படிப்பு



சௌம்யாவை பெண் பார்த்துவிட்டுப் போன மனோகர் ஓகே சொல்லியிருந்தான். சௌம்யாவுக்கும் ஓகேதான்! ஆனால், சௌம்யாவின் அப்பா கணேசனுக்குத்தான் குழப்பமாக இருந்தது. எல்லாம் மனோகரின் படிப்பு விஷயம்தான்.''கல்யாணி! நம்ம சௌம்யா பி.இ படிச்சிருக்கா.

மனோகர் டிப்ளமோ படிச்சிருக்கிறார். கல்யாணத்துக்குப் பிறகு நம்ம சௌம்யா சாதாரணமா ஏதாவது சொன்னால் கூட படிச்ச திமிரில் சொல்றதா நினைச்சு பிரச்னை வர வாய்ப்பிருக்கு. அதான் இந்த வரன் வேணுமான்னு தோணுது...’’ - மனைவியிடம் சொன்னார் கணேசன்.‘‘அப்படி எந்தப் பிரச்னையும் வந்துடாதுன்னு என் மனசுல படுது!’’

‘‘எப்படி அவ்வளவு உறுதியா சொல்றே?’’‘‘ஆமாங்க! கொஞ்ச வருஷத்துக்கு முன்னால கூட அவங்க குடும்பம் ஏழ்மையில இருந்ததாம். அப்போ மனோகர்தான் டிப்ளமோவோட படிப்பை நிறுத்திட்டு வேலைக்குப் போய், ரெண்டு தங்கைகளையும் பி.இ., பி.டெக்னு படிக்க வச்சிருக்கிறார்.

அவரோட தங்கைகளே இதை என்கிட்டே சொன்னாங்க. பெண்கள் படிச்சு முன்னேறணும்னு நினைக்கிறவர், படிச்ச நம்ம பொண்ணையும் அன்பா மரியாதையா நடத்துவார்னுதான் தோணுது!’’ என்றாள் கல்யாணி உறுதியாக! ‘‘அப்போ முகூர்த்த தேதி பார்த்துட்டு வந்துடறேன்!’’  - ஜோதிடரைப் பார்க்கக் கிளம்பினார் கணேசன்.               

கீர்த்தி