நஸ்ரியாவுக்கு நிக்காஹ்!



லைவ் கவரேஜ்

மலையாள சினிமாவின் ‘மோஸ்ட் எலிஜிபிள் பேச்சிலர்’ பஹத் பாசில், குழந்தைத்தனம் மாறாத நடிப்பால் கவர்ந்த நஸ்ரியா... திருவனந்தபுரத்தில் நடந்த இவர்கள்திருமணத்தில் செல்லுலாய்ட் செலிப்ரிட்டிகள் அத்தனை பேரையும் கண்குளிரக் காணும் ஆசையுடன் வந்த ரசிகர்களுக்கு ஏமாற்றம்தான். திருமணம் நடந்த கழக்கூட்டத்திலுள்ள பிரமாண்டமான அல்சாஜ் மண்டபத்தின் வாசல் தாண்டி அழைப்பிதழ் உள்ளவர்களுக்கு மட்டுமே அனுமதி. 

நிருபர்களுக்கும் அனுமதி இல்லை என பஹத்தின் தந்தையும், டைரக்டருமான பாசில் 2 நாட்களுக்கு முன்பே சொல்லி விட்டார். ‘‘உங்களுக்கு சிரமம் வேண்டாம். தேவையான போட்டோ, வீடியோவை நாங்களே தருகிறோம்.

கண்டிப்பாக வந்துதான் தீரவேண்டுமென்றால், மண்டபத்தில் ஒரு தனி அறையில் காத்திருங்கள். நிக்காஹ் முடிந்ததும் மணமக்கள் இருவரும் உங்கள் முன் சிறிது நேரம் வந்து நிற்பார்கள். அப்போது போட்டோ, வீடியோ எடுத்துக் கொள்ளுங்கள்’’ என்று சொல்லப்பட்டது.

தன் திருமணத்துக்கு டிரஸ் மற்றும் காஸ்மெடிக் அயிட்டங்கள் வாங்குவதற்காக நஸ்ரியா துபாய் சென்று வந்தார். திருமண ஆடை பிரத்யேகமாக ஃபேஷன் டிஸைனர் சப்யசாச்சி முகர்ஜி வடிவமைத்தது. ஆரஞ்சு வண்ணத்தில் ஜரிகை வேலைப்பாடு கொண்ட சுருள் ஸ்கர்ட், கறுப்பு உடையில் பொன்னிற எம்பிராய்டரி செய்யப்பட்டிருந்த டாப்ஸ் என தேவதையாக அந்தத் திருமண உடையில் காட்சி தந்தார் நஸ்ரியா.

திருமணத்துக்கு முன்பே பட்டர் சிக்கன், சிக்கன் ஸ்டீவ், பிரியாணி என கணவருக்குப் பிடித்த அயிட்டங்களை சமைக்கக் கற்றுக் கொண்டார் நஸ்ரியா. ஆலப்புழாவில் இருக்கும் பாசிலின் வீடு 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. திருமணத்துக்காக அந்த வீட்டில் ஏகப்பட்ட மாற்றங்கள் செய்யப்பட்டன.

ஆழ்ந்த கடவுள் நம்பிக்கையுள்ள நஸ்ரியா, தன் புகுந்த வீட்டில் ஒரு பிரார்த்தனை அறை வேண்டும் என ஆசைப்பட்டார். அவருக்காக அமைதியான பிரார்த்தனைக் கூடம் பிரத்யேகமாக ரெடி செய்யப்பட்டிருக்கிறது. திருமணம் முடிந்து ஐந்து நாட்கள் மட்டுமே பஹத்துக்கு ரெஸ்ட்! ‘மணி ரத்னம்’ படத்துக்காக உடனே ஷூட்டிங் போகிறார். டைரக்டர் மணி ரத்னம் படம் இல்லை; படத்தின் பெயர்தான் அது!   
 
- திருவனந்த புரத்திலிருந்து

ஏ.கே.அஜித்குமார்