காந்திக்கு உயிர் கொடுத்தவர்!



‘மகாத்மா’ ஆக்கி மன சிம்மாசனத்தில் அமர வைத்தோமே தவிர, காந்தியை உலகமெங்கும் கொண்டு செல்லும் முயற்சி எதையும் நாம் செய்யவே இல்லை. அவரால் சுதந்திரம் அடைந்த இந்த தேசத்தில், பள்ளிக்கூடப் பாடப் புத்தகங்களில் அவரை சிறைப்படுத்தி வைத்தோம்.

 அவரைப் பற்றி உன்னதமான ஒரு திரைப்படம் எடுக்க, அவர் இறந்து 35 ஆண்டுகள் கழித்து ஒருவர் வர வேண்டி இருந்தது. அதுவும் காந்தி வாழ்நாளெல்லாம் எதிர்த்த அதே பிரிட்டன் நாட்டிலிருந்து! ‘காந்தியைப் பற்றிய ஒரு நல்ல படத்தைக்கூட வெளிநாட்டவர்களால்தான் எடுக்க முடியும்’ என நம்மை வெட்கித் தலைகுனிய வைத்த இயக்குனர் ரிச்சர்ட் அட்டன்பரோ, தனது 90வது வயதில் கடந்த வாரம் மறைந்தார்.

ஒரு நடிகராகத்தான் தன் வாழ்வைத் துவக்கினார் ரிச்சர்ட். ஆனால் அவருக்குள் இருந்த இயக்குனரை உடனே கண்டு கொண்டார். லண்டனில் இருக்கும் இந்தியத் தூதரகத்தில் பணிபுரிந்த மோதிலால் கோத்தாரி என்ற சிவில் சர்வீஸ் அதிகாரிதான் ரிச்சர்டுக்கு காந்தி பற்றி அறிமுகம் செய்தார். ‘‘காந்தியைப் பற்றி ஒரு படம் எடுங்கள்’’ எனக் கேட்டுக் கொண்டார். அதன்பின் லூயி ஃபிஷர் எழுதிய மகாத்மா காந்தியின் வாழ்க்கைக் கதையைப் படித்த ரிச்சர்ட் அட்டன்பரோ பிரமிப்பில் ஆழ்ந்துவிட்டார்.

அந்த நிமிடத்திலேயே காந்தியின் வாழ்க்கையைப் படமாக்கத் தீர்மானித்தார்.ஆனால் இதற்கு கிட்டத்தட்ட இருபது ஆண்டுகள் உழைப்பைத் தர வேண்டி வந்தது. காந்தியின் ஒட்டுமொத்த வாழ்க்கை பற்றியும் படித்த அவர், அதிலிருந்து அவரது போராட்டக் காலத்தை மட்டும் எடுத்து திரைக்கதை தயாரித்தார்.

ஆனால் அதற்கு தயாரிப்பாளரைத் தேடுவதற்குள் ஒருவழி ஆகிவிட்டார். ‘காந்தி பற்றி படம் எடுத்தால் ஓடாது’ என ஹாலிவுட் நிறுவனங்கள் மனப்பூர்வமாக நம்பின. ‘‘கையில் தடி பிடித்துக் கொண்டு, தோளில் ஒரு துண்டு போட்டுக்கொண்டு அரை நிர்வாணமாக அலைந்த ஒரு பழுப்பு நிற மனிதனின் கதையை யார் சினிமாவாகப் பார்ப்பார்கள்?’’ என ஒருவர் வெளிப்படையாகவே ரிச்சர்டைக் கேட்டார்.

இதற்கிடையே இந்தப் படத்துக்காக இந்திய அரசிடம் முறைப்படி அனுமதி வாங்கவும் ஒரு பக்கம் அவர் அலைய நேரிட்டது. பிரதமராக இருந்த நேரு இதற்கு உடனே சம்மதம் சொன்னார். முறைப்படி ரிச்சர்ட் அனுமதி கேட்டு கடிதம் தருவதற்குள் நேரு மறைந்துவிட, திரும்பவும் தாமதமானது.

நல்லவேளையாக இந்திரா காந்தியும் அப்பா போலவே இதில் ஆர்வம் காட்டினார். தயாரிப்பாளரைத் தேடிப் பிடித்து படப்பிடிப்புக்காக ரிச்சர்ட் இந்தியா வருவதற்குள் இந்திரா காந்தி அவசர நிலைப் பிரகடனம் செய்து, அதன்பின் தேர்தலிலும் அவர் தோற்றுவிட்டார்.

அதன்பின்னும் பொறுமையாகக் காத்திருந்து, மீண்டும் இந்திரா ஆட்சிக்கு வந்ததும் அனுமதி வாங்கி, படப்பிடிப்பைத் துவக்கினார் ரிச்சர்ட். ஆனால், இந்தியாவில் அதற்குக் கடும் எதிர்ப்பு. ‘ஏதோ காந்தியை ஒரு பிரிட்டிஷ்காரர் திருடிக் கொண்டு போக நினைக்கிறார்’ என்பது போலவே பலரும் சித்தரித்தார்கள்.

ரிச்சர்டின் நேர்மை மீது சந்தேகம் கிளப்பினார்கள். காந்தி உருவாக்கிய நவஜீவன் டிரஸ்ட்டுக்குத் தலைவராக இருந்த மொரார்ஜி தேசாய் வழக்குப் போட்டார். ‘பென் கிங்ஸ்லி என்ற ஒரு பிரிட்டிஷ்காரர் காந்தியாக நடிப்பதா?’ என கொதிப்பு! 

இந்த எல்லா தடைகளையும் தாண்டி படம் தயாரானபோது, செலவு எகிறியது. லண்டனில் இருக்கும் தன் வீட்டை அடமானம் வைத்து, சேர்த்து வைத்திருந்த கலைப் பொக்கிஷங்களை விற்று படத்தை முடித்தார். மத்திய அரசு ஒரு கோடி டாலர் நிதியளித்து கை கொடுத்தது.

 22 மில்லியன் டாலர் செலவழித்து எடுக்கப்பட்ட படம், அதைவிட இருபது மடங்கு அதிகமாக வசூலித்துக் கொடுத்ததை பலரால் நம்ப முடியவில்லை. அதோடு எட்டு ஆஸ்கர் விருதுகள்! ‘இந்த விருதுகளால் காந்தியையும், உலக மக்கள் அமைதியாக வாழ வேண்டும் என்ற அவரது கொள்கையையும் கௌரவப்படுத்தி இருக்கிறீர்கள்’ என நெகிழ்ச்சியோடு சொன்னார் ரிச்சர்ட்.

இந்தியாவைப் பற்றி உலக மக்கள் கொண்டிருந்த பல தவறான பார்வைகளை ‘காந்தி’ திரைப்படம் மாற்றியது. இன்று நாம் கண்களை மூடி காந்தியை நினைத்தால், சினிமா காந்திதான் மனக்கண்ணில் வருகிறார். அதற்குக் காரணமான அட்டன்பரோவை இந்தியா மறக்காது!

அகஸ்டஸ்