மனக்குறை நீக்கும் மகான்கள்



ஸ்ரீஅரவிந்த அன்னை

நாம் விரும்புவதெல்லாம் கிடைத்துவிட்டால், மகிழ்ச்சியாக இருக்கலாம் என்று நினைக்கிறோம். அப்படி விரும்பிக் கிடைத்த பொருட்களால் மகிழ்ச்சியைத் தொலைத்தவர்கள் அநேகம் பேர். கடவுளிடம் பிரார்த்தனை செய்யும்போது, ‘எனக்கு இது வேண்டும்’ எனக் கேட்காமல், ‘எனக்கு எது நல்லதோ அதைக் கொடு’ எனக் கேட்டுக்கொள்ளுங்கள். ஏனெனில், நம்மைவிட நமக்கு எது நல்லது என்று அவருக்குத்தான் தெரியும்!

‘தியோன்...’ ஆன்மிக வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு நகர முனைப்புடன் செயலாற்றிக் கொண்டிருந்த மிராவுக்கு இந்தப் பெயர் வசீகரமானதாகத் தோன்றியது.
யார் இந்த தியோன்? விசாரிக்க ஆரம்பித்தாள்.

தியோன் போலந்து நாட்டைச் சேர்ந்த யூதர். இவரது மனைவி தியோனா; இங்கிலாந்திலுள்ள வேல்ஸ் பகுதியைச் சேர்ந்தவள். இருவருமே சித்து கலைகளில் தேர்ச்சி மிகுந்தவர்கள். ஆப்ரிக்கா கண்டத்தில், பூமத்திய ரேகைக்கு அருகில், சஹாரா பாலைவனத்திற்கு அண்மையில் இருக்கும் அல்ஜீரியாவில் வசித்து வந்தார்கள். அங்கே ஒரு மலைச்சாரலில் இவர்களுக்குச் சொந்தமான தோட்டத்தில் தங்கி, சித்து பயின்று வந்தார்கள்.

இத்தனை தகவல்களையும் அறிந்துகொண்ட மிராவுக்கும் சித்து கலைகளைப் பயில வேண்டும் என்கிற ஆவல் துளிர்த்தது. தியோனைச் சந்திக்கப் புறப்பட்டாள். ஒரு அதிகாலையில் தியோனின் தோட்டத்தை அடைந்தாள் மிரா. மிராவின் வருகையை முன்னரே உணர்ந்திருந்த தியோன், மிகச் சாதாரணமாக மிராவை எதிர்கொண்டு வரவேற்றார். தேநீர் கொடுத்து, ‘‘சிறிது இளைப்பாறு... பிறகு பார்க்கிறேன்’’ என்ற தியோன், தன் மனைவிக்கு மிராவை அறிமுகப்படுத்திவிட்டு அந்த மணல்வெளியில் நடக்கத் தொடங்கினார்.

தியோனா, மிராவை ஒரு மகளைப் போல பாவித்தாள். ‘‘மிரா, சித்துக் கலையின் மீது உனக்கு ஏன் ஆர்வம் ஏற்பட்டது?’’ - தியோனா கேட்டாள்.‘‘நாம் காணும் உலகம் தவிர்த்து நம் கண்ணுக்குத் தெரியாத பல உலகங்களும் ஜீவராசிகளும் இருப்பதாக என் உள்மனம் சொல்கிறது. அதைப் பூரணமாக தெரிந்து கொள்ள விரும்புகிறேன்’’ - மென்மையாக பதில் சொன்னாள் மிரா.

‘‘ஆம் மிரா... நீ சொல்வது உண்மைதான். இந்த உலகில் நாம் அறிந்துகொண்ட விஷயங்களைத் தவிர்த்து, நம் கண்ணுக்குத் தெரியாத ஏராளமானவை இருக்கின்றன. அதை ஒருமுகப்படுத்தப்பட்ட மனோசக்தியின் மூலமாகவே தெரிந்துகொள்ள முடியும். நம் எண்ண அலைவரிசையை பயிற்சியின் மூலம் அந்த அமானுஷ்ய சக்திகள் அளவுக்கு உயர்த்தியோ... குறைத்தோ அவர்களோடு தொடர்புகொள்ள முடியும்.

