குட்டிச் சுவர் சிந்தனைகள்



99% தமிழர்கள், பத்து தடவைக்கு மேலே திருப்பதி பாலாஜியை தரிசித்து இருக்க மாட்டார்கள். ஒன்பது தடவைக்கு மேலே தனது சொந்த கல்யாண வீடியோவை முழுசாகப் பார்த்திருக்க மாட்டார்கள். எட்டு தடவைக்கு மேலே போலீஸ் ஸ்டேஷன் சென்றிருக்க மாட்டார்கள். ஏழு தடவைக்கு மேல எந்த திரைப்படத்தையும் முதல் நாள் முதல் ஷோ பார்த்திருக்க மாட்டார்கள். ஆறு தடவைக்கு மேலே அடுத்தவங்களுக்காக அழுதிருக்க மாட்டார்கள்.

ஐந்துக்கும் மேற்பட்ட வட இந்திய மாநிலங்களில் ஐந்து தடவை கூட சுற்றியிருக்க மாட்டார்கள். நான்கு தடவை கூட ஆற்றில் மீன் பிடிக்கப் போயிருக்க மாட்டார்கள். அதிகபட்சமாய் மூன்று தடவை கூட இடைத்தேர்தலில் ஓட்டுப் போட்டிருக்க மாட்டார்கள். அதிகபட்சம் இரண்டு தடவைக்கு மேலே கல்யாணம் செய்திருக்க மாட்டார்கள். ஆங், அப்புறம் கடைசி பாயின்ட் என்னன்னா, ஒரு தடவைக்கு மேல உயிரை விட்டிருக்க மாட்டார்கள்.

அதே சமயம், ஒரு தடவைக்கு மேலே காதலிச்சு இருப்பார்கள். இரண்டு தடவைக்கு மேலே வாகனம் மாற்றியிருப்பார்கள். மூன்று தடவைக்கு மேலே அரசு அலுவலங்களில் அவமானப்பட்டிருப்பார்கள். நாலு தடவைக்கு மேலே லஞ்சம் கொடுத்திருப்பார்கள். ஐந்து தடவைக்கு மேலே பழனி சென்றிருப்பார்கள்.

ஆறு தடவைக்கு மேலே ரேஷன் கடைகளில் திருப்பி அனுப்பப்பட்டிருப்பார்கள். ஏழு தடவைக்கு மேலே தேர்தலில் ஓட்டு போட்டிருப்பார்கள். எட்டு தடவைக்கு மேலே திருமண போட்டோ ஆல்பம் பார்த்திருப்பார்கள். ஒன்பது தடவைக்கு மேலே அடுத்தவனை ஏமாத்தி இருப்பார்கள். பத்து தடவைக்கு மேலே அடுத்தவனிடம் ஏமாந்து இருப்பார்கள்.

அன்பான டீம் இந்தியாவுக்கு, வணக்கம்! கிரிக்கெட் ரசிகர்களா கேக்குறோம்... ஒரு காலத்துல ஒரு ப்ளேயர் நூறு ரன்னடிக்கணும்னு எதிர்பார்த்த நாங்க, இப்போ நம்ம மொத்த அணியே நூறு ரன்னடிக்கணும்னு ஆசைப்படுறோமே...

இது தகுமா? ரெண்டு வருஷத்துக்கு முன்னால, ராகுல் டிராவிடோ, வி.வி.எஸ்.லக்ஷ்மணோ தனியாளா ஒவ்வொரு மேட்சுக்கும் புடிச்ச மொத்த பந்துகளின் எண்ணிக்கைய ஒட்டுமொத்த அணியே சேர்ந்தாலும் புடிக்க மாட்டேங்கறீங்களேய்யா.

அவனவன் ட்வென்டி ட்வென்டி மேட்ச்ல கூட 200 அடிக்கிறான். நீங்க டெஸ்ட் மேட்ச்ல கூட ட்வென்டி ஓவர் ஆட மாட்டேங்கறீங்களே. தோனி மாதிரி ஒரு பேட்ஸ்மேன் இல்லன்னு சொன்னாத்தான்டா அது வெகுமானம். ஆனா தோனிய தவிர அணியில வேற பேட்ஸ்மேனே இல்லன்னு வெளிய தெரியறது அவமானம்.

டியோடரன்ட் விளம்பரத்துல இருந்து டயாபர் விளம்பரம் வரை நடிக்கிறீங்கல்ல? அந்த நேரத்துல, பயிற்சில கொஞ்சம் பேட்ட புடிச்சிருந்தா, மேட்ச்ல ரன் அடிச்சிருக்கலாமேடா என் டோலாக்ப்பூர் மகாராஜாக்களா. காலைல டிபனுக்கும் மத்தியான லஞ்சுக்கும் இடைப்பட்ட நேரத்துல ஒட்டு மொத்த டீமும் டிஞ்ச் ஆகிடுறீங்களே, பேசாம சச்சின், டிராவிட், கும்ளே, லக்ஷ்மண்னு பழைய ஆளுங்களைக் கூப்பிட்டு விளையாட விட்டுறலாமா? இல்ல, இருக்கிற டீம் மெம்பர்கள்ல பாதிப் பேர தூக்கிட்டு சோட்டா பீம், சுக்கி, ராஜு, டோலு போலுவ விளையாட இறக்கி விட்டுறலாமா? சொல்லுங்கய்யா சொல்லுங்க!

