அழகின் சன்னிதி!



ஒரே நாள்ல 17 மணி நேரம் டப்பிங் பேசியிருக்கார்னா கவுண்டமணி பாராட்டுக்குரியவர்தான். அட்ரா சக்க... அட்ரா சக்க... கவுண்டமணியா கொக்கா!
- டி.வி.சிவசிதம்பரம், சேலம்.

கோடுகளுக்கு உயிர் கொடுத்த கோபுலுவின் நேர்காணல் மகிழ்ச்சியளித்தது. தனது ஊழியர் சசியின் அன்பான அரவணைப்பில் அவர் இருக்கிறார் என்பதைப் படித்து காரணமின்றி கண்களில் நீர்!
- கே.எஸ்.குமார், விழுப்புரம்.

சித்தார்த் பக்கத்தில் அழகுப் புயல் தீபா சன்னிதி ஆகா! ‘கண்ணு வச்சிடாதீங்க பாஸ்’ என டைரக்டர் புலம்பினாலும் நாங்கள் தீபா சன்னிதி யின் அழகு சந்நதியில் இரண்டறக் கலந்துட்டோம் தலைவா!
- எம்.மணிமுத்து, கடலூர்.

பாரதிராஜா இதயம் திறந்த உண்மைகளை பிறர் மனம் புண்படாது சொன்ன நேர்த்தி, இன்றைய தடாலடி தலைமுறைக்கு பாடம். இயக்குநர்
இமயத்தின் படம் பார்த்த திருப்தியை பேட்டியிலேயே தந்ததற்கு நன்றி!
- ப.இசக்கி பாண்டியன், சென்னை-94.

ஈழத் தமிழ் எழுத்தாளர் சோமிதரனின் கட்டுரை அருமை. சர்வாதிகாரம் என்றாவது ஒரு நாள் நீதி தேவனின் கால்களில் விழுந்து மன்னிப்பு கோரும் என்பதையே ராஜபக்சேவின் நிலை பறைசாற்றுகிறது!
- இராம.கண்ணன், திருநெல்வேலி.

காதலில் மீறப்பட வேண்டிய ரூல்ஸ்... அவற்றின் விளைவுகளைப் பட்டியலிட்டிருந்த விதம் பளிச். போட்டோவில் இருக்கும் பையனின் பார்வைதான் ‘சீய்...’ ரகம்! இருந்தாலும் மகா ஜொள்ளரய்யா நீர்!
- எம்.மிக்கேல்ராஜ், சாத்தூர்.

‘பிசாசு’ இசை தந்த அரோல் கொரேலியின் ஆற்றல் வியக்க வைத்தது. விளையும் பயிர் முளையில் தெரியும் என்பார்கள். கொரேலி சாதிப்பார்... அவரது தன்னடக்கம் அவரை வாழ வைக்கும்!
- ஆர்.கே.லிங்கேசன்,
மேலகிருஷ்ணன்புதூர்.

‘ருத்ரம்மா தேவி’யில் அசல் தங்க நகைகள் போட்டு அனுஷ்கா நடிக்கிறாரா? அப்புறம் ஏன் தங்கம் விலை ஏறாது? ஆனாலும் தங்கத்துக்கே தங்கம் போட்டது போலிருக்கேய்யா ஸ்டில்!
- டி.கே.பல்லவன்ராஜன், மதுரை.

‘இயற்கை’ சின்னய்யா சொல்லி யிருக்கும் ஜல்லிக்கட்டின் அறிவியல் விளக்கமும், பனை மரத்தின் பெருமையும் வியக்க வைத்தது. செம்மொழித் தமிழர்களின் பெருமை சொல்லி மாளாதப்பா!
- ஆர்.லோகநாதன், சென்னை-16.