திருமணத்துக்கு மருத்துவப் பரிசோதனை அவசியமா?



‘‘தாம்பத்ய குறைபாடு காரணமாக விவாகரத்துகள் அதிகரித்து வரும் நிலையில், ‘திருமணத்துக்கு முன்பே மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும்’ என்பதைக் கட்டாயம் ஆக்கலாமா?’’

- ஒரு விசித்திரமான வழக்கில் மதுரை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கேட்ட கேள்வி இது. அதோடு நிற்காமல், இந்த விவகாரத்தை ஒரு பொதுவெளி விவாதத்துக்கு எடுத்து வைத்திருக்கிறார் அவர். இதுபற்றி பொதுமக்களின் கருத்துகளையும் கேட்டுள்ளார். ஒரு உணர்வுபூர்வமான பிரச்னையை வெறுமனே சட்டத்தின் பார்வையில் அணுகாமல், சமூகப் பார்வையில் அணுகியதற்காக நீதிபதிக்கு ஒரு பொக்கே.

ஆனால் இது நடைமுறை சாத்தியம்தானா? ஒரு மருத்துவப் பரிசோதனை மூலம் ஆண்மைக் குறைவையோ, பெண்மைக் குறைவையோ கண்டறிந்து விடமுடியுமா? மருத்துவத் தொழில்நுட்பம் உச்சத்தில் இருக்கும் நாடுகளிலேயே பாலியல் குறைபாடு பற்றி கருத்தொற்றுமை இல்லாத நிலையில், நம் நாட்டில் இதை சட்டபூர்வமாக்குவது நல்லதுதானா?குடும்ப நல நீதிமன்றங்கள் நிரம்பி வழிகின்றன. கடந்த பத்தாண்டுகளில் விவாகரத்து கோரும் தம்பதிகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்திருப்பதாக சொல்கிறார்கள் சமூக ஆய்வாளர்கள்.

பெரும்பாலான மனமுறிவுக்கும், மணமுறிவுக்கும் காரணமாக இருப்பது தாம்பத்ய சிக்கல். குறிப்பாக, ‘கணவன் உறவுக்குத் தகுதியற்றவன்’ என்ற குற்றச்சாட்டோடு நீதிமன்றத்துக்கு வரும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. அதேபோல, ‘எவ்வளவோ வற்புறுத்தியும் மனைவி உறவைத் தவிர்க்கிறாள்’ என்று ஏராளமான ஆண்கள் நீதிமன்றத்துக்கு வருகிறார்கள்.

அண்மைக்கால தொழில்நுட்ப வளர்ச்சி, இளம் தலைமுறையினரின் பாலியல் சார்ந்த பார்வையை மாற்றியுள்ளது. கற்பனைக்கும், யதார்த்தத்துக்குமான இடைவெளியை அதிகமாக்கியிருக்கிறது. இதன் தாக்கம் குடும்ப உறவிலும் எதிரொலிக்கிறது. தாம்பத்யமே குடும்பப் பிணைவை முழுமைப்படுத்தும் நிலையில், அதில் ஏற்படும் சிக்கல் சீக்கிரமே மணமுறிவுக்குக் காரணமாகி விடுகிறது. இதைத் தவிர்க்க மருத்துவப் பரிசோதனை செய்யலாமா?

‘‘அப்படியொரு ஏற்பாடு இருப்பது நல்லதுதான். இந்தியாவில் பதிவாகும் விவாகரத்து வழக்குகளில் 70 முதல் 80 சதவீதத்துக்கு தாம்பத்யம் சார்ந்த பிரச்னைகளே காரணம். திருமணமாகி ஒரு வாரத்திலேயே பிரிந்துவிடும் தம்பதிகளையும் நான் பார்க்கிறேன். ஒரு மணமுறிவுக்குப் பின்னால் பல மனிதர்களின் கண்ணீர், வலி இருக்கிறது. திருமணத்துக்கு முன்பு எவ்வளவோ பிரச்னைகளைப் பேசுகிறார்கள்; தீர்க்கிறார்கள். அதோடு சேர்த்து தம்பதிகள் தாம்பத்யத்துக்கு தகுதியானவர்களா என்றும் பார்த்து விடலாம்.

தொழில்நுட்பம் வளராத காலத்திலேயே நம் முன்னோர்கள் இதற்குப் பல நடைமுறைகளை வைத்திருந்தார்கள். திருமணம் நிச்சயம் செய்தவுடன் மாப்பிள்ளையின் சகோதரி அல்லது அத்தை, பெண் வீட்டுக்குச் சென்று பெண்ணுக்கு மருதாணி இட்டு, குளிக்க வைக்கும் நடைமுறை பல சமூகங்களில் இருந்தது. அத்தருணத்தில் பெண்ணின் நாணம் மற்றும் பிற செயல்பாடுகளை வைத்து ‘இவளிடம் பிரச்னை இல்லை’ என்று தீர்மானிப்பார்கள்.

அதேபோல் ஆண்களுக்கு ‘சர்வாங்க சவரம்’ என்று ஒரு நடைமுறை இருந்தது. ஒரு ஆண் தாம்பத்யத்துக்கு தகுதியானவனா என்பதை அப்போது கண்டறிந்து விடமுடியும். நாகரிகம் என்ற பெயரில் இந்தப் பழக்கங்களை எல்லாம் கடந்து விட்டோம். தற்போது நீதிபதி இந்த வழக்கை கையாண்டுள்ள விதம் நிச்சயம் மாற்றத்தை உருவாக்கும்...’’ என்கிறார் வழக்கறிஞர் முத்து விஜயபாண்டியன்.

