ஃபேஸ்புக் vs மாஸ்ஹீரோ... ட்விட்டர் vs டைரக்டர்



திகுதிகு தமிழ்சினிமா

இதை உச்சகட்டம் எனலாம். ‘கட்டை விரலும் வெட்டி நேரமும் இருப்பவர்கள் போடும் ரெண்டு வரி ஃபேஸ்புக் கமென்ட்தானே’ என இனியும் அசட்டை காட்ட முடியாது. ஒரு முன்னணி ஹீரோவையும் இயக்குநர் கம் புரொடியூசரையும் அவசர பிரஸ் மீட் கூட்டி ஆதங்கப்பட வைத்துவிட்டது சோஷியல் மீடியா. ‘‘ ‘அஞ்சான்’ படத்தைக் குறி வைத்துத் தாக்குகிறார்கள்’’ என இன்று சூர்யாவும் லிங்குசாமியும் சொல்லியிருப்பது இந்த ஒரு படம் பற்றிய புகார் அல்ல. பல காலமாக, பல ஹீரோக்கள், ‘சொல்லலாமா வேண்டாமா? ஊதினால் இது அணையுமா? கொழுந்துவிடுமா?’ என யோசித்து யோசித்துக் குழம்பிய சங்கதி இது.

‘‘கோடி கோடியாய் பணம் கொட்டி படம் எடுப்போமாம். இவங்க முதல் ஷோ பார்த்துட்டு, தியேட்டர் வாசல்லயே நின்னு ‘பார்த்துடாதே மாமா... படு போர்’னு ஆயிரம் ஃப்ரெண்ட் ஸை அலர்ட் பண்ணுவாங்களாம்!’’ எனக் கொதித்துக் கிடக்கிறது திரையுலகம். ஆனால், ‘‘இப்படி சூட்டோடு சூடாக நாங்கள் போடும் விமர்சனங்கள்தான் ஹீரோயிசம், பன்ச் டயலாக் இல்லாத, தரமான லோ பட்ஜெட் படங்களைத் தூக்கியும் விடுகிறது’’ என்கிறது ட்விட்டர், ஃபேஸ்புக், வாட்ஸப் தரப்பு. இந்தச் சூழல் ஆரோக்கியமானதா?

‘‘இதைத் தடுக்க முடியாதுங்க... இதுக்கு நாம யாரும் தயாராகிக்கல. அதனால தப்பா தெரியுது. இதே சினிமா ட்விட்டர், ஃபேஸ்புக் மூலமா விளம்பரம் தேடிக்குதில்ல. விளம்பரம் கிடைக்கும்போது விமர்சனம் மட்டும் வேணாம்னு சொல்ல முடியுமா?’’ என்கிறார் கேபிள் சங்கர். தனது வலைப்பதிவில் உடனுக்குடன் திரை விமர்சனங்களைப் பதிவிட்டே வி.ஐ.பியானவர் இவர். இணையத்தில் இவர் விமர்சனங்களுக்கென்று தனித்த ரசிகர்கள் இப்போதும் உண்டு. தற்போது, ‘தொட்டால் தொடரும்’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராகவும் மாறியிருக்கிறார். சோஷியல் மீடியா - சினிமா... இரண்டின் சார்பாகவும் நின்று பேசுகிறார் இவர்.

‘‘அந்தக் காலத்துல ஒரு படம் சிட்டிக்குள்ள அஞ்சாறு தியேட்டர்லதான் ரிலீஸாகும். அதுல ஒரு நாள் படம் பாக்குறவங்க எண்ணிக்கை மேக்ஸிமம் 20 ஆயிரம் இருக்குமா? ‘படம் நல்லா இல்லை’ன்னு அவங்க சொல்லி அது பரவுறதுக்குள்ள, அந்தப் படம் 25 நாள் ஓடிடும். அதே நிலைமையை இப்ப எதிர்பார்க்க முடியாது. சில நாள்லயே மொத்த கலெக்ஷனையும் அள்ளணும்னு இப்ப பெரிய படங்களை 600 ஸ்கிரீன்ல ரிலீஸ் பண்றாங்க.

