துரோகத்தை சந்திக்கிற மனசின் கதை!



மீண்டும் விக்னேஷ்

‘‘எவ்வளவு காமெடி, சென்டிமென்ட், ஆக்ஷன் வந்தாலும் த்ரில்லருக்கு எப்பவும் ஒரு மரியாதை உண்டு. சீட் நுனியில் உட்கார்ந்து நகம் கடிச்சிக்கிட்டே படம் பார்க்கிறதில் மக்களுக்கு எப்பவும் ஒரு ஆசை. பிரமாதமா ஒரு சைக்காலஜிகல் த்ரில்லர் தமிழில் வந்து எவ்வளவு நாளாச்சு! இதோ இப்ப வரப்போகிறது ‘அவன் அவள்’. ரொம்பவும் என் ஆன்மாவைக் கொடுத்து, கஷ்டப்பட்டு எடுத்த படம். நிஜமா இந்த சினிமாவை நம்பி இருக்கிற நேரம் இது’’ - நிஜம் பேசுகிறார் நடிகர் விக்னேஷ். ‘சின்னத்தாயி’ படத்தில் அறிமுகமாகி, ‘சூரி’ வரை வந்து நிலை கொண்டவர்.

‘‘நீங்க திரும்பி வருவதற்கு ‘அவன் அவளில்’ என்ன இருக்கு?’’

‘‘பொதுவா த்ரில்லர்னா பயமுறுத்தும். பதறி நடுங்க வைக்கும். அப்படி இல்லாமல் ஒருத்தன் தன் மண வாழ்வில் சந்திக்கும் பெரிய துரோகத்தைச் சுற்றிச் சூழலும் கதை இது. மன உளைச்சலையும், துரோகத்தையும் சந்தித்தவன் வாழ்க்கையில் என்னவெல்லாம் நடக்கும்! ஆசை ஆசையா இருந்த மனைவியின் துரோகத்தை சந்திக்கிற மனசு எப்படியிருக்கும்? இன்னிக்கு பேப்பரைத் திறந்தால் ஒவ்வொரு பக்கத்திலும் இடம் பெறுகிற இந்த மாதிரி நடத்தைகளின் பின்னணி என்ன! இதனால் ஆதரவற்றுப் போகிற குழந்தைகளின் கதி என்ன... என ஆராயும் பயணம் இது. இந்த சினிமாவிற்காக திரைக்கதையில் அதிக கவனம் செலுத்தினோம். டைரக்டர் ராம்கிருஷ் மிரினாளி யின் கை வண்ணம் அப்படியிருந்தது.’’

‘‘இத்தனை நாள் எங்கே போயிருந்தீங்க?’’


‘‘உண்மை சொல்றேன். யாரும் எனக்கு வாய்ப்பு தரலை. ‘சேது’, ‘வண்ண வண்ணப் பூக்கள்’னு ஒவ்வொரு வெற்றிப் படத்திலும் நான்தான் இருந்திருக்க வேண்டியது. யாரையும் குற்றம் சொல்ல முடியாது. அப்படித்தான் அமைந்தது. ஆனாலும் சினிமாவை மறக்க முடியலை. பல தொழில்கள் செய்து வெற்றி பெற்றாலும், மனசு என்னவோ சினிமாவையே சுத்தி வந்தது. வீட்டில் பொண்டாட்டி, பிள்ளையிடம் பேசி நாலஞ்சு மாசமாச்சு. சந்தோஷமா இருக்கிறதை விட்டுட்டு சினிமா சினிமான்னு பித்துப் பிடிச்சு திரியிறதை அவங்களால் பொறுத்துக்க முடியலை.

இப்பக் கூட ஒரு பெரிய இடத்தை வித்துட்டுத்தான் இந்த முயற்சியில் இறங்கியிருக்கேன். இந்தப் படம் வெற்றியடைஞ்சா மூட்டையாய் பணத்தை அள்ளிட்டுப் போய் வீட்டில் வச்சுக்கப் போவது கிடையாது. அடுத்தடுத்து சினிமா தயாரிக்கிற எண்ணம் இருக்கு. பத்துப் பேருக்கு டைரக்டரா வாழ்க்கை கிடைச்சா, 200 பேருக்கு பலன் கிடைச்சா, நான் சந்தோஷப்படுவேன். நான் பெரிய நடிகன் கிடையாது. ஆனாலும், இந்த சினிமாவை நேசிச்சு வந்திருக்கேன். சினிமாவில் இருக்கணும் என்பதுதான் எனது தீராத கனவு. அந்த வகையில் ‘அவன் அவள்’ எனக்கு முக்கியமான படம்.’’‘‘இதில் செய்திருக்கிற புதுமைகள்...’’

‘‘அதிகமா கொடைக்கானலில், கொஞ்சமா சென்னையில் எடுத்த படம் இது. இதில் வருகிற நிறைய இடங்களில் எனது நடிப்பு உண்மையா இருந்தது. சின்ன வயதிலேயே எனது அப்பா, அம்மாவைத் தொலைச்சவன் நான். ரெண்டு பேரும் ஈகோவுக்கு அடிமையாகிப் பிரிஞ்சவங்க. இப்பவும் பழைய கடிதங்களை வச்சிக்கிட்டு, ‘மகாநதி’ கமல் மாதிரி என் அப்பா, அம்மாவைத் தேடித் திரியிறேன். கண்டுபிடிச்ச பாடில்லை. ரெண்டு மாசம் முன்னாடி வரைக்கும் கூட அந்தத் தேடுதல் நீடிச்சது. அப்படிப்பட்ட சொந்த சோகங்களும் இதில் எனக்கு உத்வேகமா இருந்தது. இயக்குநர் ராம்கிருஷ்ஷின் உழைப்பு, எனக்கு சந்தோஷமா இருந்தது. அவருக்கும் ஒரு வெற்றி வேண்டியதா இருக்கு. ஒரு நல்ல படைப்பை கொடுத்திட்டு, நியாயமான அங்கீகாரத்தை எதிர்நோக்கி இருக்கேன்!’’

‘‘பாடல்கள் எப்படியிருக்கும்?’’


‘‘கார்த்திக்ராஜாதான் மியூசிக். எனக்கு இன்னிக்கு வரைக்கும் நீங்காத ஆச்சரியம், அவருக்கான உயரம் கிடைக்காதது. பிரமாதமான பாடல்கள். ‘அதிகாலையில் சுப வேளையில்... மழைத் தூறல்கள் விழுகிறதே’ன்னு ஒரு பாடல் இருக்கு... அப்படியே காதில் மெலடி வந்து தங்கும். கேமராமேன் ரவி சீனிவாசன் தொழில்நுட்பத்தில் ரொம்பப் புதுசா கொண்டு வந்திருக்கார். ஒளிப்பதிவிலேயே ஒரு வகையான அழகை உருவாக்கியிருக்கார். ‘வால்மீகி’யில் நடிச்ச தேவிகாதான் ஹீரோயின். அவங்களும் திரும்ப வர வேண்டிய நேரம் இது. நாங்க எல்லாருமே மறுபடியும் நிரூபிக்க வேண்டிய இடத்தில் இருக்கோம்!’’

 நா.கதிர்வேலன்