தலையில ஐஸ்... தானமா ரைஸ்!



சுடச்சுட ஃபேஸ்புக் சவால்கள்!

நாமெல்லாம் ஹீரோயின்கள் லேசாய் மழையில் நனைந்தாலே ‘பே’ என வாய்பிளந்து பார்க்கிற கேரக்டர்ஸ். ஹன்சிகாவையும் சானியா மிர்ஸாவையும் ஒரு பக்கெட் ஐஸ் வாட்டரில் நனையச் செய்து, அதை போட்டோவாகவும் ஃபேஸ்புக்கில் போட வைத்த புண்ணியவான்களுக்கு நாம் கோயில் கட்ட வேண்டாமா? அடடா... கொஞ்சம் பொறுங்க பாஸ். நிஜமாகவே கட்டுவதாய் இருந்தால், இந்த ‘ஐஸ் பக்கெட் சேலஞ்’சுக்கல்ல... நம்மூர் ‘ரைஸ் பக்கெட் சேலஞ்சு’க்கு கட்டுங்க ஒரு கோயில்!

இந்த வருடத்தின் மத்தியில்தான் பற்றிக்கொண்டது இந்த விநோத சேலஞ்ச். குளிரக் குளிர ஐஸ் வாட்டரை அப்படியே தலையில் ஊற்றிக்கொள்வது போல பிரபலங்களின் போட்டோக்கள் ஃபேஸ்புக்கை நிறைத்தன. ஏன் இந்த லூசுத்தனம்? உண்மையில், ஏ.எல்.எஸ் எனும் நரம்பு தொடர்பான ஒரு நோயைப் பற்றிய விழிப்புணர்வு பிரசாரம்தான் இது.

இப்படி ஐஸ் குளியல் செய்பவர்கள் எல்லோருமே இந்நோய் பற்றிய ஆராய்ச்சிகளுக்காக ஒரு சிறு தொகையை நன்கொடையாகக் கொடுப்பார்கள். ‘இந்த மாதிரி உங்களால முடியுமா?’ என ஃபேஸ்புக் நண்பர்களுக்கு நாம் விடுக்கும் சவால்தான் இந்த ஐஸ் குளியல் ப்ளஸ் நன்கொடை. யு.கே., யு.எஸ் தொடங்கி இப்போது நம் ‘பதினெட்டு பட்டிகள்’ வரை இது பரவிவிட்டது.

ஆனால், லேட்டஸ்ட் தகவல் இதுவல்ல. எதற்குமே அடுத்த கட்டம் என ஒன்று உண்டல்லவா? அப்படித்தான் இந்தியப் பெண் ஒருவர், இந்த ஐஸ் பக்கெட் சவாலுக்குப் போட்டியாக தனது ‘ரைஸ் பக்கெட் சவாலை’ ரைமிங்காகக் களமிறக்கிவிட்டார்.

அவர் பெயர் மஞ்சு லதா கலாநிதி. அரிசி பற்றி ஆய்வுகள் செய்யும்   Oryza.com  என்ற இணையதளத்தில் பணியாற்றும் இவர், ஐதராபாத்வாசி. இந்தியாவில் தலைவிரித்தாடும் வறுமையையும் பட்டினி யையும் போக்கும் விதமாக இந்த ரைஸ் பக்கெட் சவாலை வடிவமைத்திருக்கிறார் மஞ்சு.

ஐஸ் பக்கெட் மாதிரி இதில் தண்ணீரையோ அரிசியையோ வீணாக்கத் தேவையில்லை. நம்மை நாம் வருத்திக்கொள்ளும் அவசியமும் இல்லை. பணமாக நன்கொடையும் தர வேண்டாம். நமக்குத் தெரிந்து வறுமையில் வாடும் ஒருவருக்கு, ஒரு படி அரிசியை தானமாகக் கொடுக்க வேண்டும். அதை போட்டோ எடுத்து, ‘இது மாதிரி உங்களால் செய்ய முடியுமா’ என நம் ஃபேஸ்புக் நண்பர்களிடம் சவால் விடலாம். ‘‘ஐஸ் பக்கெட் சவாலில் நரம்பியல் நோய்க்கு நிதி திரட்டு வது பாராட்டத்தக்கது. அதே மாதிரி நம் நாட்டில் உள்ள தீர்க்க முடியாத நோயென்றால், அது பசிதான்.

 இந்தியாவின் மிக முக்கியமான உணவு அரிசி. அது இல்லாமல் வாடும் எத்தனையோ குடும்பங்கள் இங்கு உண்டு. அதனால்தான் நான் இப்படியொரு போட்டியைத் துவங்கினேன். இந்தப் போட்டி மூலம், பலரும் அரிசி தானம் செய்ய முன்வருவார்கள். பசியும் பட்டினியும் ஓரளவாவது கட்டுப்படாதா?’’ என தன் ஆவலை வெளிப்படுத்துகிறார் மஞ்சு. அவர் கணக்கு தப்பவில்லை. துவங்கிய மூன்றே நாட்களில் 25 ஆயிரம் லைக்குகளை அள்ளி பரபரப்பாகிவிட்டது இந்த ‘ரைஸ் பக்கெட் சவால்’.

பக்கெட்தான் என்றில்லாமல், சும்மா கடையில் வாங்கிய பார்சலாகவும்  பாத்திரத்திலும் அரிசியை தானம் கொடுப்பவர்களின் போட்டோக்கள் குவிகின்றன. சிலர் பணமாகவும் தருகிறார்கள்; மருந்துகள் வாங்கித் தருகிறார்கள் வேறு சிலர். கடந்த ஞாயிற்றுக்கிழமை கொல்கத்தா ஹோட்டல் ஒன்றில் ரைஸ் பக்கெட் விழாவே நடத்தியிருக்கிறார்கள், ஃபேஸ்புக் ஃபேன்கள். ‘கோயில் கட்ட வேணாம். பக்கத்தில் பசித்திருப்பவருக்கு கொஞ்சம் அரிசி பார்சல் கட்டுங்க பாஸ்’ என்பதே இவர்கள் பாயின்ட்!

ஐஸ் பக்கெட் சவாலில் நரம்பியல் நோய்க்கு நிதி திரட்டுவது பாராட்டத்தக்கது. அதே மாதிரி நம் நாட்டில் உள்ளதீர்க்க முடியாத நோயென்றால், அது பசிதான்.

- நவநீதன்