மொத ஷோ முடிஞ்சு வெளிய வர்றவங்களே 20 ஆயிரத்துக்கு மேல இருப்பாங்க. முன்னல்லாம் தன் கருத்தை ஒருத்தன் சொல்லணும்னா டீக் கடை, சலூன் கடைதான் இருந்துச்சு. இப்போ, ஒவ்வொரு தனி மனுஷனும் ஒரு பத்திரிகைங்கற அளவுக்கு டெக்னாலஜி வளர்ந்தாச்சு. அன்னிக்கு மாதிரியேதான் ரசிகன் தன் கருத்தைச் சொல்றான். ஆனா, சொல்றவங்க எண்ணிக்கையும், அது போய்ச் சேருற வேகமும் ரொம்பப் பெருசு.

அதுக்காக எவ்வளவு பெரிய படத்தையும் ஃபேஸ்புக் மூலமா சாய்ச்சிடலாம்னு அர்த்தமில்ல. உதாரணத்துக்கு சமீபத்துல வந்த ‘மஞ்சப்பை’ படம், சோஷியல் மீடியாவில் எந்த நல்ல பெயரையும் எடுக்கலை. ஆனா, ஓடுச்சே! சோஷியல் மீடியா விமர்சனங்கள் மட்டுமே ஒரு படத்தோட தோல்விக்குக் காரணமாகிட முடியாது. அது ஒரு தாக்கத்தைத் தரும்... அதைத் தவிர்க்க முடியாது.’’ என்கிறார் அவர் அழுத்தமாக! இன்றைய சோஷியல் மீடியா மீது சினிமா சார்ந்தவர்கள் அடுக்கும் புகார்கள் ரொம்பப் பெரிது.

* ‘நல்ல சினிமா’ என லோ பட்ஜெட் படங்களைத் தூக்கி விடுவது...
* பெரிய பட்ஜெட் படங்கள்... அதிலும் ஹீரோ படங்கள் என்றாலே அரை மனதாய்ப் பார்ப்பது...
* ‘சென்டிமென்ட், ஹீரோயிசம் என்றாலே அது பட்டிக்காட்டான்கள் ரசிப்பது’ என்பது மாதிரி ஒரு பிம்பம் ஏற்படுத்தி வைத்திருப்பது...
* கருத்து என்று எதைச் சொன்னாலும் அதற்கு எதிர் கருத்து வைத்து பிரச்னையைக் கிளப்புவது...

‘‘இதனால்தான், இன்றைக்கு வெறும் லோ பட்ஜெட் காமெடி படங்களே வந்துகொண்டிருக்கின்றன. அதிக நாள் ஓடி வசூலைக் குவிக்கும் மாஸ் ஹீரோக்களைத் திட்டமிட்டு கிண்டலடிக்கிறார்கள். ஹீரோ என்ற கான்செப்ட்டையே ஓரம் கட்டப் பார்க்கிறார்கள்’’ எனப் புலம்புகிறது சினிமா வட்டாரம்.

‘‘ஆமா, சார்... சினிமாவைப் பத்தி அதிகம் தெரிஞ்சவன் வெளிய இருக்கான். வாய்ப்பு இல்லாமலும், காத்திருக்க திராணி இல்லாமலும், வேற ஃபீல்டைப் பார்த்துப் போனவன் அவன். சினிமாவுக்குள்ள இருந்துக்கிட்டு மொக்கை படம் எடுத்தா அவனுக்குக் கோவம் வராதா? முன்னாடி இப்படிப்பட்டவன் தனியா புலம்புவான்.

இப்ப சோஷியல் மீடியாவுல புலம்புறான்’’ என்கிறார் இளமாறன். யூ டியூபில் காட்டமான சினிமா விமர்சனங்களுக்குப் பெயர் போன இவரும் ஒரு சினிமாக்காரர்தான். டிஸ்ட்ரிப்யூட்டர், புரொடக்ஷன் மேனேஜர் எனப் பல முகங்கள் உண்டு இவருக்கு. எனவேதான் சினிமாவை உரிமையாக உலுக்குகிறார் மனிதர்...

