போயிடுச்சு. இதனால மெட்ராஸுல இருந்தா, தமிழ்ப் படத்துக்கு மட்டும்தான் வேலை கிடைக்குது. எனக்கே இவ்வளவு சிரமம்னா, லைட்மேன் அசிஸ்ட்டென்ட், டெக்னீஷியன் அசிஸ்டென்ட் நிலைமை இன்னும் மோசம்!’’ - ஃபீல் ஆகிறார் ராவ்.

‘‘விஜயவாடா பக்கம் ஒரு நாட்டுப்புறம். புனாதிபாடு கிராமம்தான் பொறந்த ஊர். என் பத்து வயசுலயே அப்பா இறந்துட்டாரு. சினிமான்னா எனக்கு ரொம்ப பைத்தியம். மெட்ராஸு பக்கம் வந்து, சினிமாவையே சுத்திச் சுத்தி ஃபைட்டர் ஆகிட்டேன். ரொம்ப நாள் ஃபைட் பண்ணிட்டே இருந்ததுல என்னோட கால் முட்டி, தோள்பட்டை எல்லாம் அடிபட்டு, உடம்பு க்கு முடியாமப் போயிடுச்சு. பொழப்புக்கு என்ன பண்றதுனு புரியல. அப்போ வடிவேலு ஐயாகிட்ட, ‘காமெடி ஃபைட் பண்றேன்.. உங்க குரூப்புல என்னை சேர்த்துக்குங்க’ன்னு கேட்டேன்.

காமெடி ஃபைட்னா, நம்மளை யாரும் அடிக்கறதுக்கு முன்னாடியே, ‘ஐயோ... அம்மா...’ன்னு கத்திக்கிட்டு கீழே விழுந்துடணும். ரோப் கட்டி அந்தரத்துல தொங்குறது, மொட்டை மாடியில இருந்து குதிக்கிறதுன்னு சீரியஸ் ஃபைட்டுக்கான ரிஸ்க் எதுவும் இதுல இருக்காது. வடிவேலு ஐயா ஆபீஸ் போய் நிப்பேன். ‘இவரையும் சேர்த்துக்குங்க... இவருக்கு இந்த கேரக்டர் கொடுங்க’ ன்னு அவர் சொல்லிடுவார். ஃபைட்னா நானே நிறைய ஐடியா சொல்லுவேன். எனக்கு காமெடில எதுவும் தெரியாது. வடிவேல்காரு என்ன சொல்லிக் கொடுத்தாரோ அதை சரியா பண்றதுதான் என் வேலை. விவேக்கோட ஒருசில படங்கள்தான் பண்ணியிருக்கேன்.

ஒருநாள் ஒரு படத்தோட ஷூட்டிங்ல ‘வடிவேலுவுக்கு தினமும் பத்து லட்சம், பதினைந்து லட்சம் கொடுக்குறீங்க... நான் தனியா பண்றேன். எனக்கு ஒரு பதினைந்து ஆயிரமாவது தாங்க’ன்னு கேட்டேன். அதை வடிவேலுகிட்ட பத்த வச்சிட்டாங்க. ‘அவன் கேட்குறது நியாயம்தானே... கொஞ்சம் அதிகமாத்தான் குடு’ன்னு வடிவேலு பெருந்தன்மையா சொன்னார். வேற ஆளுங்களா இருந்தா, என்னை ஃபீல்டை விட்டே காலி பண்ணியிருப்பாங்க.

இந்தி, பெங்காலி, தெலுங்கு, கன்னடம்னு பல லாங்குவேஜு நடிச்சிட்டேன். அமிதாப் காரு, தர்மேந்திரா காரு, அம்பரீஷ் காரு, விஷ்ணு காரு, ரஜினி காரு, சத்யராஜ் காருன்னு எல்லா ஹீரோக்கள் கூடவும் ஃபைட் பண்ணிட்டேன். எது என்னோட முதல் படம்னு தெரியலை. ஆயிரம் படத்துக்கு மேலேயே பண்ணியிருப்பேன். ‘ராஜாதிராஜா’, ‘பணக்காரன்’ படங்கள்ல ரஜினி கூட ஃபைட் பண்ணியிருக்கேன். ‘சந்திர முகி’ ஷூட்டிங்ல அவர் என்கிட்ட, ‘என்ன ராவ்... வீடு கட்டியாச்சா’ன்னு விசாரிச்சார். நம்ம நிலைமைய அங்க சொல்லி சீன் போட முடியுமா?