இதில் நல்ல நோக்கம் இருக்கும் பட்சத்தில் பிரபஞ்ச சக்தி நமக்குத் துணை நிற்கும். நம் நோக்கம் சுயநலமாக இருக்குமானால், மிக மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும். மிக முக்கியமாக சித்துக்கலை நுண்ணறிவு சார்ந்தது. நல்ல குருவுடைய வழிகாட்டுதலோடு பயிலும் பட்சத்தில் பிரச்னை ஏதுமில்லை. தனியாகவோ தவறாகவோ கற்றுக்கொண்டால் மரணத்தைவிட மோசமான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும்.

இந்தக் கலையை முறையாகப் பயன்படுத்துவதன் மூலமாக நோயை குணப்படுத்தலாம். தீய சக்திகளிடமிருந்து மனிதர்களைக் காக்கலாம். எல்லா ஜீவன்களோடும் தொடர்புகொள்ளலாம். உடல் தாண்டி மனதாலேயே பலதையும் பகிர்ந்துகொள்ள முடியும். காலத்தைக் கடந்து பயணிக்கவும் எதிர்காலத்தை உணரவும் முடியும். வறண்ட பகுதியில் மழை வர வைத்து பசுமையாக்க முடியும். இயற்கைச் சீற்றங்களில் இருந்து மக்களைக் காப்பாற்றலாம். நினைத்த மாத்திரத்தில் எந்த நாட்டுக்கும் பிரயாணம் செய்ய முடியும்.

பாரத நாட்டில் ஏராளமான சித்த புருஷர்கள் வாழ்கிறார்கள். கூடு விட்டு கூடு பாய்தல், மருத்துவத்தில் புதிய ஆராய்ச்சிகள் செய்வது, விரும்பும் வரை உடலோடும் உடலை விட்டும் வாழ்வது என அவர்கள் நிகழ்த்தும் அற்புதங்கள் அபாரமானவை. தன்னை உணர்தலே கடவுளை அறிதல். நம்முள் உறைந்திருக்கும் ஆன்மாவே கடவுள். ஆன்மா உறையும் உடலே கோயில் என வாழும் மெய்ஞான விஞ்ஞானிகள் சித்தர்கள்” என்றெல்லாம் புரிய வைத்தாள் தியோனா.

அனைத்தையும் அமைதியாகக் கேட்டுக்கொண்ட மிரா, ‘தனது விருப்பம் உலக நலன் சார்ந்ததே’ என்பதை மிகச் சரியாக உணர்த்தினாள்.தியோனும் அவரது மனைவியும் மிராவுக்கு சித்துக் கலைகளைச் சொல்லித்தர ஆரம்பித்தார்கள். அப்போது மிரா பல விதமான அனுபவங்களைப் பெற்றாள்.தியோன் தம்பதிகள் வாழ்ந்த சஹாரா மணல்வெளி, மெல்ல நகர்ந்து மற்ற பகுதிகளையும் பாலைவனமாக்குவதை உணர்ந்தார் தியோன். பைன் மரங்களை நட்டால் இதைத் தடுக்க முடியும் என்று அறிந்துகொண்டார்கள் அவர்கள்.

ஆனால், பைன் மரங்களுக்குப் பதிலாக தவறுதலாக பிர் மரக்கன்றுகள் நடப்பட்டன. பிர் மரங்கள் குளிர் பிரதேசமான ஸ்காண்டிநேவிய நாடுகளில் வளரும் தன்மை கொண்டவை. அல்ஜீரியாவோ வெப்பம் மிகுந்த நாடு.ஆனால் தியோன் இதையும் சோதித்துப் பார்த்துவிடலாம் என நினைத்து பிர் மரச்செடிகளை தண்ணீர் விட்டு வளர்த்தார். செடிகள் செழித்து வளர்ந்து, மரங்களாயின.
ஒரு டிசம்பர் மாதம். நள்ளிரவு. தேய்பிறைக் காலம் என்பதால் வானத்தில் நட்சத்திரங்கள் மட்டுமே இருந்தன. நிலா இல்லை. உயர்ந்து நின்ற பிர் மரங்களின் அசைவால் சூழல் குளிர்ச்சியாக இருந்தது. தியோனா தன் அறையில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள். திடீரென உள்ளுணர்வு தூண்டப்பட்டவளாக கண் விழித்தாள்.

