ஏன் வழக்கு போட்டார் ரஜினி?



எகிறும் இந்திப்பட சர்ச்சை

ஆல் டைம் அமைதி, எப்போதும் சைலன்ட் மோட்... இதுதான் நம்ம சூப்பர் ஸ்டார். ஒரு விளம்பரத்தில் தன் குரல் போல மிமிக்ரி செய்து குரலைப் பயன்படுத்தியதை எதிர்த்தே அமிதாப் பச்சன் வழக்குப் போட்டார்.

 ஆனால், ரஜினியின் குரலையும் பன்ச்களையும் சகட்டுமேனிக்கு பலரும் பயன்படுத்தியபோதும் ரஜினி கண்டுகொள்ளவில்லை. ‘‘இப்போது அவரே டென்ஷனாகி வழக்குப் போடுகிறார் என்றால்...’’ என பரபரக்கிறது கோலிவுட். ஆம், ‘மெயின் ஹூன் ரஜினிகாந்த்’ என்ற இந்தி படத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருக்கிறது. காரணம், சாட்சாத் ரஜினிகாந்தே இறங்கி வந்து தொடுத்திருக்கும் வழக்கு!

பாலிவுட்டில் ‘ஜிக்யாஷா’, ‘பாஞ்ச் கண்டே மே பாஞ்ச் குரோர்’ என இரண்டு படங்களை இயக்கியவர், ஃபைசல் சயீப். இப்போது ஆதித்யா மேனன், கவிதா ராதே ஷ்யாம் நடிப்பில் அவர் இயக்கியிருக்கும் படம்தான் ‘மெயின் ஹூன் ரஜினிகாந்த்’ (‘நான்தான் ரஜினிகாந்த்’). படத்தை ஆரம்பிக்கும்போதே ‘‘வாழும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தை பெருமைப்படுத்தும்விதமாக இந்தப் படம் அமையும்’’ என்று ஃபைசல் சொன்னார்.

அதனால் ‘இது சூப்பர்ஸ்டாரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது’ என்ற செய்திகள் கசிய ஆரம்பித்தன. ஆனால் படத்தின் போஸ்டர்கள், டிரெய்லர், டீஸர் எல்லாவற்றிலும் ஆபாசம் வழிந்தோடுகிறது. இதுதான் ரஜினியை வழக்குப் போட வைத்தது என்கிறார்கள்.

படத்தில் சி.பி.ஐ ஆபீசரான ஹீரோ, பணத்துக்காக பலரையும் போட்டுத் தள்ளும் அண்டர்கிரவுண்ட் கொலையாளியும் கூட. ஹீரோ பெயர் ரஜினிகாந்த் ராவ். பாலியல் தொழிலாளியான ஹீரோயின், ரஜினிகாந்த் ரசிகை. இந்தச் சூழலில் பின்னப்பட்டிருக்கும் காமெடி கதை என்கிறார்கள் இதை.

‘அப்போ இது சூப்பர்ஸ்டாரின் வாழ்க்கைக் கதை இல்லையா?’ - மும்பையில் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளில் இருந்த இயக்குநர் ஃபைசலிடம் பேசினோம். ‘‘ரொம்ப அதிர்ச்சியா இருக்குங்க. ரஜினி டவுன் டு த எர்த் பர்சன். எளிமையானவர். என் ஹீரோ ரஜினி மாதிரி ஆக நினைச்சு திருந்துற மாதிரிதான் கதை பண்ணியிருக்கேன். இதில் என்ன தப்பிருக்கு?’’ என்றவரிடம், ‘இப்படி ஒரு படம் எடுக்க ரஜினிகிட்ட அனுமதி வாங்கினீங்களா?’ என்றோம்.

‘‘இல்லை... நான் ரொம்ப சின்ன இயக்குநர். ரஜினி சாரை என்னால் அப்ரோச் பண்ணக்கூட முடியலை. தவிர, இந்தப் படத்துல ரஜினியின் இமேஜுக்கு எந்த விதத்திலும் களங்கம் ஏற்படுத்தலையே. பெருமைப்படுத்தித்தான் எடுத்திருக்கோம். ரஜினி தரப்பிலிருந்து முதல்ல எங்ககிட்ட பேசியிருக்கலாம். அட்லீஸ்ட், ஒரு வக்கீல் நோட்டீஸாவது அனுப்பியிருக்கலாம்.

 படத்தைப் பார்க்கணும்னு சொல்லியிருந்தா, ஆசையா வந்து போட்டுக் காட்டியிருப்போம். ஆனா, எந்த சூழ்நிலையில அவர் வழக்கு போடற முடிவுக்கு வந்தார்னு தெரியலை. எங்க படத்துக்கு சென்சார் அனுமதி கொடுத்திருக்கு. அக்டோபர் பத்தாம் தேதி ரிலீஸ் பண்றதா பிளான். நீதிமன்றத்துல எங்க நிலைமையை விளக்கி, எந்தப் பிரச்னையும் வராம படத்தை வெளியிடத்தான் நாங்க விரும்புறோம்.

படத்தில் கிளாமர் காட்சிகளும் அதிகமில்லை. ஒரு காமெடி படத்தில் கிளாமர் எந்த விகிதத்தில் இருக்குமோ, அதைத் தாண்டி எதுவுமில்லை.  ஏன், ரஜினி படத்துல கிளாமர் இல்லையா? கிளாமரை வச்சி ரஜினியை அவமானப்படுத்தும் எண்ணம் எங்களுக்கு துளியும் இல்லை’’ என்கிற ஃபைசல், தனது அடுத்த படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என பல மொழிகளில் வெளியிடத் திட்டமிட்டுள்ளார். படத்தின் பெயர் ‘அம்மா’வாம்!

ரஜினி தரப்பில் விசாரித்தோம். இரண்டு மாதங்களுக்கு முன்பே, ‘யூ டியூப்’பில் இந்தப் படத்தின் டிரெய்லர் மற்றும் சில சீன்களை ரஜினி குடும்பத்தினர் பார்த்திருக்கிறார்கள். அதிலிருந்த சில ஆபாசமான காட்சிகள் வழக்கத்துக்கு மாறாக ரஜினியையே டென்ஷனாக்கி இருக்கின்றன. ‘கண்டிப்பாக வழக்குப் போட்டே ஆகவேண்டும்’ என லதா ரஜினிகாந்த் உறுதியாக இருந்ததாலேயே நீதிமன்றத்தை நாடியிருக்கிறார் ரஜினி.

‘‘வழக்கு போடலைன்னா, இப்படி ஒரு படம் வந்ததே கூட தெரியாம போயிருக்கும். ரஜினியே வழக்கு போட்டிருக்கறது இந்தியா முழுக்க இந்தப் படத்துக்கு விளம்பரம்தான். இது ரஜினிக்கும் தெரியும். அப்படி இருந்தும் வழக்கு போட்டிருக்கார்னா, என்னவோ இருக்கு’’ என மீண்டும் அங்கேயே செக் வைத்து முடிக்கிறார்கள் ரஜினிக்கு நெருக்கமானவர்கள்!

- மை.பாரதிராஜா