மீண்டும் பன்றிக் காய்ச்சல்!



கோவையில் ஒருவர், சென்னையில் ஒருவர் என அடுத்தடுத்து இரண்டு பேர் மரணமடைந்ததால், மீண்டும் பன்றிக் காய்ச்சல் பீதி எழுந்திருக்கிறது. தெலங்கானா விலும் ஆந்திராவிலும் அதிரடியாகப் பரவும் இந்த பயங்கரக் காய்ச்சல், அங்கு சென்று வரும் பலரால் மற்ற பகுதிகளுக்கும் பரவுகிறது.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு உலகையே பீதியில் ஆழ்த்தி முகமூடி யோடு அலைய விட்ட இந்த நோயின் வீரியம் இப்போது குறைந்திருப்பதாக மருத்துவ நிபுணர்கள் சொன்னாலும், மரணங்கள் பயத்தை அதிகரிக்கவே செய்கின்றன.

தலைவலி, ஜலதோஷம், தொண்டை எரிச்சல், தீவிர இருமல், வயிற்றுப்போக்கு, வாந்தி, தசைவலி, மூட்டுவலி, கடுமையான ஜுரம் ஆகியவையே பன்றிக் காய்ச்சலின் அறிகுறிகள். நோய் தொற்றியவர் இருமினாலோ, தும்மினாலோ அவரிடமிருந்து மற்றவர்களுக்கு இது பரவும் என்பதால், குடும்பத்தினரே அதிகம் பாதிக்கப்படுவார்கள்.

ஆரோக்கியமாக இருப்பவர்கள் எந்த சிகிச்சையும் இல்லாமலே இந்த நோயை எதிர்கொண்டு மீள்வார்கள் என்பது ஆறுதலான விஷயம். மற்றவர்களுக்கு ‘டாமிஃப்ளூ’ மாத்திரை எடுத்துக் கொள்வதே சிகிச்சை. குறிப்பாக கர்ப்பிணிகள், பச்சிளம் குழந்தைகள், முதியோர்கள், நுரையீரல் தொற்றுநோய் உள்ளவர்கள், சுவாசப் பிரச்னை உள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள் ஆகியோருக்கு பன்றிக் காய்ச்சல் தாக்கும் ரிஸ்க் அதிகம் உள்ளது, கவனம்!