ஜன்னலுக்கு வெளியே பார்வையை ஓடவிட்டாள். இரவில் மரங்கள் அசைவது வினோதமாக இருந்தது. அப்போதுதான் கவனித்தாள்; அறையின் மூலையில் நிலாவைப் போல ஒளிர்ந்தபடி ஏதோ ஒன்று இருக்கிறது. அருகில் சென்று பார்த்தாள்.வித்தியாசமான தோற்றத்தில் சித்திரக் குள்ளன். பெரிய தலை. கோமாளிக் குல்லாய். கூர்மையான பச்சை நிற காலணி அணிந்திருந்தான். நீண்ட தாடியோடு இருந்த அவனது உடல் முழுக்க பனித் தூவலாய் இருந்தது.

‘‘யார் நீ? இங்கே நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்?’’ - தியோனா கேட்டாள்.அந்த விசித்திரக் குள்ளன் அழகாகப் புன்னகைத்தான். ‘‘அம்மா, நான் பனித்தேவன். பிர் மரங்கள் எங்களை அழைத்தன. அதனால்தான் எங்கள் பரிவாரங்களோடு இங்கு வந்திருக்கிறோம். இதைத் தங்களிடம் தெரிவிக்கவே காத்திருந்தேன்’’ என்றான்.‘‘வெப்பம் மிகுந்த சஹாராவில் பனியா? எப்படிச் சாத்தியம்?’’ - எதிர்க்கேள்வி எழுப்பினாள் தியோனா.

‘‘நீங்கள் ஏன் இங்கே பிர் மரங்களை வளர்த்தீர்கள்? அந்த மரங்கள் எங்கிருந்தாலும் எங்களை அழைக்கும். அதன் அழைப்பை ஏற்று வருவது எங்கள் கடமை’’ என்றான் பனித்தேவன்.
‘‘சரி... சரி! அதெல்லாம் இருக்கட்டும். நீ நிற்கும் இடத்தில் பனி உருகி ஈரமாகிக் கொண்டிருக்கிறது. தரை பாழாகிவிடும். ஆகவே தயவு செய்து நீ சீக்கிரம் கிளம்பு’’ என்றாள் தியோனா.

‘‘நன்றி! நான் வருகிறேன்’’ என்று சொல்லிவிட்டு பனித்தேவன் மறைந்தான். அவன் போனவுடன் பளிச்சென வீசிய பாலொளியும் மறைந்தது. தியோனா கண்டது கனவா நினைவா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள விளக்கேற்றி வந்து அந்த இடத்தைப் பார்த்தாள். ஈரமாக இருந்தது. கனவு இல்லை என உறுதிப்படுத்திக்கொண்டு உறங்கினாள்.

காலையில் கண் விழித்த தியோனா வெளியில் வந்து பார்க்க, சஹாரா முழுக்க பனி சூழ்ந்திருந்தது. வந்தது பனித்தேவன்தான் என உறுதிப்படுத்திக்கொண்டாள். மரங்களுக்கும் தேவர்களுக்கும் இருக்கும் தொடர்பை எண்ணி வியந்தாள். அன்று முதல் இன்றுவரை பிர் மரங்களின் அழைப்பை ஏற்று பனித்தேவன் வந்து கொண்டுதான் இருக்கிறான். சஹாரா பனி போர்த்திக்கொள்வது வாடிக்கையானது. மிரா இந்த அதிசயத்தைக் கண்டு வியந்து நின்றாள்.

ஒருநாள் தியோனா மிகுந்த சோர்வாக இருந்தாள். ‘‘இவ்வளவு களைப்பாக இருக்கிறீர்களே... ஏதாவது சாப்பிடுங்கள்’’ என்று கேட்டுக்கொண்டாள் மிரா.புன்முறுவலித்த தியோனா ஒரு ஆரஞ்சுப் பழத்தை எடுத்து வந்தாள். தரை விரிப்பை விரித்து, அதில் வானம் பார்த்துப் படுத்தாள். ஆரஞ்சுப் பழத்தை மார்பு மீது வைத்துக் கொண்டு கண்களை மூடி மூச்சை நிதானமாக விட்டாள். சிறிது நேரத்திற்கெல்லாம் ஆரஞ்சுப் பழம் தட்டையாகி தோல் மட்டும் இருந்தது. அதன் சாறை நேரடியாக ஜீரணித்திருந்தாள் தியோனா. சோர்வு நீங்கி, பொலிவாகக் காட்சி தந்தாள். இப்படி தியோனும் அவரது மனைவியும் சித்துகளை தினந்தோறும் செயல் வழியாகவே மிராவுக்கு போதித்து வந்தார்கள்.

