இரவல்



பக்கத்து வீட்டினரின் இரவல் தொல்லை தாங்கவில்லை ரமேஷுக்கு. புதிதாக வந்தவர்கள், அரசு வேலையில் இருக்கிறார் என இரண்டு வார்த்தை பேசியது தப்பாகப் போய் விட்டது. காலை பேப்பரில் துவங்கி இரவு கொசுவர்த்தி சுருள் வரை இரவல் கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். அதையும் சரியாகத் திருப்பிக் கொடுத்தால் பரவாயில்லையே... காலையில் மடிப்பு கலையாமல் அவர்கள் வீட்டிற்கு போகும் செய்தித்தாள், சிங்கள வீரர்களிடம் சிக்கிய தமிழக மீனவன் போலக் கசங்கி திரும்பி வரும்.

போன வாரம் டூவீலரை இரவல் வாங்கிச் சென்றவர், திருப்பித் தரும்போது ஹெட் லைட் உடைந்திருந்தது. டி.வி.டி. பிளேயரில், பட்டனைக் கழற்றி தனியாகக் கொண்டு வந்து தந்தார்கள். ஆனாலும் குற்ற உணர்வே இல்லாமல் மறுநாள் வேறொரு பொருளை இரவல் கேட்க வருவார்கள். இதற்கு எப்படி முடிவு கட்டுவது என யோசித்தபோதுதான் ரமேஷின் மனைவி ஹேமா ஒரு யோசனை சொன்னாள்.

அதன்படி மறுநாள் பக்கத்து வீட்டில் மனைவி சொன்னதை அப்படியே சொன் னான் ரமேஷ். ‘‘சார், ஒரு பேங்க் லோனுக்காக அப்ளை பண்றேன். நீங்க ஜாமீன் கையெழுத்துப் போட்டுத் தந்தா நல்லா இருக்கும்!’’அப்போதைக்கு ‘சரி... சரி...’ என சமாளித்து அனுப்பி வைத்தார்கள். அதோடு அவர்கள் தொல்லை விட்டது.     
           
எஸ்.செல்வசுந்தரி