கத்திரிக்காய், புடலங்காய், வெண்டைக்காய்னு காய்களில் இருக்கும் எண்ணிக்கைகளை விட வேலு பாய், பாட்சா பாய், ஜனா பாய், விஷ்வா பாய், இப்போ ராஜு பாய்னு தமிழ் சினிமா கண்ட பாய்களின் எண்ணிக்கை அதிகமா இருக்கு. தமிழகத்தில் இருக்கும் பலருக்கும் ராமாயண மான் கதை தெரியுதோ இல்லையோ... ஒவ்வொருவருக்கும் பல ‘டான்’ கதைகள் தெரியும். இப்படிப்பட்ட டான் கதைகளைப் பார்த்தீங்கன்னா, எல்லாமே ஒரே குண்டால கிண்டுன பிரியாணியாத்தான் இருக்கும். இன்னமும் சுருக்கமா சொல்லப் போனா, அதே டெய்லர்... அதே வாடகை. சரி, வாங்க இப்போ டான் கதை செய்வது எப்படின்னு பார்ப்போம்.

தேவையான பொருட்கள்: 40 அடியாள்களுடன் ஒரு பாஸு, ஹீரோயினா ஒரு லூஸு, நாலு ஃபாரீன் காரு, ரெண்டு ஏ.சி பாரு, ‘அண்ணா...’, ‘பாய்...’, ‘தல...’ன்னு கூப்பிட அல்லக்கைகள் நூறு, தனக்காக உயிரை விட நண்பர்கள் ஆறு, சுடுறதுக்கு துப்பாக்கிகள் அறுபது, தூக்கி எறிஞ்சு வெடிக்க வைக்க வெடிகுண்டுகள் இருபது, ஓப்பனிங்ல கெத்துப்பாட்டு ஒண்ணு, க்ளோஸிங்ல குத்துப்பாட்டு ஒண்ணு,

கோபம் வெறி 2 கிலோ, அடி உதை 4 கிலோ, பன்ச் டயலாக் 10 கிலோ, கடுப்பு காமெடி 3 கிலோ, ஹீரோவுக்கு கோட்டு சூட்டு கூலிங் கிளாஸ் தேவையான அளவு, ஹீரோயினுக்கு துணி குறைந்த அளவு, சப்பை ஃப்ளாஷ்பேக் ஒண்ணு, மொக்க ட்விஸ்ட் ரெண்டு, பழி வாங்கும் காட்சி 1, பார் காட்சி 4, உடைக்க கார் கண்ணாடி 10, பீர் பாட்டில் கண்ணாடி 5, மாறுவேஷ மரு 2, செல்போன் - வாக்கி டாக்கி 10.

செய்முறை:4 குயர் பேப்பரை எடுத்துக்கொள்ளவும். அதன் ஒவ்வொரு பக்கத்திலும் கண்ணாடியை உடைத்தும், துப்பாக்கி குண்டுகளை தூவியும், பஞ்ச் டயலாக்குகளை பரப்பியும் வைத்துக்கொள்ளவும். பத்து பக்கத்துக்கு ஒரு முறை ஹீரோயினுடன் ஒரு பாட்டை சொருகிக்கொள்ளவும்.

திரைக்கதை நோட்டின் முதல் பக்கத்திலும் கடைசி பக்கத்திலும் ஹீரோவுக்கு தனி பாடல்களை வைத்துக்கொள்ளவும். ஹீரோ வரும் சீன்களில் எல்லாம் பன்ச் டயலாக்குகளைக் கலந்து கோபம், வெறியைத் தூவிக்கொள்ளவும். மொக்கை ட்விஸ்ட் சீனை இடைவேளையில் சொருகிக்கொள்ளவும். அந்த மகா கேவலமான ஃப்ளாஷ்பேக்கை இடைவேளைக்குப் பிறகு சொருகிக்கொள்ளவும்.

கார் உருளுதல், பார் நொறுங்குதல் போன்ற காட்சிகளை க்ளைமாக்ஸுக்கு முன் வைத்துக்கொள்வது நல்லது. தொண்டர்கள் கும்பலாய் வந்து ஹீரோவை கோதாவுக்கு அழைக்கும் சீன் இருந்தால் வைத்துக்கொள்ளலாம், இல்லாட்டாலும் பரவாயில்லை. கோவம் வருகிற மாதிரியான காமெடிகளை ஹீரோவும் வில்லனுமே பார்த்துக்கொண்டாலும், முன்னணி மொக்கை ஒன்றைப் பிடித்து ஹீரோவின் அல்லக்கையாக மாட்டி விட வேண்டும்.

 இதைத் தவிர மேல சொல்லி கீழே விடுபட்ட பொருட்களை ஆங்காங்கே தூவி, கொத்திக் கிளறி இறக்கி வைத்தால், சுவையான டான் கதை ரெடி.டிப்ஸ்:என்னதான் சுவையான டான் பிரியாணி செஞ்சாலும், மேலே டீஸர், டிரெய்லர், பிரஸ் மீட் என கொத்தமல்லியை வைத்து அலங்காரம் செய்தால்தான், பிரியாணி வாசம் தூக்கும். ‘இந்தியா இந்து நாடு, இந்துத்துவா அதன் அடையாளம்’னு குருவிக்கூட்டுக்குள்ள குண்டு வைக்க நினைக்கும் போலி அரசியல்வாதிகள் அனைவருமே!