அஞ்சான்



உற்ற நண்பர்களாக - இரட்டை தாதாக்களாக வருகிறார்கள் சூர்யாவும் வித்யுத்தும். துரோகத்தால் நண்பன் கொல்லப்பட, அதற்குப் பழிவாங்க சூர்யா வீறு கொண்டு எழுவதுதான் ‘அஞ்சான்.’ இதற்கிடையில் காதல், மோதல், ரத்தம், சத்தம் என அதிர்வேட்டு கிளப்பும், ‘ராஜு பாய்’ சூர்யாவின் அதகள அட்டகாசம். அவர் மீண்டு வந்து எதிரியை எப்படியெல்லாம் வேட்டையாடுகிறார் என்பது பின்கதைச் சுருக்கம்.

ஊன்றுகோலுடன், கனிந்த முகமாய் மும்பைக்கு சூர்யா ரயில் ஏறும்போது இத்தனை ரணகளத்தை எதிர்பார்க்க முடியாதது நல்ல தொடக்கம். மும்பையின் தாதாவாக விளங்கிய ராஜு பாய் எப்படிப்பட்ட சூழ்ச்சிக்குப் பழியானார் என ஒவ்வொரு முடிச்சாக அவிழ்க்கிறார்கள். தியேட்டரை விட்டு வெளியே வந்த பிறகு, ‘இத்தனை ஆக்ஷனுக்கான முன்கூட்டிய நிகழ்வுகள் இருக்கின்றனவா’ என பார்த்தால், முட்டி மோதுகின்றன சந்தேகங்கள். ஆனால், உள்ளே இருக்கிறவரை அப்படி எதையும் எண்ண வைக்காமல் வைத்திருப்பது லிங்குசாமி யின் துளியூண்டு திரைக்கதை.

அதிரடி, குத்துவெட்டு, துப்பாக்கி, மிரட்டல், உருட்டல், கோபம் எனப் பல இடங்களில் ஜொலிக்கிறார் சூர்யா. அவருக்கு இந்த தாதா புதுசு என்றாலும், பார்க்கும்போது கரை காணாத ஸ்டைலில் பின்னுகிறார். இவ்வளவு அழகான சூர்யாவை நிச்சயம் இதற்கு முன்னால் பார்த்ததில்லை என்பதுதான் நிஜம்.

 டூத்பிக்கை கடித்தபடி வரும் ஸ்டைலில் அடி பின்னுகிறார். துரோகிகளை அழிக்கும்போதும், அடக்க முடியாத வெறியை அடங்கிய குரலில் சொல்லும்போதும், அனல் சூர்யா! அசத்தல் தம்பி, ஆர்ப்பாட்ட அண்ணன் என இரண்டிலும் கூல், தூள் வித்தியாசம். ட்ரிம் தாடியோடு அதே கெட் அப்பில் இன்னும் கூட ஒரு காதல் படம் பண்ணலாம் பாஸ்! ‘எதிரிகிட்டே கூட துரோகிகள் இருக்கக் கூடாது’ என பன்ச் பேசிவிட்டு வருவது வரையிலும் மேனரிசத்தில் அள்ளுகிறார் சூர்யா.

சமந்தா செம ஜில்! பார்க்கிற பார்வையிலும் படபட பேச்சிலும் போட்டிருக்கிற குட்டி உடைகளுக்கு மேலே போதை ஏற்றுகிறார். சின்னச் சின்ன எக்ஸ்பிரஷன்களில் அழகு. சாதாரணமாக துப்பாக்கிகளோடு புழங்கும் சூர்யாவைக் காதலிப்பது, சுட்டுக்கொல்லும் காட்சியைப் பார்த்த பின்பும் காதலிக்கத் தொடங்குவது உறுத்தல். பிகினி உடையில் கடற்கரையிலிருந்து சமந்தா கூடுதல் வெட்கத்தில் எழுந்து நடக்கையில், கிறங்கி விழுகிறார்கள் ரசிகர்கள்.

‘நண்பேன்டா’ வாக வருகிறார் வித்யுத். தீர்க்கமான பார்வையாலும், நண்பன் மீதான பாசத்தாலும் ஈர்க்கிறார். ஆனாலும், இருவருக்குமான நட்புணர்வில் ஆழம் இல்லையே! பத்து வருஷம் நண்பனுக்காக சூர்யா ஜெயிலில் இருந்தார் என்பது பேச்சோடு பேச்சாக போகிறதே தவிர, நண்பனைக் காப்பாற்றிய வீர தீரத்தை ஒரு தடவையாவது விலாவாரியாகக் காட்டியிருக்க வேண்டாமா!

யுவன்ஷங்கர்-லிங்குசாமி கூட்டணி இந்தத் தடவையும் ‘ஏக்... தோ... தீன்’, ‘காதல் ஆசை’ இரண்டு பாடல்களில் ஜொலிக்கிறது. பின்னணியில் அசுரத்தனமாய் உழைத்தவர், கொஞ்சம் பாடல்களிலும் கைவரிசையைக் காட்டியிருக்கலாம்.

சுட்டுக்கொண்டே இருக்கிற ஆக்ஷனுக்கு கொஞ்சம் காரசாரமாய் பின்கதை வைத்திருக்கலாமே! மனோஜ் பாஜ்பாயை இன்னும் பயன்படுத்தியிருக்கலாம்.
ஆக்ஷனும், பதற்றமுமாய் செல்கிற ‘ராஜு பாய்’ கதைக்கு அருமையாக ஒத்துழைக்கிறது சந்தோஷ் சிவன் கேமரா! பிருந்தா சாரதி வசனங்களில் நிறைய இடம், கூர்மை!
பழிக்கு பழி கதையில் மேலும் காரண, காரியம் சேர்த்திருந்தால், ‘அஞ்சான்’ கவர்ந்திருப்பான்.

- குங்குமம் விமர்சனக் குழு