டிஸ்கோ சாந்தியோட கணவர் ஸ்ரீஹரி... ரொம்ப நல்ல மனுஷன். அவர் இறக்கறதுக்கு முன்னாடி வரைக்கும் அவர் நடிக்கற படங்கள்ல எல்லாம், ‘ஃபைட்ல வெங்கல் ராவையும் சேர்த்துக்குங்க’ன்னு ரெகமெண்ட் பண்ணுவாரு.

இந்தியில தர்மேந்திரா காருக்கு டூப் போட்டேன். ‘நாங்க வெறும் டம்மிதான். டூப் போட்டு, ரிஸ்க் எடுக்கிற நீங்கதான் ரியல் ஹீரோ’னு தர்மேந்திரா ஸ்பாட்ல பாராட்டி னாரு. சத்யராஜ் ஃபைட் சீன் முடிந்ததும், ‘இன்னிக்கு ஸ்பாட்ல எத்தனை ஃபைட்டர்ஸ் இருக்காங்க’ன்னு கேட்டு, ஆளுக்கு ஐந்நூறு ரூபா அவுரு பாக்கெட்ல இருந்து கொடுப்பார்.

நான் யார்கிட்டயும் உதவின்னு போய் நின்னது இல்ல. ‘உங்க படங்கள்ல வேஷம் கொடுங்க’ன்னு எந்த ஹீரோகிட்டேயும் கேட்க மாட்டேன். கேட்டா, அடுத்த நாளு அந்தப் பக்கம் போகும்போது, ‘அவனை உள்ளே விடாதீங்க’ன்னு கூர்க்காவை விட்டு சொல்லிடுவாங்களோன்னு பயம். யாரோட நல்ல மனசோ... நான் இப்ப பத்து படங்கள்ல நடிச்சிட்டு இருக்கேன். வடிவேலு ஐயா, அடுத்து அவரோட ‘எலி’ படத்துல வாய்ப்பு தர்றேன்னு சொல்லி யிருக்கார்.

நானும் என் சம்சாரம் சின்ன கொண்டம்மாவும்தான் மெட்ராஸுல இருக்கு. மக லட்சுமி ஊர்ல இருக்கா. அவ வீட்டுக்காரு அங்கே பஸ் கண்டக்டரு. அவங்களுக்கு ரெண்டு பசங்க இருக்காங்க. ஒரு பேரன் எஞ்சினியரிங் படிச்சிருக்கான்.

 ‘ஜாப்’க்கு இன்னும் வரலை. நூறு கோடி ரூபா படமோ, அம்பது லட்சம் பட்ஜெட் படமோ, என் சம்பளம் எல்லாத்துக்கும் ஒண்ணுதான். பஸ்ஸுக்கு பெட்ரோலுக்குன்னு செலவு பண்ணினா வாழ முடியாது. அதான் சைக்கிள். சில சமயம், மாசக்கணக்கா வேலை இருக்காது.

கையில இருந்த காசெல்லாம் கரைஞ்சிருக்கும். அடுத்த நாள் வாடகை கொடுக்கணுமேன்னு யோசிச்சிட்டு படுத்தால், மறுநாள் வாடகை கொடுக்குற அளவுக்கு அட்வான்ஸோட வேலைக்குக் கூப்பிட ஆள் வருவாங்க. அப்படி ஒரு ராசி இந்த வீட்டுக்கு இருக்கு.

அதான், வேற வீடே பார்க்காம ரொம்ப வருஷமா இங்கேயே ஒண்டிக்கிட்டிருக்கேன். இன்னும் நான் ஃபைட்டர் சங்கத்துல மெம்பர்தான். ஆனாலும், காமெடிதான் எனக்கு அடையாளம். காமெடி சீன்களை டி.வியில அடிக்கடி போட்டுக்கிட்டே இருக்காங்க. ஜனங்களை நானும் சிரிக்க வைக்கறேன். இந்த ஒரு சந்தோஷம் போதும்!’’

நூறு கோடி ரூபா படமோ, அம்பது லட்சம் பட்ஜெட் படமோ, என் சம்பளம் எல்லாத்துக்கும் ஒண்ணுதான்.

மை.பாரதிராஜா
படங்கள்: ஏ.டி.தமிழ்வாணன்