சந்தேகம்



‘‘குட் மார்னிங் அங்கிள்! ஆன்ட்டி இல்லையா?’’ - கணேசன் வீட்டுக்குள் எட்டிப் பார்த்தபடியே கேட்டாள் ஜெயந்தி. டிகிரி படிக்கும்போது கணேசனிடம் கணக்கு கற்றுக்கொள்ள வந்தவள். என்னமா வளர்ந்து விட்டாள்!‘‘வாம்மா... உட்காரு. ஆன்ட்டி அவங்க அம்மா வீட்டுக்குப் போயிருக்காங்களே!’’‘‘அங்கிள்! வந்து... வந்து...’’

‘‘என்ன? சொல்லும்மா!’’‘‘அங்கிள், நான் உங்ககிட்ட டியூஷன் வந்தப்போ, எங்க மாமா பையனை காதலிச்சேன். வீட்டுப் பிரச்னையெல்லாம் தாண்டி இப்ப அவரையே கல்யாணம் பண்ணிக்கிட்டேன். அப்போல்லாம் அவர் எனக்கு லெட்டர் எழுதணும்னா, உங்க வீட்டு அட்ரஸுக்குத்தான் எழுதுவார்.

நானும் அதை வாங்கிப் படிச்சிட்டு வீட்டுக்கு எடுத்துட்டுப் போக தைரியம் இல்லாம, ஆன்ட்டிகிட்டயே கொடுத்துடுவேன். இப்ப அதையெல்லாம் வாங்கிட்டுப் போகலாம்னுதான் வந்தேன். நானும் அவரும் நாளைக்கே அமெரிக்கா கிளம்பறோம்’’ - சொல்லி முடித்தாள் ஜெயந்தி.

‘‘கொஞ்சம் இரும்மா!’’ என்றவர், தன் மனைவி ஜெயந்தியின் பீரோவிலிருந்து அந்தக் கடிதக் கற்றைகளை அள்ளி வந்து கொடுத்தார். ‘‘தேங்க்ஸ்’’ சொல்லிக் கிளம்பினாள் ஜெயந்தி.
‘அநியாயமாக மனைவியை சந்தேகித்தோமே! நாளைக்கே போய் அவளிடம் மன்னிப்பு கேட்டு, அவளை அம்மா வீட்டிலிருந்து அழைத்து வர வேண்டும்’ என தீர்மானித்தார் கணேசன். 

சுகந்தா ராம்