மிராவின் சித்து திறமையை சோதித்துப் பார்க்க ஒரு நாள் வந்தது.மிரா அல்ஜீரியாவிலிருந்து சொந்த ஊருக்குத் திரும்பும் போது தியோனும் ஐரோப்பிய சுற்றுப் பயணம் செய்ய விரும்பி, மிராவுடன் கப்பலில் பயணித்துக் கொண்டிருந்தார். பயணிகள் எல்லாம் அலையில் மிதந்தபடி செல்லும் கப்பலின் தாலாட்டை அனுபவித்த வண்ணம் பாடிக்கொண்டும் சிலர் நடனமாடியபடியும் சந்தோஷமாக வந்தார்கள்.

திடீரென வானம் இருண்டது. சற்றைக்கெல்லாம் பேய்க் காற்று வீச, கப்பல் தள்ளாடியது. பறவைகள் வானத்தில் அலறியபடி பறந்தன. கப்பலின் மாலுமிகள் கப்பலைச் செலுத்த போராடிக் கொண்டிருந்தார்கள். தலைமை மாலுமி கப்பலின் பயணிகள் தளத்துக்கு வந்தார். ‘‘பேய்க் காற்றை எதிர்த்து கப்பலைச் செலுத்த இயலவில்லை. என்ன நடக்குமோ தெரியாது. கடவுளைப் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்’’ என சோக முகத்துடன் சொல்லிவிட்டு நகர்ந்தார்.

மகிழ்ச்சி தாண்டவமாடிய அந்த இடம், சோகம் பூசிக்கொண்டது. தியோன் மிராவை அழைத்தார். ‘‘மிரா... போ! புயலை அடக்கு’’ என்றார்.மிரா ஒரு கட்டிலில் தன் உடலை கிடத்தினாள். அங்கிருந்து தன் ஆன்மாவை மட்டும் நகர்த்தி, புயல் உருவாகும் மையத்திற்கு பயணித்தாள். அங்கு சில அரூப சக்திகள் ஒன்று சேர்ந்து பேயாட்டம் போட்டபடி காற்றை ஏவிக்கொண்டிருப்பதை கவனித்தாள்.

அவற்றிடம் கனிவாகப் பேசினாள். ‘‘தயவு செய்து அமைதியடையுங்கள். உங்களின் இந்த ஆட்டத்தால் கப்பலில் இருக்கும் எண்ணற்ற மனிதர்கள் மிகுந்த பாதிப்புக்கும் அச்சத்திற்கும் உள்ளாகித் தவிக்கிறார்கள். இந்தச் சூறைக்காற்றை நிறுத்தி உதவுங்கள்’’ என்று கேட்டுக்கொண்டாள். மிராவின் கனிவான பேச்சு வார்த்தை வெற்றியடைய, அவை மெல்ல தங்கள் ஆட்டத்தை நிறுத்திக்கொண்டு நகர்ந்தன. புயல் நின்று கடல் அமைதியானது.

கப்பல் ஆபத்தில் இருந்து மீண்டது. மிரா தன் உடலுக்குத் திரும்பினாள். மிராவை தியோன், ‘‘தேவதை’’ என்றார். மக்கள், உயிர் காத்த கடவுள் என்று வர்ணித்து வணங்கினார்கள். மிராவின் கண்கள் கூடுதல் ஒளி கொண்டன. அந்த ஒளியில் ஒருவர் மனம் தொலைக்கப் போகிறார். யார் அவர்?

வரம் தரும் மலர்

மதுப் பழக்கம் நீக்கும் மல்லிகை!


மதுப்பழக்கத்தால் இன்று லட்சக்கணக்கான மக்கள் வாழ்க்கையைத் தொலைத்துக் கொண்டிருக்கிறார்கள். குடியைக் கெடுக்கும் இந்தப் குடிப்பழக்கத்திலிருந்து விடுபட விரும்புபவர்கள் அன்னைக்கு மல்லிகைப்பூவை தினமும் சமர்ப்பித்து வேண்டிக்கொண்டால் மது அரக்கனிட மிருந்து விடுபடலாம். தங்கள் குடும்பத்தாருக்காக மற்றவர்களும் இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம்.

( பூ மலரும்)

எஸ்.ஆர்.செந்தில்குமார்