மனசு



வெள்ள நிவாரணப் பணிகளுக்காக ஆபீஸ்ல எல்லோர்கிட்டயும் பணம் கலெக்ட் பண்றோம். உங்களால முடிந்த உதவியை...’’ - ஹெட் கிளார்க் ராமானுஜம் பேசி முடிப்பதற்குள் எரிந்து விழுந்தான் சேதுபதி. ‘‘இப்படிப் பத்தாயிரம், இருபதாயிரம் கலெக்ட் பண்ணிக் கொடுத்தா, அவங்க பிரச்னையெல்லாம் சரியாயிடுமா?

இதெல்லாம் கடல்ல போட்ட பெருங்காயம். அதுவுமில்லாம, நமக்கே சம்பளம் போதாம கஷ்டப்படும்போது, இதெல்லாம் ஆடம்பரமா தெரியல? மாசக் கடைசியில தொல்லை பண்ணாதீங்க. போய் வேலையைப் பாருங்க சார்!’’அலுவலகம் முடிந்து, வீட்டிற்குள் நுழைந்த சேதுபதியை, ஆறாம் வகுப்பு படிக்கும் அவன் மகள் வர்ஷா ஓடி வந்து கட்டிக்கொண்டாள்.

‘‘டாடி, நீங்க தினமும் கொடுக்கிற பாக்கெட் மணியை நான் பத்திரமா சேர்த்து வச்சிட்டு வந்தேன். நேத்து கவுன்ட் பண்ணிப் பார்த்தப்போ, அதுல 800 ரூபாய் இருந்தது. அதை அப்படியே ஸ்கூல்ல கேட்ட வெள்ள நிவாரண நிதிக்குக் கொடுத்திட்டேன்.

சின்ன அமவுன்ட்தான்... ஆனா எல்லாரும் இப்படி சின்னச்சின்ன அமவுன்ட் கொடுத்தா, அது பெரிய அமவுன்ட் ஆகிடும் இல்லையா டாடி!’’
வர்ஷாவின் முகத்தை நேருக்கு நேர் பார்க்கத் திராணியில்லாமல், தலையைக் குனிந்து கொண்டான் சேதுபதி.   

ஜெ.கண்ணன்