குட்டிச்சுவர் சிந்தனைகள்



வாழ்க்கை பல கட்டங்களால் ஆனது என்கிறார்கள் பெரியவர்கள். ‘‘வாழ்க்கை எட்டு கட்டங்களால் ஆனது’’ என்கிறார் நம்ம சூப்பர் ஸ்டார். ஆனால் என்னையக் கேட்டீங்கன்னா, வாழ்க்கை கட்டங்களால் ஆனதில்ல. ‘கட்டணும்’களால் ஆனது என்பேன். காலேஜ் பீஸ் கட்டணும், பரீட்சை பீஸ் கட்டணும், வேலைக்கு லஞ்சம் கட்டணும், வீட்டு உபயோக பொருள்களுக்கு டியூ கட்டணும், வீட்டுக்கு இ.எம்.ஐ கட்டணும், அப்புறமா கல்யாணம் கட்டணும், குழந்தை பொறந்தா ஹாஸ்பிடல் ஃபீஸ் கட்டணும்,

குழந்தை வளர்ந்தா ஸ்கூல் ஃபீஸ் கட்டணும், டியூஷன் பீஸ் கட்டணும், நாற்பதுக்கு நாற்பது அடில வீடு கட்டணும், வீட்டுக்கு ஈபி பில் கட்டணும், போன் பில் கட்டணும், தண்ணி வரி கட்டணும், வீட்டு வரி கட்டணும், கடனுக்கு வட்டி கட்டணும், அப்புறம் கடனையே கட்டணும், இப்படி கட்டணும் கட்டணும் என ‘கட்டணும்’களாலானதுதான் நம்முடைய இன்றைய வாழ்க்கை!

உலகத்தில் மோசமான, ஏன் மிக மிக மோசமான சிறைச்சாலைகள் எத்தனையோ உண்டு. ருவாண்டாவின் கிடமாரா சிறைச்சாலைல இருந்து அமெரிக்காவின் ரிக்கர்ஸ் தீவு சிறைச்சாலை வரை, வெனிசுலாவின் லா செபனேட்டா சிறைச்சாலைல இருந்து தாய்லாந்தின் பேங் க்வாங் சிறைச்சாலை வரை. ஏன் அரசியல் ரீதியாகப் பார்த்தால், ஒரு கொடூர சர்வாதிகாரியின் பிடியில் இருக்கும் நாடு கூட ஒரு திறந்தவெளி சிறைச்சாலைதான்.

பொருளாதார ரீதியாகப் பார்த்தால், வறுமை வழிந்தோடும் ஒரு வீடு கூட சிறைச்சாலைதான். பூகோள ரீதியாகப் பார்த்தால், நீர் கிடைக்காத நிலங்கள் கூட ஒரு வகையில் சிறைச்சாலை தான். தத்துவ ரீதியாகப் பார்த்தால்,

சிந்தனை செய்யாத மூளை கூட ஒரு சிறைச்சாலைதான். கோபமும் கொடூர குணமும் கூட, மனிதனைக் கட்டி வைத்திருக்கும் சிறைச்சாலைதான். அழகும் அறிவும் கூட ஒரு வகையில் சிறைச்சாலைதான். இப்படி எத்தனையோ சிறைகள் இருந்தாலும், உலகிலேயே மிக பயங்கரமான சிறைச்சாலை என்பது பெண்ணின் அன்புதான்.

பூகம்பமே வந்தாலும் பூங்கொத்து தந்த மாதிரி சிரிப்பது அல்ல ஜென் நிலை. சுனாமியே வந்தாலும் சாக்லேட் தின்பது போல சிரிப்பது அல்ல ஜென் நிலை. ஐந்தடி தூரத்தில் அம்மாவைப் பார்த்தவுடன் அண்டர்கிரவுண்டில் கிடக்கும் அமைச்சர் களிடம் இருப்பது அல்ல ஜென் நிலை. பாகிஸ்தானை ஃபைனலில் வீழ்த்தினாலும், கேப்டன் கூலாய் இருக்கும் தோனியிடம் இருப்பதல்ல ஜென் நிலை. மொக்கையான தமிழ்ப் படத்தை மூணு மணி நேரம் நகராமல் பார்ப்பதல்ல ஜென் நிலை.

முதல் காதலி கல்யாணத்தன்று மூட் அவுட் ஆகாமல் இருப்பதும் அல்ல ஜென் நிலை. குழந்தைய பார்த்துக்குங்கன்னு மனைவி விட்டுட்டு போறப்ப, குழந்தையோட சேட்டையாலும் செய்கையாலும் நாம கோவப்படாம இருந்தா, அதான் உண்மையான ஜென் நிலை. பொறந்தாலும் ஆம்பளையா பொறக்கக்கூடாது, அப்படி பொறந்துப்புட்டா புள்ளைய ஒரு நாள் பார்த்துக்கிற பெறுப்பேற்கக்கூடாது!

’ஐ’ பட பாடல்களை வெளியிட அர்னால்டு வந்தாலும் வந்தாரு, அவங்கவங்க பண்ற சலசலப்பும் கிளுகிளுப்பும் தாங்க முடியல. அத்தாம் பெரிய ஆக்ஷன் ஹீரோவ வச்சு நீங்க பண்ணுற காமெடி இருக்கே, அர்னால்டு அஞ்சு மணிக்கு இட்லி தின்னார், ஆறு மணிக்கு ஏப்பம் விட்டார், எட்டு மணிக்கு கொட்டாவி விட்டார், பத்து மணிக்கு கொறட்டை விட்டாருன்னு... முடியலடா சாமி! இதுல அர்னால்டுகிட்ட போயி, ‘வணக்கம்’ சொல்றது, ‘வாங்க’ சொல்றதுன்னு இம்சை வேற.