‘‘ஹீரோக்களை யாராலும் அழிக்க முடியாது சார். ‘வேலையில்லா பட்டதாரி’ ஓடுதே... எப்படி? ரசிக்கிற மாதிரி ஹீரோயிசம் காட்டுங்க... மக்களும் ஏத்துக்குவாங்க; ட்விட்டர், ஃபேஸ்புக்கும் ஏத்துக்கும். சினிமாங்கறது பிஸினஸ்...

 அதுல ரிஸ்க் எடுக்கக் கூடாது. நல்ல படங்கள் எடுக்கறேன்னு இறங்குற ரிஸ்க் ரெண்டு கோடி ரூபாய் பட்ஜெட் வரைக்கும் ஓகே. அதுக்கு மேல போகக் கூடாது. உதாரணத்துக்கு, ஒன்றரை கோடியில ‘பீட்சா’ எடுத்த கார்த்திக் சுப்புராஜ் ஏன் ‘ஜிகர்தண்டா’வுக்கு 12 கோடி செலவு பண்ணினார். புது முயற்சிக்கெல்லாம் லோ பட்ஜெட்தான் சரி. மேல போயிட்டா மினிமம் கேரன்டியோட படம் எடுக்கணும். ஆனா, நல்லா எடுக்கணும்.

அதுக்காக காப்பி அடிக்கிறது குறுக்கு வழி. ‘நான் உன் வீட்டுக்கு சாப்பிட வந்தா நீ ஏன் சரவண பவன்ல வாங்கித் தர்றே? அதுக்கு நான் அங்கேயே சாப்பிட்டுக்குவேனே!’ இதனாலதான் காப்பியடிச்சு ஒரு படம் வெளி வந்த உடனே, அது எங்க இருந்து சுட்டதுன்னு சரியா எடுத்துப் போட்டுடறோம். நான் இல்லை... நேர்மையா நல்ல படம் எடுக்கச் சொல்லி என்னை விட இளைஞர்கள்தான் வெறியா இருக்காங்க.

அவங்க சாதாரணமானவங்கதான். ஆனா, சினிமாவைப் பத்தி அசாதாரணமா தெரிஞ்சி வச்சிருக்காங்க. ஒரு பாட்டைக் கூட நீங்க பாகிஸ்தானி ஆல்பத்தில் இருந்து உருவ முடியாது. சராசரி மனுஷங்க போடுற விமர்சனத்துக்கு எப்படிங்க இவ்வளவு மதிப்பு வந்துச்சு? ஏற்கனவே விமர்சனம் பண்றவங்க சரியில்ல... அதனால்தான். இருக்குற மீடியா எல்லாம் தைரியமா சினிமாக்களைப் போட்டு உடைச்சிருந்தா, இவங்க ஏன் வரப் போறாங்க? படம் ரிலீஸ் ஆன அன்னிக்கு சாயந்திரமே படக்குழு ‘சக்சஸ் மீட்’ வைக்கிறாங்க. அதுக்குள்ள தெரிஞ்சிடுமா ரிசல்ட்?

ஒரு பெரிய ஹீரோ கொடுத்த மோசமான தோல்விப்படம் அது. அது ஓடலைங்கறது காக்கா, குருவிக்கெல்லாம் கூடத் தெரியும். ஆனா அடுத்த நாள், ‘இப்படியொரு வெற்றிப் படம் கொடுத்ததற்காக அதே இயக்குநரோடு நடிகர் மீண்டும் இணைகிறார்’னு நியூஸ் போடறாங்க. சினிமா எடுக்குறவங்களைப் பொறுத்தவரை அவங்க படம் ஜெயிச்சிடுச்சு. இதைத்தான் ஊடகங்கள் மூலமா சொல்லிக்கிறாங்க. சொல்லலைன்னா அவங்களுக்கு அடுத்த படம் கிடைக்காது. இடையில மக்கள்தான் முட்டாளா? இவங்க வீட்ல அடிச்ச கமென்ட்டைத்தான் இப்போ சமூக ஊடகங்கள்ல அடிக்க ஆரம்பிச்சிருக்காங்க. ‘தசாவதாரம்’ கமல் சொல்ற மாதிரி, ‘இது ஊர் வாய்... மூட முடியாது’!’’

நவநீதன்