கெட்ட பெயர்



புதிய பிராஞ்ச் மேனேஜர் நிறையவே கறாராக இருந்தார். துணை மேனேஜரை வரச் சொல்லி அவருக்கு அறிவுரை சொன்னார்...‘‘எல்லா ஸ்டாஃப்கிட்டயும் மிரட்டலா அதட்டற தொனியில பேசுறீங்களாமே? இனிமே அப்படியெல்லாம் பேசக்கூடாது. அது பண்பாடு இல்ல. தெரிஞ்சுதா? இனி உங்களைப் பற்றி அப்படி எதுவும் புகார் வந்தா நான் சும்மா இருக்க மாட்டேன்..!’’ என்றார்.

பதிலே சொல்லாமல் அவர் அகங்காரமாக அகன்றதும், அருகிலிருந்த கிளார்க் பதறியபடியே மேனேஜரிடம் பேசினார்...‘‘சார், நீங்க இந்த பிராஞ்சுக்குப் புதுசு. அதனால சொல்றேன்... இவர் யார் தெரியுமா? நம்ம ரீஜினல் மேனேஜரின் அக்கா பேரன். அந்தத்  திமிர் அவருக்கு. அதை வச்சே எல்லோரையும் துச்சமாப் பேசிட்டிருக்கார். எதையாவது சொல்லி ரீஜினல் மேனேஜர்கிட்ட போட்டுக் கொடுத்துடுவார்னு எல்லாரும் அடங்கிப் போறாங்க. நீங்களும் அவர்கிட்ட கொஞ்சம் யோசிச்சுப் பேசுங்க...’’

‘‘ஓகே.. யோசிக்கிறேன்...’’ என்று அவரை அனுப்பிவிட்டு பிராஞ்ச் மேனேஜர், ரீஜினல் மேனேஜருக்கு போன் செய்தார். ‘‘குட்மார்னிங் சார்... நீங்க சொன்னபடியே உங்க அக்கா பேரன்... அதான் நம்ம டெபுடி மேனேஜரைக் கூப்பிட்டு நானே புத்திமதி சொல்றாப்போல பேசியிருக்கேன். இனிமே அவரால இந்த ஆபீஸில் உங்களுக்கு எந்த கெட்ட பெயரும் வராம நான் பார்த்துக்கறேன்!’’

பர்வதவர்த்தினி