அர்னால்டு கம்ப ராமாயணத்தை கரைச்சுக் குடிச்சவரு, நீங்க தமிழ்ல பேசினா திருப்பி திருக்குறள் சொல்வாரு. இதுல அவரு மம்மியப் பார்த்தத வச்சு மம்மி கட்சிய சேர்ந்த டம்மிங்க பெருமை தாங்கல. ‘அமெரிக்காவிலிருந்து வந்த அர்னால்டு, மம்மியை சந்தித்த பின் தன் பெயரை அம்மாநால்டா மாத்தப் போறார்’னு தெருமுக்கு டீக்கடையில ஒருத்தன் சொல்றான்.

 மம்மிய பார்த்தவுடனே ஆக்ஷன் ஹீரோ அர்னால்டே காலுல விழுந்தாராம். எல்லாரும் ‘‘ஏன் கால்ல விழுந்தீங்க’’ன்னு கேட்டதுக்கு, ‘‘காலுல விழல, மம்மிக்கு தண்டால் போட்டு காமிச்சேன்ய்யா’’ன்னு சமாளிச்சாராம். இப்படி ஒரு கிசுகிசு சொல்றாங்க. நல்லவேளை, ரஜினிய பார்த்தவுடனே ‘ஐ ஆம் ஏ ரஜினி ஃபேன். லுங்கி டான்ஸ்... லுங்கி டான்ஸ்...’னு அர்னால்டு டான்ஸ் ஆடுனாருன்னு இவங்க சொல்லல.

நம்மாளுங்க நமக்கே ஒழுங்கா இன்னமும் ஆதார் கார்டை தரல, இதுல வட இந்தியாவுல அனுமாருக்கு ஆதார் கார்டு கொடுத்திருக்காங்களாம். நமக்கு கொடுத்த ஆதார் கார்டுலயும் நாம அனுமார் மாதிரிதான் இருக்கோம்ங்கிறது வேற விஷயம்.

ஆனா இப்பிடி அனுமாருக்கே ஆதார் கார்டு கொடுத்தவங்க, எப்படியும் ராமருக்கு ரேஷன் கார்டு, அதுவும் குடும்பத் தலைவியா சீதாதேவிய சேர்த்து தருவாங்க. தேவலோகத்துல இருக்கிறவங்களுக்கு எல்லாம் டெபிட் கார்டு, விஷ்ணு பகவானுக்கு வோட்டர் ஐ.டி, சிவபெருமானுக்கு கிரெடிட் கார்டுன்னும் கொடுத்துட்டீங்கன்னா, சாமி இருக்காரா இல்லையாங்கிற பல நூற்றாண்டு வாக்குவாதங்களை முடிவுக்குக் கொண்டு வந்துடலாம்.

இந்த ஐபோன் 6 ரிலீஸ் ஆனாலும் ஆச்சு, அமெரிக்காவுல இருந்து அமிஞ்சிக்கரை வரைக்கும் பலரும் பண்ற பந்தா தாங்க முடியல. அந்த ஜப்பான்காரனே ‘லிங்கா’ ரிலீஸுக்கு வெயிட் பண்றான்; இவனுங்க என்னமோ ஐபோனு ரிலீஸுன்னுக்கிட்டு. என்னய்யா பெரிய ஐபோனு? அதுல நமக்கு கடன் கொடுத்தவன் கால் பண்ணினா கால் ரிஜக்ட் ஆகுமாடா? இல்ல, பொண்டாட்டி கூப்பிடும்போது நாட் ரீச்சபிள் வருமா? இந்த ஃபீச்சரை சேருங்கய்யா, போனு பிச்சிக்கிட்டுப் போகும்!

ஐபோன் அருமையா இருக்குன்னு நம்பறது, பணக்காரங்க எல்லோரும் சந்தோஷமா இருக்காங்கன்னு நம்புற மாதிரி. அடேய் தம்பிகளா, ஐபோனுன்னா அந்தஸ்து போனுன்னு நம்பிக்கிட்டு இருக்கீங்களா? அந்த போனுக்கு விலை 5000 ரூபாய்தான், பின்னால இருக்கிற அந்த அரை ஆப்பிளுக்கு நீங்க தர்றதுதான் 55000. என்ன ஐபோனு, ஐவாட்ச்னு கலர் கலரா விடுறீங்க... 2016 எலெக்ஷன்ல பாருங்க! ‘அ’போனு, ‘அ’வாட்ச்சு, ‘அ’மோதிரம், ‘அ’செயினு, ‘அ’தோடு, ‘அ’தொங்கட்டான் எல்லாம் வரும். மொத்தத்துல ஒரு பய உழைக்கக்கூடாது, ஆங்!

இந்த வார குட்டிச் செவுரு போஸ்டர் பாய்...


தான் சார்ந்தி ருக்கும் பா.ஜ.கவுக்காக உழைக்கிறாரா, இல்லை இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்காக உழைக்கிறாரான்னு தெரியாத அளவுக்கு பீதியக் கிளப்பும் அரசியல் சோலார் ஸ்டார் சுப்ரமணிய சாமி!

ஆல்தோட்ட பூபதி