இந்த விவாதத்தின் மையப் புள்ளியான வழக்கை தாக்கல் செய்தவர் இவர். தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு வாலிபருக்கும் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த பெண்ணுக்கும் சில வருடங்களுக்கு முன்பு திருமணம் முடிந்தது. தன் கணவருக்கு ஆண்மைக்குறைவு இருப்பதாகக் கூறி அந்தப் பெண் விவாகரத்து கேட்டு வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி அந்த வாலிபரின் சார்பில் உயர் நீதிமன்றத்தில் முத்து விஜயபாண்டியன் தொடர்ந்த வழக்கில்தான் இப்படியான விவாதம் உயிர்ப்பித்திருக்கிறது.

பிரான்ஸ் உள்ளிட்ட சில நாடுகளில் திருமணத்துக்கு முன்பு ஆணும் பெண்ணும் முழுமையாக தங்கள் உடலைப் பரிசோதித்து மருத்துவச் சான்றிதழை சமர்ப்பித்தால் மட்டுமே திருமணம் பதிவு செய்யப்படும். அதுபோன்ற நடைமுறை இங்கும் வரவேண்டும் என்பது பல வழக்குகளில் ஏற்கனவே பேசப்பட்டிருக்கிறது. உண்மையில், மருத்துவப் பரிசோதனை மூலம் ஆண்மைக் குறைவை அடையாளம் காண முடியுமா? செக்ஸாலஜிஸ்ட், டாக்டர் நாராயண ரெட்டியிடம் கேட்டோம். ‘‘பரிசோதனை அவசியம்தான். ஆனால், நடைமுறைக்கு அது பொருந்தாது...’’ என்று கூறி சிரிக்கிறார் அவர்.

‘‘ஆண்மைக்குறைவு என்ற பதமே தவறானது. ஆண்மைக்குறைவு பற்றிப் பேசுபவர்கள் பெண்மைக்குறைவு என்று எதை அடையாளம் காட்டுவார்கள்? உலகில் எந்த நாட்டிலும் பாலியல் தகுதியைத் தீர்மானிக்கும் மருத்துவ சோதனை இல்லை. உடல் ரீதியாகக் கோளாறு இருந்தால் கண்டறியலாம். மனரீதியாகப் பிரச்னை இருந்தால் எப்படிக் கண்டறிவது? ஓரினச் சேர்க்கை ஈடுபாடுள்ள ஆண்கள் சராசரிகளைப் போலத்தான் இருப்பார்கள். ஆனால், அவர்களில் சிலருக்கு பெண்களின் மீது ஈர்ப்பு இருக்காது. அவர்களிடம் மருத்துவப் பரிசோதனை தோல்வி அடைந்து விடுமே?

ஒரு ஆண் அல்லது பெண்ணைத் தீர்மானிக்க 11 அறிகுறிகள் உண்டு. குரோமோசோம் தொடங்கி பல காரணிகள் உண்டு. தாம்பத்யம் செய்ய இயலாத நிலை என்பது ஒரு காரணி. அவ்வளவுதான். பாலியல் குறைபாடுகளை 97% குணப்படுத்த முடியும். தம்பதிகள் மத்தியில் புரிந்துணர்வு இருந்தால் இது ஒரு விஷயமே இல்லை...’’ என்கிறார் நாராயண ரெட்டி.

‘‘இப்போதிருக்கும் மருத்துவத் தொழில்நுட்பத்தை வைத்து பாலியல் தன்மையின் குறைபாட்டை தீர்மானிக்க முடியாது. பாலியல் என்பது உளவியல் சார்ந்தது. ஒரு பெண்ணிடம் தோற்றுப் போகும் ஆண், இன்னொரு பெண்ணை திருப்திப்படுத்த இயலும். பதற்றம் உள்ளிட்ட பல காரணங்களால் ஒரு ஆண் தாம்பத்யத்தில் தோற்கலாம். பெண்ணைக் கூட எளிதில் கண்டறிந்து விடலாம். ஆணின் தன்மையை மேலோட்டமான மருத்துவப் பரிசோதனைகளால் கண்டறிய முடியாது’’ என்கிறார் மனநல மருத்துவர் ஷாலினி.

வழக்கறிஞர் வானதி சீனிவாசன், ‘‘உடல் பரிசோதனை மட்டுமின்றி மனநலப் பரிசோதனையையும் கட்டாயமாக்க வேண்டும்’’ என்கிறார். ‘‘வாழ்க்கை என்பது தாம்பத்ய உறவு மட்டுமே சம்பந்தப்பட்டதல்ல. எத்தனையோ தம்பதிகள் குழந்தையில்லாமல் மகிழ்ச்சியாகவும், திருப்தியாகவும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

இதுபோன்ற உணர்வு சார்ந்த பிரச்னைகளில் சட்டமும், நீதிமன்றமும் எச்சரிக்கையோடு செயல்பட வேண்டும். உடல்நலப் பரிசோதனையோடு சேர்த்து மனநலம் சார்ந்த உளவியல் கவுன்சலிங் வழங்க வேண்டும். தாம்பத்யத்தில் விருப்பமில்லாத நிலையை கவுன்சலர்களால் எளிதில் கண்டறிய முடியும்’’ என்கிறார் அவர்.பேசத் தயங்கும் ஒரு விவகாரத்தை பொது
வெளியில் விவாதிக்க வைக்கிறது நீதிமன்றம். இந்த விவாதம் நல்ல முடிவை நோக்கிச் செல்ல வேண்டும்!

ஆண்மைக்குறைவு என்ற பதமே தவறானது.

- வெ.நீலகண்டன்